“டேய் யாருடா நீங்க?” என்ற பரந்தாமனுக்கு ஒன்றுமே ஓடவில்லை, ஏற்கனவே அஜூதியா தள்ளிவிட்டதில் வெறி பிடித்தது போல இருந்தவர், இப்பொழுது தன் முன் கடோத்கஜனை போல ஆஜானுபாகுவான தோற்றத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தவர்களைப் பார்த்து ஒருகணம் ஸ்தம்பித்துவிட்டார்.
“அது உனக்கு தேவை இல்லை, மத்யூ உன்கிட்ட கைமாத்தி விட்ட சரக்கு இப்போ எங்களுக்கு வேணும்” ராவணனின் பார்வை பரந்தாமன் மீது அழுத்தமாய் பதிந்திருக்க, சந்துரு பரந்தாமனிடம் கூறினான். அவ்வளவு தான் பரந்தாமனின் கோபம் எல்லையை கடந்துவிட்டது,
“என்ன சரக்க தரணுமா! டேய் வெளிய போங்க டா, கார்ட்ஸ் செக்யூரிட்டி” என்று கத்தியவர் ஆத்திரத்தில் வேகமாக வந்து ராவணன் நெஞ்சில் கரம் வைத்து அவனை வெளியே தள்ள, அடுத்த நொடி அவரது கரம் பட்ட தன் மேல் சட்டையை தட்டிவிட்டபடி, கீழே தன் கன்னத்தை பொத்திக்கொண்டு கிடந்த பரந்தாமனை பார்த்து,”என்ன ஹான்” என்று உறுமினான் ராவணன்.
ஏற்கனவே ராவணனின் ஒற்றை அறைக்கே ஆடிப்போன பரந்தாமன் அவனது,
“என்ன” என்ற அடிக்குரல் சீற்றத்தில் மொத்தமாக அடங்கிப்போக, எழுந்து நிற்க கூட தோன்றாமல் விழுந்த நிலையிலே அப்படியே கீழே கிடந்தார்.
பாத்ரூமில் இருந்த ஒரு டவலை எடுத்து தன் முதுகு பகுதியை மூடியபடி தன் மேனியில் போர்த்திக்கொண்ட அஜூதியா , அடுத்ததாக பாத்ரூம் வழியாக தப்பிக்க முடியுமா? ஏதும் வழி இருக்கின்றதா என்று முயற்சித்து பார்க்க அவளுக்கு எந்த வழியும் இல்லாது போகவும் பரந்தாமனை எண்ணி மிகவும் கலங்கியவள், எப்படி அவனிடம் இருந்து தப்பிச்செல்வது என்கின்ற பயத்தில் இருந்த நேரம், வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் தனக்கு ஏதும் உதவி கிடைக்குமா என்கின்ற ஆசையில் கடவுளை வேண்டிக்கொண்டு கதவை மெதுவாக திறந்து லேசாக எட்டிப்பார்த்தவள், ராவணன் பரந்தாமனை அடிக்கும் காட்சியை பார்த்து முதலில் கொஞ்சம் பயந்தாள் தான், ஆனால் மறுகணமே உண்மையாக மகிழ்ந்தாள்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்து கொண்டதுக்கு இந்த ஒரு அறை எல்லாம் பத்தாது என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது. இன்னும் அவன் பட வேண்டும் என்று தன் மனதிற்குள் எண்ணி கொண்டவளுக்கு ராவணனை பார்க்கும் பொழுது தெய்வமே தன்னை காப்பற்ற ஆள் அனுப்பியது போல தோன்ற, எப்படியாவது அவன் கையில் காலில் விழுந்தாவது இங்கு இருந்து தப்பித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
நடப்பதை கிரகித்துக்கொள்ளவே பரந்தாமனுக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுக்க, ஆக திட்டமிட்டு தன்னை வளைத்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டவர். தான் யார்? தன் உயரம் என்ன? என்று தெரிந்தும் தனது இடத்திற்கே வந்து, தன்னையே அடித்து கீழே தள்ளி, தன் முன்னே அதிகாரத்தோரணையுடன் நிற்கும் ராவணனை வெறிகொண்டு பார்த்தார்.
