அத்தியாயம் 9
மோகினிக்கு கடுப்பாக இருந்தது…
ஆனால் இவர்களை சமாளிக்க வேறு வழி இல்லையே…
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே அப்படியே அமர்ந்து இருக்க, அவள் கன்னத்தில் மஞ்சள் பூச வந்தார் மீனாட்சி…
“இதெல்லாம் வேணாம்” என்று அவள் முகத்தை விலக்கிக் கொள்ள, “அட இதெல்லாம் இல்லாம எப்படி?” என்று கேட்ட மீனாட்சி, அவளுக்கு மஞ்சள் பூசி விட்டு தான் விலகினார்.
அதனை தொடர்ந்து, கண்ணாடி வளையல்களையம் போட்டார். அதனை தொடர்ந்து எல்லாரும் அதையே செய்ய, மோகினிக்கு எப்போது தன்னை விடுதலை செய்வார்கள் என்கின்ற எண்ணம் தான்…
பற்களை கடித்துக் கொண்டே அமர்ந்து இருந்தார்…
எல்லாம் முடிய, பெண்கள் எல்லாம் சேர்ந்து குரவை வேறு போட்டார்கள்.
கடுப்பாகி விட்டது அவளுக்கு…
“இது போலீஸ் ஸ்டேஷனா இல்லை வேற எதுவுமா?” என்று திட்டிக் கொண்டே எழுந்தவளோ, ராஜதுரையிடம், “ஆசைக்கு வளைகாப்பு பண்ணிட்டிங்க தானே, கிளம்புங்க” என்று சொல்ல, அவரோ, “ரொம்ப தான் மா துள்ளுற, அவன் ரிலீஸ் ஆன அப்புறம் இருக்கு” என்று ஒரு மிரட்டலாக சொல்லி விட்டு நடக்க, “இப்போ எதுக்கு அந்த பொண்ண மிரட்டிட்டே இருக்கீங்க” என்று மீனாட்சி அவருக்கு திட்டினார்.
“ஆமா அப்படியே அவ பயந்துடுவா பாரு” என்று ராஜதுரை சொல்லிக் கொண்டார்…
இதே சமயம், இரு நாட்கள் கழித்து ராவணனை ஜெயிலில் பார்க்க சென்று இருந்தான் ஜெகன்…
அங்கே வந்த ராவணனோ, “ம்ம் சொல்லுடா’ என்று சொல்ல, ஜெகன் தனது அலைபேசியை தூக்கி அதில் இருந்த வளைகாப்பு புகைப்படத்தை காட்டினான்.
அதனை ஆழ்ந்து பார்த்து விட்டு, “அவ என்னை தூக்கி உள்ள வைப்பா, அவளுக்கு நீங்க எல்லாரும் வளைகாப்பு கொண்டாடிட்டு இருக்கீங்களா?” என்று கேட்க, “உன் குழந்தை டா” என்றான் ஜெகன்.
“அது தெரியுது… ஆனா ஒன்னு டா, அவளை நான் சும்மா விட போறதே இல்ல” என்றான்.
ஜெகனோ, “உன்னோட கோபம் புரியுது… வெற்றிய பற்றி அவளுக்கு தெரிஞ்சிருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டான்னு நினைக்கிறன், ரொம்ப மோசம்லாம் இல்ல அவ” என்றான்.
“இந்த சப்போர்ட்டை தூக்கிட்டு என் கிட்ட வந்துடாதே” என்று சொன்ன ராவணனிடம், “நீ சேர்ந்து வாழணும்னு ஐயா ஆசைப்படுறார்” என்றான்.
ஜெகனை மேலிருந்து கீழ் பார்த்தவன், “அவ கூடவா? உலகம் அழிஞ்சிடும் பார்த்துக்கோ” என்று சொன்னவன், திரும்பி நடக்க, “டேய் எங்கடா போற,?” என்று சத்தமாக கேட்டான் ஜெகன்…
ராவணன் திரும்பி கூட பார்க்கவில்லை…
மோகினியை பற்றி பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் ஜெகனுக்கு தெரிந்தது…
‘இதுக்கே இப்படின்னா வெளிய வந்து என்ன எல்லாம் ஆக போகுதோ?’ என்று புலம்பிக் கொண்டு தான் ஜெகன் கிளம்பி இருந்தான்…
இதனிடையே, நாட்களும் நகர, மோகினிக்கு பிரசவ நாளும் நெருங்கி இருந்தது…
வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்டு இருக்க, ரிஷியும் அங்கே தான் வேலை பார்த்ததால் அவளுக்கு உதவியாக தான் நின்று இருந்தான்…
பிரசவ அறைக்குள் சென்ற மோகினி… கத்தி கூப்பாடு எல்லாம் போடவில்லை…
பல்லை கடித்துக் கொண்டே வலியை தாங்கியவள், பெண் குழந்தையை பெற்று எடுத்தாள்.
