அத்தியாயம் 04
காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும். நண்பனின் மாற்றத்தை சகிக்க முடியாமல் “நீ மனுசனே இல்லடா…” என்றான் தேஜா.
“அவுனு..நேனு ராக்ஷசுடினி!…” என்று இறுக்கமாகவே வீரேந்திரன் சொல்ல
அதற்கு மேல் என்ன சொல்ல முடியும் தேஜாவால், அவனே ஒத்துக் கொண்டான் அவன் ராட்சசன் என்று.
கார் நேராக வந்து நின்றது வீட்டிற்கு தான்.
“எனக்கு தெரியாம எங்கயாவது போகலாம்னு யோசனை இருந்தா அத உடனே அழிச்சிடு.. நீ யாருக்காக இவ்ளோ துடிக்கிறயோ அவங்களுக்கு தனக்கு எது வேணும் வேணாம்னு முடிவெடுக்க நல்லா தெரியும்..எந்தளவுக்குனா ஒருத்தனோட உணர்வுகள சிதைக்குற அளவுக்கு…”என்று இறுகிய குரலில், கண்கள் சிவக்க ரௌத்திரமாக கூறியவன், காரை விட்டு இறங்கி வேகமாக வீட்டினுள் நுழைந்து கொள்ள,
நண்பனின் ரணம் புரியாமல் இல்லை. ஆனால் இளவஞ்சி எதையும் தீவிரமாக யோசித்து செய்திருக்க மாட்டாள் என்று ஆணித்தரமாக நம்பினான் தேஜா. நேரில் பார்த்த இரு தினங்களில் அவளை பற்றி கணிக்கும் அவளவிற்கு புரிந்து கொண்டானா ஆச்சரியம் தான்.
என்ன இருந்தும் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் இளவஞ்சியை அப்படியே விட்டு வந்தது உறுத்திக் கொண்டே இருந்தது.
இழுத்து பெரும் மூச்சு ஒற்றை வெளியிட்டவன், வீட்டினுள் போக, அவன் முன்பு கருப்பு நிற ட்ராக் பேண்ட், வயலட் நிற மெல்லிய டீ ஷர்ட் அணிந்து கையில் பாஸ்கெட் பாலுடன் வந்தான் வீரேந்திரன்.
“குயிக்கா ட்ரெஸ் மாத்திட்டு வா! விளையாடலாம்…” என்று சொல்ல
அவனை சற்று ஆச்சரியமாக தான் பார்த்தான் இந்திரதேஜா. ஒரு பெண் அவனை தேடி வந்து, யாரும் இல்லாத அனாதை போல், மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றாள், அவளின் மீது கோபம் இருக்கலாம் அதற்காக துளியும் வருத்தம் இல்லாமல் இருக்க முடியுமா, இவன் மனிதன் தானா என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டவனுக்கு
அவன் மனமோ அவன் தான் ஏற்கனவே சொல்லி விட்டானே நான் அரக்கன் தான் என்று என எடுத்துக் கொடுக்க,
இடவலமாக தலையை ஆட்டிக் கொண்ட தேஜா “இரு வாரேன்…” என்றவன் தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு,
வீட்டின் பின் இருக்கும் பாஸ்கெட் பால் கோர்ட்டிற்கு வர, அந்த பாலை வெறித்தனமாக நிலத்தி அடித்து விளையாடிக் கொண்டிருந்தான் வீரேந்திரன்.
அவனது ஒவ்வொரு அடிக்கும், தாங்க முடியாமல் நிலம் கூட அதிர்ந்து அடங்கியது.
‘எதுக்கு இவ்வளவு கோபம்.. இவன் என்ன டிசைன்னே புரியல.. இந்த அமர் எப்ப வருவான்னு தெரியல.. உடனே வரச் சொல்லி ஃபோன் பண்ணனும், அப்போ தான் இவன சமாளிக்க முடியும்…’ என்று மனதில் நினைத்தவன்
“வீரா இரு!…” என்று அவனுடன் சென்று விளயாட, எங்கே தேஜாவின் கை பாலை தொடாத வண்ணம் மிகவும் லாவகமாக வெறித்தனமாக விளையாடினான் வீரேந்திரன்.
அவனுடன் போராடி சற்று களைத்து தான் போனான் தேஜா.
இருட்டும் வரை விளையாட்டு தொடர்ந்தது. இரவு சாப்பாட்டுக்கு லட்சுமி தேவி அவர்களை தேடி வந்து அழைக்கவும் தான் முடிவுக்கு வந்தது.