ராவணனும் பரந்தாமனை தான் பார்த்தான்! மிக மிக அழுத்தமாக தன் பார்வையை அவர் மீது பதித்து அவரது பார்வையில் தெரிந்த வெறியை உள்வாங்கியபடி, அவர் எதிரே இருந்த சோஃபாவில் அமர்த்தலாக வந்தமர்ந்தவன், தன் அருகே நின்றிருந்த சந்துருவிடம் பரந்தாமனை கண்காட்டினான்.
மறுநொடி பரந்தாமன் எழுந்து கொள்ள தன் கரத்தை சந்துரு நீட்ட, அவனை உக்கிரமாக பார்த்தபடி அவனது கரத்தை பிடித்து கொண்டு பரந்தாமன் எழுந்து நிற்க, அப்பொழுது தன் அருகே இருந்த ஒற்றை மர சோஃபாவை தன் காலால் இழுத்து அதை பரந்தாமனை நோக்கி மிதித்துத்தள்ளிய ராவணன் தனது இருக்கையில் நன்றாக தன் தலையை சாய்த்தபடி அமர்ந்து கொண்டு பரந்தாமனிடம் பார்வையாலே நாற்காலியை காட்டினான்.
அதாவது, ‘உட்கார்’ என்று தன் வார்த்தையால் அல்ல தந்து விழியால் கட்டளையிட்டான். பரந்தாமனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது, ஆனாலும் சூழ்நிலை தனக்கு சாதகமாக இல்லாததால் கோபத்தை காட்டி காரியத்தை கெடுக்க விரும்பாது, தன் வாயோரம் வழிந்த குருதியை துடைத்தபடி ராவணன் காட்டிய இருக்கையில் வந்தமர்ந்தவர்,
“சுத்தி வளச்சு பேச விரும்பல நேரடியாவே கேட்குறேன், எவ்வளவு வேணும்?” ‘வேண்டியதை கேட்டு வாங்கிக்கொண்டு வந்தவழியே ஓடு *****’ என்று தன் மனதில் எண்ணியதை சொல்லாமல், இல்லை இப்போதைக்கு சொல்ல முடியாமல் இவ்வாறு கூறினார்.
அதை கேட்டு முதலில் சத்தமாக சிரித்த ராவணன் பின்பு பரந்தாமனின் முகத்தை கூர்மையாக பார்த்து, “தூக்கி போடுற பணத்தை, வாங்கிட்டு ஓடு நாயேன்னு சொல்றியா பரந்தாமா” என்று நிறுத்தி நிதானமாக கேட்க, தன் மனதில் எண்ணியதை சரியாக கணித்து அவன் கூறியதில் அதிர்ந்தவர், தன் எதிரில் இருப்பவன் தான் நினைப்பது போல அல்ல, தன்னை விட ஆபத்தானவன், அவ்வளவு எளிதில் அவன் கண்ணில் மண்ணை தூவ முடியாது என்று நேரம் கடந்து அறிந்து கொண்டவர்,
“உனக்கு காண்ட்ராக்ட் கொடுத்த ஆளுங்க என்ன டீல் பேசினாங்கன்னு தெரியல, ஆனா நான் உனக்கு ஐம்பது சி தரேன், எவனும் உன்னை மாதிரி ஒரு அடியாளுக்குத் தராத டீல், நான் தரேன் பணத்தை வாங்கிட்டு போயிட்டே இரு” அதிகாரத்துடன் சொல்ல,
“நீ தர்றதெல்லாம் எனக்கு வேண்டாம், நான் கேட்குறதை குடு போயிட்டே இருக்கேன்”
“என்ன டா விளையாடுறியா? அதோட வேல்யூ தெரியுமா டா உனக்கு? ஒவ்வொன்னும் பல கோடி டா முட்டாள், பணம் வேணும்ன்னா கேளு, அதை விட ரெண்டு மடங்கு தரேன், வாங்கிட்டு போ” பரந்தாமனுக்கு எரிச்சல் வந்துவிட்டது, என்ன இவன் இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லியும் சரக்கு தான் வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறானே! என்ற கோபத்தில் கத்திவிட, உடனே “ஏய்” என்று சீறிய சந்துருவை தன் பார்வையாலே அடக்கிய ராவணன்,
“நீ என்ன என்கிட்ட டீல் பேசுறது? ஹான், உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு” என்றவன் சந்துருவை பார்க்க மறுகணம் பரந்தாமனின் கரத்தில் அலைபேசி திணிக்க பட்டது.