“பெண் குழந்தை பிறந்து இருக்கும்மா” என்று சொல்ல, மென்மையாக புன்னகைத்தவளுக்கு மனம் எல்லாம் அப்படி ஒரு பரவசம்…
மனதில் ஏற்கனவே குழந்தைக்கு, “மந்தாகினி” என்று பெயர் நினைத்து வைத்து இருக்க, அதனையே பெயராகவும் வைத்து விட்டாள்…
ரிஷி தான் குழந்தையை தூக்கிக் கொண்டே வெளியே வர, அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி எடுத்த விசாலாட்சியோ, “மேம் எப்படி இருக்காங்க டா?” என்று கேட்டார்.
“அவங்க நல்லா இருக்காங்கம்மா, சத்தமே போடல” என்றான் ஆச்சரியமாக…
விசாலாட்சியோ, “அவங்க ரொம்ப ஸ்ட்ராங் டா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, “என்னம்மா பிறந்து இருக்கிறது பேரனா பேத்தியா?” என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே ராஜதுரை அங்கே வந்தார்…
விசாலாட்சியின் மனமோ, ‘ஐயையோ இவரா?’ என்று நினைத்தவர், “பேத்திங்க ஐயா” என்று சொல்ல, குழந்தையை வாங்கிக் கொண்டவரோ, “அப்படியே அவ அப்பா போல இருக்கா” என்றார்…
ரிஷியோ, “உடனே தெரியுதா என்ன?” என்று கேட்க, சட்டென ராஜதுரை அவனை ஏறிட்டு பார்க்க, விசாலாட்சி ரிஷியிடம், “டேய் சும்மா இருடா” என்றார்.
ராஜதுரை அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, “இது தான் பையனா?” என்று கேட்க, “ஆமாங்க ஐயா” என்றார் அவர்…
“வாயை ரொம்ப நீளம் போல” என்று சொன்ன ராஜதுரையோ குழந்தையை மீனாட்சியிடம் கொடுக்க, அவரும் வாங்கி தூக்கி இருக்க, அவர் அருகே நின்ற நீலாவோ, “அம்மா என் கிட்ட கொடுங்களேன்” என்றாள்.
நீலாவுக்கு இருபது வயது இருக்கும்…
அரிதாக தான் பேசுவதே…
எப்படி ராவணன், ஜெகன் ராஜதுரை வீட்டில் வளர்ந்தார்களோ, அப்படி தான், நீலாவும் இங்கே வந்து சேர்ந்தாள்…
குழந்தை என்றால் கொள்ளை பிரியம் போல அவளுக்கு…
குழந்தையை தூக்கியதுமே இதழ்களில் அழகான புன்னகை…
அவள் புன்னகையை எட்டி பார்த்த ராஜதுரை இதழ்களிலும் மென் புன்னகை தோன்றியது…
“நான் தான் உன் அத்தை வந்திருக்கேன் பாரு” என்று குழந்தையுடன் பேசவும் ஆரம்பிக்க, மீனாட்சியும், ராஜதுரையும் ஒருவரை ஒருவர் அர்த்தம் உள்ள பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
நீலாவுக்கு இப்படி எல்லாம் பேசவும் சிரிக்கவும் வரும் என்று இன்று தான் அவர்களுக்கே தெரியும்…
இதனிடையே விசாலாட்சியிடம், “குழந்தையை பார்த்துக்க, ஒத்தாசைக்கு யாரும் இருக்காங்களா என்ன?” என்று மீனாட்சி கேட்க, “நான் தான் பார்த்துக்கணும்” என்றார் அவர்…
“நீ வேலைக்கு கிளம்பிடுவ தானே, தனியா எப்படி அவ பார்த்துப்பா?” என்று கேட்ட மீனாட்சியிடம், “யாரையும் பார்க்கணும்” என்று சொல்ல, “நீலாவை அனுப்பட்டுமா என்ன?” என்று கேட்க, நீலா சட்டென ஏறிட்டு மீனாட்சியை பார்க்க அவரோ, “நீ நேரம் கிடக்கிற நேரம் போயிட்டு, வீட்டுக்குள்ள எவ்ளோ நாளைக்கு அடைஞ்சு இருக்க போற?” என்று கேட்டார்.