அதன் பின் இருவரும் குளித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.
வீரேந்திரன் சாதாரணமாக அவன் உணவில் கவனமாக இருக்க, தேஜாவால் தான் உணவை விழுங்க முடியவில்லை.
இளவஞ்சியின் நினைப்பு தொண்டையில் சிக்கி கொண்டது போலும், அவளுக்காக எடுத்த உணவை கொடுத்து விட்டு வந்திருந்தால் ஒரு சிறு திருப்தி இருந்திருக்குமோ.
பாலை குடிக்கவே அத்தனை அடம்பித்தாள். கெஞ்சி, அதட்டி தான் அதை குடிக்க வைத்தான். இப்போது சாப்பிட்டிருப்பாளா இல்லையா யோசனையாக இருந்தது.
அந்த கவலை வீரேந்திரனுக்கு எதுக்கு, நன்கு சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
இந்திரதேஜா தான் சரிவர சாப்பிட முடியாமல் பாதியிலயே எழுந்து தனது அறைக்கு வந்தவன், ஹாஸ்பிடலுக்கு அழைத்து இளவஞ்சியை பற்றி விசாரித்தான்.
அவள் இப்போது நன்றாக இருப்பதாகவும், சாப்பிட்டு விட்டு தூங்குவதாகவும் பதில் கிடைத்த பின்னர் தான் நிம்மதியாக படுக்கையில் விழுந்து தூங்க ஆரம்பித்தான்.
இங்கோ தன் அறையில் படுத்திருந்த வீரேந்திரன் எப்பவும் போல எழுந்து சென்று, மற்றைய அறையில் அந்த திரையின் முன்பு அமர்ந்து விட்டான்.
அந்த ஒரு பக்க சுவரின் அளவிலான திரையில் அவன் வஞ்சி. விழியை அசைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“நான் அரக்கனா?.. நான் இந்த அளவுக்கு மாறுனதுக்கு காரணம் நீதானே.. உன்ன காதலிக்கும் போது கூட இந்த அளவுக்கு பாத்ததில்லடி.. இப்போ கண்ணெடுக்காம பாக்குறேன்.. நிச்சயமா காதலால இல்ல.. நிச்சயமா காதலால இல்ல…” என்று பல்லை கடித்தவன் கை அருகில் இருந்த கண்ணாடி மேஜையை ஓங்கி குத்த, அது விரிசல் விட்டு உடைந்து அவன் கையை பதம் பார்த்தது.
கையில் வழியும் ரத்ததை கூட பொருட்படுத்தாமல் அப்படியே அவளை திரையில் பார்த்துக் கொண்டே இரவை கழித்தான்.
***********
அடுத்த நாள் எதுவும் நடக்காதது போன்று கைக்கு அவனாகவே மருந்து போட்டுக் கொண்டு அலுவலகம் செல்ல தயாராகி வந்தான்.
இந்திரதேஜா “என்னாச்சு?…” என்று கேட்டதுக்கு கூட பதில் இல்லை ஒரு காரப் பார்வை மட்டுமே.
“ரைட்டு விடு…” என்ற தேஜா வாயை மூடிக் கொண்டு அவனுடன் அலுவலகம் சென்றான்.
இருவரும் தனி அறையில் இருந்து அடுத்தடுத்து செய்ய வேண்டிய தொழில் திட்டங்களை பேசிக் கொண்டிருக்க, அந்த அறைக் கதவை வேகமாக திறந்து கொண்டு, அடித்து பிடித்து உள்ளே வந்தான் அமர்.
வீரேந்திரன் தேஜாவை போல் ஆறடி உயரத்தில் இருந்தாலும், வெண்ணெய் கட்டியில் செய்ததை போல் நிறமும் சற்று பூசிய தேகமும் என்று கண்ணில் கண்ணாடியும் அக்மார்க் அம்மாஞ்சி போல் இருந்தவன் அப்பாவி என்று நினைத்தால் அதுதான் இல்லை.
மலையை குடையும் எலி போல் இறுக்கமாக இருக்கும் வீரேந்திரனையே ஒற்றை கையில் கையாளும் அளவிற்கு சாமர்த்தியசாலி தான்.
என்னவொன்று அதற்காக அவன் வாங்கிய அடிகள் தான் சீன பெருஞ்சுவரில் உள்ள சடலங்களின் எண்ணிக்கையை கூட தாண்டி இருக்கலாம்.