பின்பு, “உன் ஆளு அந்த ரத்தன பாண்டியனுக்கு கால் பண்ணு, ஒருமணிநேரம் டைம், அதுக்குள்ள மொத்த சரக்கும் என் வண்டியில இருந்திருக்கணும் இல்லைன்னு வை” என்று தன் முதுகில் சொருகியிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்த ராவணன்,
“இது என்ன, என் கைக்கு வந்தா என்னென்ன செய்யும்ன்னு உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்று ஆர்ப்பாட்டம் இல்லாது எச்சரிக்கை விடுக்க,
“தப்பு பண்ற டா நீ, உன்னை விடமாட்டேன், கொல்லுவேன்” என தோல்வியின் உச்சத்தில் இருந்த பரந்தாமன் சத்தமாக கத்த,
“முடிஞ்சா” என்று நிதானமாக சவால் விட்ட ராவணன் இகழ்ச்சியாக புன்னகைக்க, ஆத்திரத்தில் தன் முகம் சிவக்க அவனை முறைத்த பரந்தாமன், தன் ரத்தம் கொதிக்க ரத்தின பாண்டியனுக்கு விடீயோ கால் மூலமாக அழைப்பு விடுத்தார்.
!!!!!!!!
“என்ன அண்ணன் சொல்றீங்க ஒருத்தன் தான் இருக்கான் அவனை நான் பார்த்துகிறேன்” என்று ரத்தின பாண்டியன் தன் முன்னால் காரில் சாய்ந்தபடி நின்றிருந்த தேவராஜை பார்த்து முறைத்தபடி பரந்தாமனிடம் சொல்ல,
“டேய் என் நெத்தியில துப்பாக்கி வச்சிருக்கான், சொன்னதை செய் ஒருமணிநேரத்துல சரக்கை அவன் சொல்ற வண்டியில ஏத்து” என பல்லைக்கடித்தபடி பரந்தாமன் கட்டளை விதிக்க, கண்டெயினரில் ஏற்ற பட்ட அத்தனை சரக்கும் ராவணனிடம் கைமாற்றப்பட்டது.
சரக்கு கிடைத்தும் சற்று தூரம் அங்கிருந்து தள்ளி வந்த தேவராஜ் சந்துருவுக்கு தகவல் சொல்ல, சந்துருவின் பார்வையில் இருந்தே விடயத்தை புரிந்து கொண்ட ராவணன் துப்பாக்கியை தன் முதுகில் சொருகியபடி அங்கிருந்து செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைத்தபொழுது, பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வேகமாக வந்த அஜூதியா ராவணனின் வலிய கரத்தை உறுதியாக பிடித்திருந்தாள்.
அஜூதியா இருந்த கோலம் கண்டு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட சந்துரு திடுக்கிட, ராவணனின் கண்கள் கனலென தகித்தது.