அவளுக்காக தான் மீனாட்சி அந்த இடத்திலேயே இந்த முடிவை எடுத்தது…
அவளுக்காக மட்டுமே…
அவளது சந்தோஷத்துக்காக மட்டுமே…
அவளும் மென் சிரிப்புடன், “சரிங்கம்மா” என்று சொல்லிக் கொண்டாள்…
மோகினிக்கு குழந்தை பிறந்த விஷயம், ராவணனுக்கு தெரிவிக்கப்பட்டது…
அவன், “ம்ம்” என்று மட்டும் கேட்டுக் கொண்டான்.
குழந்தையின் பெயரை சொன்னார்கள், அதனை கேட்டவனோ, ‘மோகினி, இப்போ மந்தாகினியா?’ என்று கேட்டவன், தலையை உலுக்கிக் கொள்ள, அவன் மனசாட்சியோ, ‘ராவணன் இருக்கும் போது மோகினி, மந்தாகினி எல்லாம் இருக்க கூடாதா?’ என்று அவனிடமே கேள்வி கேட்டது…
இதே சமயம், குழந்தையுடம் போலீஸ் குவாட்டர்ஸுக்கு வந்திருந்தாள் மோகினி…
அடுத்த நான்கு மாதங்களுக்கு பிரசவ விடுமுறை…
அதன் பிறகு வேலையில் சேர்ந்ததாக வேண்டும்…
வீட்டுக்கு வந்ததுமே, “உதவிக்கு யாரும் இருக்காங்களான்னு பாருங்க விசாலாட்சி” என்று தான் சொன்னாள்.
“ஐயா வீட்ல இருக்கிற பொண்ணு நீலா வர்றேன்னு சொன்னா மேம்” என்று சொல்ல, “ம்ம், எவ்ளோ பணம் கொடுக்கணும்னு பேசியாச்சா?” என்று கேட்க, “இல்ல மேம், அவ வேலைக்குன்னு வரல, பணம் வேணாம்னு சொல்லிட்டா” என்று சொல்ல, ஒரு யோசனையுடன், “ம்ம்” என்று சொல்லிக் கொண்டாள்.
அடுத்த நாளே நீலாவும் காலையில் கிளம்பி டிரைவருடன் காரில் ஏறி, மோகினியின் வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவாள்…
அவளுக்கு குழந்தை என்றால் இஷ்டம்…
அதுவும் ராவணனின் குழந்தை என்பதால் என்னவோ அதீத பாசம்…
இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்கும், காந்தா தனது மகனை தூக்கிக் கொண்டே குழந்தையை பார்க்க வந்திருந்தாள்.
மோகினியோ, “வா, எப்படி இருக்க?” என்று கேட்க, “உடம்பு சரி இல்லை, அதான் வரல” என்று சொன்ன காந்தவோ, “நீலா இங்கேயா இருக்க? என்ன சொல்றா பாப்பா” என்று குழந்தையை தூக்கி கொஞ்சியவளோ, “அண்ணன் கிட்ட காட்டலையா என்ன?” என்று மோகினியிடம் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை…
காந்தாவை வெட்டவா குத்தவா என்று தான் பார்த்தாள்.
காந்தவோ, ‘இவ பார்வையே சரி இல்ல’ என்று நினைத்தவள், “சும்மா கேட்டேன்” என்று சொல்லி சமாளித்துக் கொண்டாள்…
இப்படியே நாட்கள் நகர, மோகினி மற்றும் நீலாவுக்கு நடுவே நல்ல புரிதலுடன் கூடிய உறவு உருவாக ஆரம்பித்து இருந்தது…
கொஞ்சம் கொஞ்சமாக மோகினிக்கும் நீலாவை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து சேர்ந்தது…
“அம்மா அப்பா இல்லையா நீலா?” என்று கேட்க, அவளும் இல்லை என்று தலையாட்டினாள்.
மடியில் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு இருந்த மோகினியோ, “ஐயா வீட்ல எத்தனை வருஷமா இருக்க?” என்று கேட்க, “ஒன்னரை வருஷமா தான்” என்றாள்.
அவளை எப்போதும் மோகினி கவனித்து இருக்கின்றாள்.
குழந்தையை தூக்கும் போது புன்னகைப்பாள்.
மற்றும்படி எதையோ தொலைத்த போல தான் அவள் முகம் இருக்கும்…
அதனாலேயே அவளை ஆராய நினைத்தாள்.