வீரேந்திரனிடம் பி.எ வாக வேலைக்கு சேர்ந்தவன் தான், ஆனால் சில நாட்களிலேயே நெருங்கிய நண்பனாக மாறி விட்டான்.
உள்ளே வந்தவன் கண்ணுக்கு தேஜா மட்டும் தான் தெரிந்தான் போல “தேஜா வந்துட்டேன், வந்துட்டேன்.. வீராக்கு என்னாச்சு?.. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கான்?.. நீ ஏன்டா இங்க இருக்க? வா உடனே போகலாம்?…” என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக
தேஜா கண்களால் வீராவை காட்டி சைகை செய்யதை பக்கி கவனிக்கவில்லை.
‘எரும மாடு போட்டு குடுக்குறானே.. நான் ஆக்சிடன்ட்னு சொன்ன பொய்க்கு ஏத்த மாதிரி இவன் வேற கையில கட்டோட இருக்கான்…’
என்று உள்ளே நொந்து கொண்ட தேஜா
“அடேய் கொஞ்சம் மூச்சு விடுடா.. மொத்தமா நீ போய் சேந்துடாத…” என்றவன் அவன் நாடியைப் பற்றி வீரேந்திரனை காட்ட
“பாஸ்! வீரா!…” என்று அமர் கூச்சலிட
“ஏதாவது ஒன்ன சொல்லி கூப்பிடுடா…” என்று தன் கதை குடைந்தான் தேஜா.
அமர் காதில் அது ஏறினால் தானே, வீரேந்திரனை நெருங்கி அவனை எழுப்பி நிற்க வைத்தவன், “உனக்கு ஒன்னும் இல்லையே.. ஆக்சிடன்டாகி ஹாஸ்பிடல்ல இருக்க, உடனே கிளம்பி வானு இவன் ஃபோன் பண்ணுனான்…” என்று தேஜாவை மாட்டி விட
இருவரையும் முறைத்து விட்டு வீரேந்திரன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவன் கையில் இருந்த கட்டினை பார்த்து விட்டு “ஐயோ! அப்போ உண்ம தானா.. எவ்வளவு பெரிய அடி.. எப்படி ஆச்சு?…” என்று அமரும் விடாமல் கேட்க
‘அடங்க மாட்டான் போலயே.. ரெண்டு பிளாஸ்டர் ஒட்டி இருக்கான் இது எவ்ளோ பெரிய அடியா…’ என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டான் தேஜா.
“சொல்லு வீரா என்னாச்சு?…” என்று அவனின் தோளை உலுக்கிக் கொண்டிருக்க
வீரேந்திரனின் பொறுமை மிளகாய் காய போட போய் விட, அமரின் கையை பிடித்து மேஜையில் ஓங்கி அடித்தவன் “இப்படி தான் ஆச்சு…” என்று சொல்ல
“ஐயோ! அம்மாஆ!…” என்று கையை பிடித்துக் கொண்டவன் “கொலகார பாவி!…” என்று தேஜாவை தான் பார்த்தான்.
பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவன் தோளில் கையை போட்டு அழைத்துக் கொண்டு வெளியே வந்த தேஜா
“ஒரு அவசரத்துக்கு ஃபோன் போட்டு உடனே வாடானா, முடியவே முடியாது சென்னையில இருக்கிற காலேஜ் உன்ன நம்பித்தான் இருக்கிற மாதிரி சீன் போட்ட.. அதான் பொய் சொல்லி வர வெச்சேன்.. இத கூட புரிஞ்சுக்காம அவன் கிட்ட போய் வாய கொடுத்து இப்ப வாங்கி கட்டிக்கிட்டியா…” என்று கேட்க
அடிபட்ட கையை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்தவன் “நல்லவேள பெருசா சேதாரம் இல்ல.. இப்படியா மாட்டி விடுவ.. வீரா தானே சென்னையில இருக்கிற காலேஜ போய் பாத்துட்டு வர சொன்னான்.. அங்க போனா நிறைய வேலை, இந்த மூணு நாளா வேலைய முடிச்சுட்டு, கூடவே பொண்டாட்டிய கூட்டிட்டு போனேன், ரெண்டாவது தடவையா ஹனிமூன் முடிச்சிட்டு வரலாம் என்ற பிளான்ல இருந்தேன்.. அதான் நீ வர சொன்னது வரச் சொன்னதும் முடியாதுன்னு சொன்னேன்.. இப்படி பொய் சொல்லி வர வைக்க வேண்டிய அவசியம் என்னடா…” என்று அமர் கேட்க