“சார் ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க, இந்த ஆள் என்கிட்ட தப்பா நடக்க பார்க்குறாரு, என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ் உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன் ப்ளீஸ்” என்ற அஜூத்தியா எதைப்பற்றியும் யோசிக்காது அவனது காலில் விழுந்து கெஞ்ச, அவன் அப்படியே சிலை போல நிற்கவும் எங்கே விட்டுவிட்டு போய்டுவானோ என அஞ்சியவள், “ப்ளீஸ் சார்” என்று மீண்டும் கெஞ்சினாள். ஆனால் அவன் அவளை பார்க்க கூட இல்லை அவன் பார்வை மொத்தமும் பரந்தாமன் மீது இருக்க, ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள சரக்கு கைவிட்டு போன கோவத்தில் இருந்த பரந்தாமன் அஜூதியா தப்பி செல்ல பார்ப்பதை கண்டு இன்னும் வெறியனாவர்,
“ஏய் இங்க வா டி” என்று கத்தியபடி அஜூதியாவின் பின்னந்தலை கூந்தலை கொத்தாக பற்றி இழுத்து தூக்கி நிறுத்தியவர்,
“ஏய் என்ன? கிளம்புங்க டா. அதான் சரக்கு வந்துருச்சுல கிளம்புங்க, உங்களுக்கு ஒருநாள் இருக்கு டா” என ராவணன் மற்றும் சந்துருவை பார்த்து கூறிய பரந்தாமன், அஜூதியாவின் கன்னத்தை வலிக்க பிடிக்க,
“சார் ப்ளீஸ்” என ராவணனை பார்த்து தன் கரம் நீட்டியப்படி கெஞ்சினாள். அவன் தன்னை காப்பற்றுவானா!? என்ற ஏக்கத்துடன் பெண்ணவள் அவனை பார்க்க, ம்ஹூம் இப்பொழுதும் அவன் அவளை பார்க்க வில்லை பரந்தாமனை மற்றும் தான் பார்த்து கொண்டிருந்தான்.
நிர்மலமான ராவணனின் முகம் அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க மறுக்க, அவன் என்ன நினைக்கிறான் என்ன செய்ய போறான் என சந்துருவுக்கே கணிக்க முடியாது போக, அஜூதியா பயந்தேவிட்டாள். சற்று நேரத்திற்கு முன்பு வரை ராவணனை தன்னை ரச்சிக்க வந்த தேவனாக எண்ணி நம்பிக்கையுடன் இருந்தவள், இப்பொழுது அவனது உணர்வுகளற்ற முகம் கண்டு அவன் தன்னை காப்பற்றுவான் என்கிற நம்பிக்கையை மொத்தமாக இழந்திருந்தவள், பயத்தில் கண்ணீர் வடிய தன் கண்களை மூடி அப்படியே நின்ற நொடி, அஜூதியாவின் மெல்லிய கரங்கள் ராவணனின் வலிய கரங்களுக்குள் சிறைப்பட்டது.
அப்பொழுது பெண்ணவள் சட்டென்று கண்களை திறந்து பார்த்தாள், இந்த முறை அவனும் அவளை தான் பார்த்தான். அவனது பார்வை அவளை ஆழ துளைத்து அவளுக்குள் எதையோ கடத்திக்கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் உணர்ந்து, புரிந்துகொள்ளும் நிலையிலா அவள் இருந்தாள்? தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தவளுக்கு வேரெதுவும் கருத்தில் பதியவில்லை.
எனவே அவள் அசையாமல் அவனை பார்த்தபடி நிற்க, தன் கரத்திற்குள் இருக்கும் அவளது கரத்திற்கு அழுத்தம் கொடுத்தவன், “வா” என்பது போல தன் கண்ணையசைத்து அவளது கரத்தை பிடித்திழுத்து கொண்டு நடக்க, பரந்தாமனின் கரம் அஜூதியாவின் கரத்தை விடாமல் பிடித்திருக்க, அவன் பிடியில் இருந்த தன் கரத்தை விடுவிப்பதற்காக பெண்ணவள் கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தபொழுது, தன் உடம்பில் தோட்டாபாய பரந்தாமன் தரையில் விழுந்தார்.