போலீஸ் அல்லவா? துருவி விசாரிக்க தொடங்கி இருந்தாள்…
“அதுக்கு முதல் என்ன பண்ணுன?” என்று கேட்க, “அம்மா அப்பா சின்ன வயசில இறந்துட்டாங்க, வீடு வீடா போய் வேலை செய்வேன் அவ்ளோ தான்” என்றாள்.
கேட்டதற்கு நறுக்கென்று பதில் வந்தது…
“திடீர்னு எப்படி ஐயா கிட்ட வந்து சேர்ந்த?” என்று கேட்க, மோகினியை ஏறிட்டு பார்த்தவள், “நீங்க யாருக்காக எங்க அண்ணனை ஜெயில் ல போட்டிங்களோ, அவன் தான் காரணம்” என்றாள்.
வெற்றியை ‘அவன்’ என்கின்றாள், ஏதோ தவறாக பட்டது மோகினிக்கு…
“வெற்றியா?” என்று மோகினி கேட்க, “ம்ம்” என்றாள்…
மோகினியின் விழிகள் சுருங்க, “என்ன பண்ணுனான் வெற்றி?” என்று தான் கேட்டாள்…
நீலாவோ, “இத யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு ஐயா சொல்லி இருக்கார், ஆனா மனசு கேட்கல, உங்க கிட்ட சொல்றேன், அண்ணா வெற்றியை கொலை பண்ணுனது தப்பே இல்ல” என்றாள் நீலா.
மோகினியோ, “சரி என்னாச்சுன்னு சொல்லு” என்று நிதானத்தை இழுத்து பிடித்துக் கொண்டே கேட்க, நீலாவின் விழிகள் கலங்க, “அவன் வீட்லயும் தான் வேலை பார்த்தேன், ஒன்னரை வருஷம் முன்னாடி, இரவு எட்டு மணி இருக்கும், போலீஸ் தானேன்னு நம்பி வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு கிளம்ப போனேன்… அப்போ அவன் கிட்ட சொலல்லாம்னு அவன் ரூமை எட்டி பார்த்தேன், ஏதோ வெள்ளை நிற பவுடர் ஒன்னை வச்சு, சிகரெட்டால ஏதோ பண்ணிட்டு இருந்தான்” என்று சொல்ல, மோகினியின் விழிகள் விரிய, “ட்ரக்ஸ் ஆஹ்?” என்று கேட்டாள்.
“ம்ம், அப்படி தான் நினைக்கிறேன்… கொஞ்சம் பதட்டமா இருந்திச்சு… சார் கிளம்புறேன்னு சொல்லிட்டு, பார்க்காம நடந்தேன், கொஞ்ச தூரம் தான் போயிருப்பேன், அவனுக்கு அன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல, என்னை போக விடாம இழுத்து, ரூமுக்குள்ள தூக்கிட்டு போனான்” என்று சொல்லும் போதே, கண்ணீர் வழி அதனை துடைத்துக் கொண்டவளோ, “எனக்கு சுய உணர்வே இல்லை… கண் முழிக்கிற நேரம் ஹாஸ்பிடல் ல கிடந்தேன்… அப்புறம் தான் தெரிஞ்சுது, என்னை நாசமாக்கி சாக்கடைக்குள்ள போட்டிருக்கான்… ராவணன் அண்ணனும் ஜெகன் அண்ணனும் பார்த்து தான் என்னை ஹாஸ்பிடல் ல சேர்த்து இருக்காங்க, நான் கண் முழிச்சதும் போலீஸ் கிட்ட கம்பிளைன் கொடுக்க தான் நினச்சாங்க, ஆனா என்னை நாசமாக்குனதே போலீஸ் தான்னு தெரிஞ்சதும் ராவணன் அண்ணாவுக்கு தாங்கவே முடியல, எனக்காக தான் வெற்றியை கொன்னார், அவர் தாம் என்னை ஐயா கிட்ட சேர்த்து விட்டார்… இப்போ வரைக்கும் கவுன்சிலிங் போயிட்டு இருக்கேன், தூங்குறதுக்கு மாத்திரை போட்டுட்டு இருக்கேன்” என்று சொன்னவள், முகத்தை மூடி விம்மி அழ, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த மோகினியின் ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அவள் கரம் தானாக மேலேறி தனது கழுத்தில் கிடந்த வெற்றி கொடுத்த செயினை இழுத்து அறுத்தது…