இளவஞ்சி வீரேந்திரனை தேடி வந்ததிலிருந்து, நேற்று நடந்தது வரை தேஜா கூறி முடிக்க,
“ஓஹோ! சரி, இதுல நான் என்ன பண்ண முடியும்.. எதுக்குடா என் ஹனிமூன கெடுத்த…” என்று நொந்தவனாக அமர் கேட்க
“ ஏன்டா நானே அந்த பொண்ணுக்கு எந்த உதவியும் பண்ண முடியலன்னு எனக்கு உதவிக்கு உன்ன கூப்பிட்டா.. நீ ஹனிமூன் கொண்டாடலன்னு சலிச்சிக்கிற.. யாராச்சும் ஹனிமூனுக்கு சென்னைக்கு கூட்டிட்டு போவாங்களா?…” என்று தேஜா கேட்க
“நான் போவேன்டா, உனக்கு என்ன?.. சரி இப்ப என்ன நீ இளவஞ்சிய போய் பாக்கணும், அதுக்கு நான் வீராவ திச மாத்தணும் அவ்வளவு தானே…” என்று கேட்டவன் உள்ளே சென்று
“நான் இல்லனான எதையுமே நீ சரியா செய்றது இல்ல வீரா.. புதுசா வாங்குன ஸ்பின்னிங் மெஷின் சரியில்ல போய் பாருன்னு சொன்னேன் பாத்தியா?…” என்று வீரேந்திரனை கேட்க
“நீ பாக்குறதா சொன்னயே…” என்று புருவம் உயர்த்தி வீரேந்திரன் கேட்க
“அது.. நீ தான் உடனே சென்னைக்கு கிளம்ப சொன்னயே.. அந்த அவசரத்துல பாக்கல.. வா! போய் பாத்துட்டு வந்துடலாம்…” என்று அவனை கையோடு அழைத்துக் கொண்டு, தேஜாவிற்கு கண்ணை காட்டி விட்டு செல்ல
இந்திரதேஜாவும் இளவஞ்சியை பார்க்க செல்லலாம் என்று அலுவலகத்தில் இருந்து வெளியே வர,அவன் ஃபோனிற்கு அவளே அழைத்திருந்தாள்.
புது நம்பராக இருந்தாலும் அது அவளாக தான் இருக்க கூடும் என்று நம்பி “இளா!…” என்றான் எதிர்பார்ப்புடன்.
“தேஜா இளாதான்.. இப்போ நீங்க சொன்ன அட்ரஸ்ல தான் நிற்கிறேன்…” என்று சொல்ல
“இதோ டென் மினிட்ஸ், உடனே வாரேன்…” என்றவன் மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு வந்தான்.
காலையில் டாக்டர் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்ன பின்னர், மருத்துவமனையில் இருந்து தனியாவே ஹோட்டல் சென்று, தன் உடமைகளை எடுத்துக் கொண்டு தேஜா குடுத்திருந்த முகவரிக்கு வந்து விட்டாள்.
வாட்ச்மேன் கதவை திறந்து விட, உள்ளே வந்தவள் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் தேஜாவிற்கு அழைத்தாள். இதோ அவனும் சொன்னது போல் பத்து நிமிடங்களில் வந்து விட்டான்.
“ஹேய் எதுக்கு வெளிய உட்கார்ந்திருக்க…?” என்றவன்
வாட்ச்மேனிடம் “தீபா அக்கா எங்க? ஒரு பொண்ணு வரும் வீட்டு சாவிய குடுங்கனு சொன்னேன்ல…” என்று கேட்க
வாட்ச்மேனின் மனைவி தான் தீபா இருவரும் தான் வீட்டை பார்த்துக் கொள்கிறனர்.
“சார் தீபா கடைக்கு போயிருக்கா.. இப்போ வந்துடுவா…” என்று அவரும் சொல்ல
“ம்ம்…” என்றவன் அவனிடம் இருந்த சாவியை கொண்டு வீட்டின் முன் கதவை திறந்தவன்
“உள்ள வா இளா!…” என்று அழைக்க
“இது உங்க வீடா?…” என்று வியப்பாக கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் இளவஞ்சி.
“ம்ம் ஆமா.. நாங்க லண்டன்ல செட்டிலாகி அஞ்சு வருஷமாச்சு.. அதனால வீட்ட பாத்துக் ஆள் வச்சிருந்தோம்.. இப்போ ஒரு சின்ன வேலையா இங்க வந்தேன், வீராவோட அம்மா தனியா தங்க விடல, அதனால அவன் வீட்ட தான் நான் இருக்கேன்.. நீ இங்க தாராளமா தங்கலாம்…” என்று விளக்கம் குடுத்தவன்
ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்று “இந்த ரூம் உனக்கு வசதியா இருக்கும்.. இல்லன்னா இங்க உள்ள எந்த அறையில வேணும்னாலும் நீ தங்கிக்கலாம்…” என்று சொல்ல
அந்த அறையை சுற்றி பார்த்தவள் “சூப்பர்!.. நான் இங்கயே தங்கிக்கிறேன்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் தேஜா.. நீங்க இல்லனா என்னாகி இருப்பேனோ என்னவோ.. நான் தேடி வந்தது இந்தர, ஆனா நீங்க எனக்கு துணையா இருப்பீங்கனு நினைச்சும் பாக்கல…” என்று சொல்ல
“நீ எந்த காதலுக்காக இதெல்லாம் பண்றயோ, அதே காதலுக்காக தான் நானும் இதெல்லாம் பண்றேன்…” என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே தேஜா கூற
அவனை ஒரு நொடி உற்றுப் பாரத்தவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.
தேஜா இளவஞ்சியை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வெளியே தீபா “சார்!…” என்று அழைக்கும் குரல் கேட்டது.
“தீபா அக்கா வந்துட்டாங்க போல…” என்று அவளை வெளியே கூட்டி வந்தவன்
“அக்கா நான் சொன்ன பொண்ணு இவங்க தான்.. கூடவே இருந்து நல்லா பாத்துக்கோங்க…” என்று சொல்லி அவரிடம் இளவஞ்சியை அறிமுகபடுத்தி வைத்தவன்
அவரை சமைக்க சொல்லி விட்டு, இளவஞ்சியின் கையை பிடித்து அறைக்கு அழைத்து வந்தவன், கட்டிலில் அவளை அமர்த்தி “அவன சமாதானம் பண்றேன்னு இப்பவே கிளம்பிடாத.. நீ ரொம்ப டயர்டா தெரியுற.. படுத்து ரெஸ்ட் எடு.. ரெண்டு நாள் கழிச்சு நானே அவன் கூட பேச ஏதாவது ஐடியா இருக்கானு யோசிச்சு சொல்றேன்…” என்று அன்பாக சொன்னவன்
அறை கதவு வரை வந்து “டேக் கேர்!…” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு சென்று விட,
இளவஞ்சியும் யோசனையுடனே படுத்து தூங்கி விட்டாள்.
அன்றைய நாள் முழுவதும் அவளுக்கு அழைத்து, சாப்பிட்டாளா? மருந்துகள் எடுத்துக் கொண்டாளா? என்று அக்கறையுடன் கேட்டுக் கொண்டான் இந்திரதேஜா.
********
அடுத்த நாள் முழுதாக உடல் சரியாகவில்லை என்றாலும், அவளுக்கு நாட்களை தள்ளிப்போடும் அளவிற்கு கால அவகாசம் இல்லை. எனவே சோர்வாகவே எழுந்து, குளித்து தயாரானவள், வீரேந்திரனை தேடி அவனது அலுவலகம் வந்தாள்.
செக்யூரிட்டி எப்படியும் உள்ளே விட மாட்டான் என்பதை புரிந்து கொண்டவள், அவன் வெளியே வருவானா என்று காத்திருக்க, வீரேந்திரனும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து, அருகில் இருந்த தொழிற்சாலைக்குள் அமருடன் நுழைந்தான்.
அலுவலக வாயிலில் நின்ற செக்யூரிட்டிக்கு தானே இளவஞ்சியை தெரியும். தொழிற்சாலை வாயிலின் முன்பு காவல்காக நின்றவர்களுக்கு அவளை தெரியாது அல்லவா,
எனவே தனக்கு தெரிந்தவர் ஒருவர் உள்ளே வேலை செய்வதாகவும், அவரை பார்க்க வேண்டும் என்றும் இளவஞ்சி ஆங்கிலத்தில் கேட்க, அவர்களுக்கு அவள் கேட்டதில் பாதி தான் புரிந்தது.
அவளுக்கு தெலுங்கு வேறு தெரியாது, அவர்கள் திருப்பி கேட்ட கேள்விக்கு அவளால் பதிலும் சொல்ல முடியவில்லை.
இருந்தும் அவளின் தோற்றம் பெரிய இடத்துப் பெண் என்பதை உணர்த்த, முதலாளிக்கு தெரிந்தவளாக இருக்க கூடுமோ என்று உள்ளே விட்டுவிட்டனர்.
அமரோ கார்மெண்ட் தயாரிப்பு பிரிவின் முக்கிய உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்ததால், அன்று முழுவதும் உற்பத்தி நிறுத்தப்படும் அபாயம் என பொய் கூறித்தான் வீரேந்திரனை அழைத்து வந்திருந்தான்.
வீரேந்திரனை எப்படியாவது சமாளிக்க சொன்ன தேஜா தான் என் வேலை முடிந்தது, நீ அவனை விட்டு விடு என்று சொல்லவில்லையே. எனவேதான் அவனுக்கு உதவுவதாக நினைத்து இன்றும் வீரேந்திரனை தனியாக தள்ளிக் கொண்டு வந்திருந்தான்.
நேற்றைய தினமே பொய் கூறி கூட்டிக்கொண்டு சென்றவன், அங்கு அந்த மெஷின் நன்றாக வேலை செய்வதை பார்த்துவிட்டு, வீரேந்திரன் ஓங்கி அமரின் முதுகிலேயே ஒன்று வைத்து “என்னடா இது?…” என்று முறைத்து பார்த்து கேட்க
தன் முதுகை தடவிக் கொண்டவன் “ஆஆ ராட்சசா! எதுக்குடா அடிக்கிற?.. நான் தான் போற அவசரத்துல சரி பண்ணத மறந்துட்டேன் போல.. உங்கிட்ட ஆறு மாசம் பி.எவா வேலை செஞ்சப்போ கௌரவமாக இருந்தேன்.. ஆனா உன் கூட பிரெண்டான இந்த நாலு வருஷமா அடியும், உதையும், திட்டுமா என் பொழப்பு நாறிப்போச்சு…” என்று அழுது விடுபவன் போல் கூற
அவனுக்கு பதில் கூறும் ஆள் வீரேந்திரன் கிடையாதே, எனவே அவன் காரப்பார்வையை தளைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,
“என்னடா ரியாக்ஷன் இது.. லவ் ஃபெயிலியர்ன்னா இறுகி போய், பாக்கிறவங்களை எல்லாம் முறைச்சு எரிச்சு விடனும்னு யார் சொன்னா?…” என்று கேட்க
வீரேந்திரனோ கோபம் தலைக்கு ஏற “ஏய், நீ பிராணம் மீத ஆச உந்தா லேதா?…” என்று அமரின் கழுத்தைப் பிடித்து நெரிக்க
“ஐயோ விடுடா!.. கொன்னுடாத…” என்று திக்கி திணறி அமர் சொல்ல
அவனை உதறி தள்ளி விட்டு, கோபமாக வீரேந்திரன் செல்ல, அவன் பின்னோடு தொண்டையை தடவிக் கொண்டே வந்த அமர் “கோபம் வந்தா மட்டும் தான் தெலுங்கு வருமா? இல்ல கொஞ்சும் போதும் தெலுங்கு வருமா?…” என்று முணுமுணுத்தது வீரேந்திரனின் காதில் நன்றாகவே விழுந்தது.
ஒரு நொடி நடையை நிறுத்தியவன், பின் மேலும் உடலை இறுக்கிக் கொண்டு அவனைக் கூட விட்டு விட்டு வேகமாக சென்றுவிட்டான்.
இன்றும் பொய்யை சொல்லிக் கூட்டி வந்திருக்க, உடம்ப இரும்பாக்கிக்கடா என்பது போல் எப்போது வேண்டுமென்றாலும் தன் முதுகில் வீரேந்திரன் தாளம் தட்ட கூடும் என்பதால் அவன் பின்னே தான் சென்றான்.
அமர் கூறியது பொய்யாகவே இருந்தாலும், தொழிற்சாலையை அடிக்கடி சென்று பார்வையிடுவது வழக்கம் என்பதால் வீரேந்திரன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க,
எப்படியோ உள்ளே வந்த இளவஞ்சி அவனை கண்டு கொண்டு, “இந்தர்!…” என்று அழைத்தது தான் தாமதம்
உடல் விரைக்க, பல்லை கடித்து, கை விரல்களை இறுக பொத்தியவன் கையில் நரம்புகள் புடைத்து கிளம்பின. கண்கள் ரெத்த சிவப்பாகி அனலை கக்க, வெறி கொண்டு திரும்பியவன், திரும்பவும் இளவஞ்சி “இந்…” என்று அவன் பெயரை அழைக்கும் முன் அவள் மென்மையான கழுத்தை வன்மையாக இறுக பிடித்து
“இன்கோசாரி நன்னு இந்த்ரா அணி பிலிஸ்தே, நீ ப்ராணம் நீ சரீரான்னி விடிச்சிபோதுந்தி…” (இன்னொரு தடவை என்ன இந்தர்னு கூப்பிட்ட, உன் உசுரு உன் உடம்ப விட்டு போயிரும்) என்று ஆக்ரோஷமாக சொல்ல
இளவஞ்சிக்கு என்ன புரிந்ததோ “இல்ல.. இல்ல…” என்று திக்கி திணறி வலியுடன் சொன்னவள் கண்கள் கண்ணீரை கொட்ட தயாராக இருந்தது.
அமர் தான் “வீரா வேணாம், ஏதாவது ஆகிட போகுது…” என்று அவன் முதுகில் கைய வைத்து சொல்ல
அவனை திரும்பி வீரேந்திரன் பார்த்த பார்வையில் கையை தானாக எடுத்துக் கொண்டான்.
“உன் கிட்ட சொன்னேன்ல.. என் முன்னாடி வந்தா அது தான் உன்னோட கடைசி நாள்னு.. வந்ததும் இல்லாம என்ன நீ எப்படி அப்படி கூப்பிடலாம் ஹா…” என்று கர்ஜனையாக கேட்க
அவன் கர்ஜனையில் உடல் தூக்கி வாரி போட்டது இளவஞ்சிக்கு. ஒரு புறம் அவன் பிடி வேறு இறுகிக் கொண்டே போனது, கழுத்து நரம்புகள் இறுகி எழும்பு உடைந்து விடும் போல் வலித்தது, காய்ச்சலில் வந்த சோர்வு, வாய் கசப்பினால் சரியாக சாப்பிடாதது, இப்போது வீரேந்திரனின் பிடி என்று அனைத்தும் சேர்ந்து அவளை மூர்ச்சையாக்கும் போல் இருந்தது. இருந்தும் முயன்று தெம்பையும், தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டவள்
“வீரா.. நான்.. நான் சொல்றத கொஞ்சம்.. கே..கேளுங்க.. உங்க.. உங்க வஞ்சி…” என்று மேற்கொண்டு என்ன சொல்லி இருப்பாளோ
“ஹாஆஆஆ!…” என்று கத்தியவன் அவளை அப்படியே பிடித்து தூக்கி உதறி விட, சற்று தள்ளி விழுந்த இளவஞ்சி முழுமையாக மயக்கத்திற்கு சென்று விட்டாள்.
பரபரப்பாக உள்ளே வந்த தேஜா “இளா!…” என்று ஓடி வந்து அவளை தூக்கி கொண்டவன், அவள் கன்னம் தட்டி “இளா!.. இளா கண்ண திறம்மா…” என்று பதற
நண்பனையும் முறைத்து விட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான் வீரேந்திரன். அமர் வேறு வழியில்லாமல் அவனின் பின்பு ஓடினான்.
இந்திரதேஜா தான் இளவஞ்சியை தூக்கிக் கொண்டு, அங்கு இருந்த ஒரு அறையில் ஃசோபாவில் அவளை படுக்க வைத்தவன், தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, அப்போது தான் மெதுவாக கருமணிகளை உருட்டி விழி திறந்தாள்.
அப்போது தான் தேஜாவிற்கு மூச்சே வந்தது. அடி வயிற்றில் இருந்து மூச்சை இழுத்து விட்டு, தலையை கோதி தன்னை சரி செய்து கொண்டவன்
“என்ன இளா இது?…” என்று, மெதுவாக அவளின் தோள்களை பிடித்து எழுப்பி அமர வைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
தொண்டை வலி உயிர் போனது. வீரேந்திரன் தள்ளி விட்டதில் முதுகு வேறு வலித்தது. “தண்ணீ…” என்று சன்னமான குரலில் இளவஞ்சி கேட்க
“ச்சே” தன்னையே நொந்து கொண்டவன், அவளுக்கு நீரை அருந்த குடுக்க,
அதை வாங்கி மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் குடுத்தவளை பார்க்க வீரேந்திரன் மீது கோபம் கோபமாக வந்தது தேஜாவிற்கு.
“நான் தான் ரெண்டு நாள் போகட்டும்னு சொன்னேன்ல்ல.. உன்ன பாக்கலாம்னு வீட்டுக்கு போனா, நீ வெளிய கிளம்பி போயிட்டனு சொன்னாங்க.. எப்படியும் நீ வீராவ தான் தேடி வந்திருப்பனு தெரியும், அதான் வேகமா வந்தேன்.. அதுக்குள்ள அவன் கையால சாக துணிஞ்சிட்ட…” என்று கவலையும் ஆதங்கமுமாக சொல்ல
“நானும் ஒரு மாசத்துல எப்படியாவது இந்தர…” என்று சொல்ல வந்து “வீராவ சரி பண்ணிடலாம்னு தான் வந்தேன்.. ஆனா இப்போ எனக்கு அவ்வளவு டைம் இல்ல.. நான் தாமதிக்குற ஒவ்வொரு நாளும் அவர் வெறுக்குற அந்த காதல் அவர் கைய விட்டு போற வாய்ப்பு அதிகம்.. என் பேச்ச ஒரு நிமிஷம் கேட்டா போதும்.. அந்த தப்ப நான் தெரிஞ்சு செய்யல.. அவர் நேசிச்ச காதல இந்தளவு வெறுக்குற காரணமே சூழ்நிலை கைதியா அவரோட காதலி இருந்ததால தான்னு புரிஞ்சிடும்…” என்று இளவஞ்சியும் இயலாமையுடன் சொல்ல
“எனக்கு புரியுது.. ஆனா சுடசுட எதையும் சரி செய்ய முடியாது.. அவனோட காயம் கொஞ்சம் ஆறுனா தான் அவன் கிட்ட பேச முடியும்.. அவனோட பச்ச ரணத்த திரும்ப திரும்ப கீறி விட்டா இப்படி தான் மூர்க்கத்தனமா நடந்துப்பான்…” என்று நண்பனை பற்றி நன்கு தெரிந்தவனாக சொல்ல
“நான் தான் சென்னேனே…” என்று மேற்கொண்டு ஏன் இந்த அவசரம் என்று சில விஷயங்களை இளவஞ்சி விளக்கி சொல்ல, விழி விரித்து கேட்டுக் கொண்டிருந்த தேஜா
“இந்தளவுக்கு அவசரமா இருக்கும்னு நான் நினைக்கல.. சரி நாளைக்கு ரெஸ்டாரன்ட்ல ஒரு பிசினஸ் மீட்டிங் இருக்கு.. அது முடிய அப்படியே அங்கேயே லஞ்ச் முடிச்சுட்டு வார ஐடியா.. மீட்டிங் முடிய நான் உனக்கு கால் பண்றேன்.. நீயும் வா, எப்படியும் அங்க இந்த அளவுக்கு உன்னை இன்சல்ட் பண்ணவோ இல்ல உங்க கிட்ட கோபப்படவோ மாட்டான்.. எப்படியாவது ஒரு வரியில முதல்ல விஷயத்த சொல்லிடு.. அதுக்கப்புறம் விளக்கத்த கொடுத்துக்கலாம்…” என்று தேஜா கூற
“ம்ம், சரி…” என்றவளுக்கு அதற்கு மேல் முடியாமல் சோர்ந்து சோஃபாவில் தலையை சாய்த்துக் கொள்ள
“ரொம்ப முடியலயா?…” என்று ஆதூரமாக கேட்டவன் “வா!…” என்று அவள் கையை பிடித்து தூக்கியவன், கைத்தாங்கலாக அவளை அழைத்துக் கொண்டு வெளியேறி வீட்டில் விட்டு வந்தான்.
இவர்கள் ஒன்று நினைத்திருக்க இவர்கள் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனோ தன் உக்கிர முகத்தை இனி தான் வெளிப்படுத்த போகின்றான் என்பதை யார் சொல்வது.
நீ என்னவள் என்பதில் காதலனாக கர்வம் கொண்டேன்…
கணவனாக மார்தட்டிக் கொள்ள காத்திருந்தேன்…
ஆனால் இன்று வஞ்சி உன்னவள் என்று சொல்லக் கேட்டால் உக்கிர மூரத்தியாக மாறி நிற்கின்றேன்… காரணம் காதலை கொண்டு என் உணர்வுகளை நீ கருவருத்ததால்…