ராவணா 20

“அஜூ இந்த ட்ரெஸ் எனக்கு நல்லா இருக்கா, அவரு தான் செலெக்ட் பண்ணினாரு. அப்புறம் உங்க எல்லாருக்கும் நான் கிஃப்ட் வாங்கியிருக்கேன். ஜானகி மாக்கு புடவை” என அதை எடுத்து அஜூதியாவின் கரங்களில் கொடுத்தவள், “எப்படி இருக்குன்னு சொல்லு டி, அப்புறம் இது மாரி அக்காக்கு, இது உனக்கு, இது இந்துக்கு ம்ம்ம் அப்புறம் இதெல்லாமே குழந்தைங்களுக்காக டாய்ஸ்” என இன்று திலிப் வாங்கி கொடுத்த பொருட்கள் அனைத்தையும் கட்டில் மேல் நிரப்பி, ஒவ்வொரு பொருளையும் தன் கையில் எடுத்து மகிழ்ச்சியுடன் அது யார் யாருக்காக வாங்கினது என்று கூறியவள்,  இறுதியாக ஒரு கவரை பிரித்து,

“இது என்னன்னு பார்த்தியா?” என்று சந்தோசம் பொங்க தன் கையில் இருந்த லேட்டஸ்ட் மாடல் அலைபேசியை காட்டி, “அவர் தான் வாங்கிக்கொடுத்தார் அஜூ, நல்லா இருக்கா? உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்” என்று அஜூதியாவின் முதுகில் ஒரு தட்டு தட்டி சொல்லவும் 

“ஹான்” என்று வேணியை அஜூதியா புரியாத பார்வை பார்க்க, “சரியா போச்சு, எல்லாருக்கும் வாங்கினது இதுல இருக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லு” என மலங்க மலங்க விழித்த அஜூதியாவை பார்த்தபடி சொன்ன வேணி, “உனக்கு என்ன ஆச்சு? நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டே இருக்கேன் நீ ஏதோ யோசனையிலேயே இருக்க. நல்லா இருக்கல்ல?” என்று அக்கறையுடன் கேட்க, “ம்ம் நல்லா தான் இருக்கேன்” என்று சொல்ல, அப்பொழுது தன் அலைபேசி ஒலிக்கவும் தொடுதிரையை பார்த்த வேணிக்கு,

“இனிமே இது எப்பவும் உன் கூடத்தான் இருக்கணும். வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன் நாம பேசலாம்” என்று திலிப் அலைபேசியை வாங்கி தன் கரத்தில் கொடுத்த பொழுது சொன்னது இப்பொழுது நினைவிற்கு வரவும் ஓடி சென்று கண்ணாடி முன்பு நின்று தன் சிகையை சரி செய்து, உடையை நேர்படுத்தியவள் , “ஏய் அஜூ அவரு தான் கால் பண்றாரு நான் பேசிட்டு வரேன், நீ எல்லாம் எப்படி இருக்குனு பாரு” என புத்துணர்ச்சியுடன் தன் அலைபேசியை எடுத்து கொண்டு தனது அறைக்கு சென்றாள் வேணி.

ஆனால் அதெல்லாம் அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே அவளது எண்ணமெல்லாம் தன்னவனை சுற்றியே இருக்க, சட்டென்று நினைவு வந்தவளாக தன் கைப்பையை திறந்து, ராவணன் அவசரத்தில் காரில் ஏறும் பொழுது தவறவிட்டு சென்ற அவனது வாலெட்டை எடுத்தவள் சிறு தயக்கத்துடன் அதை திறந்து பார்த்தாள்.

இரெண்டு மூன்று ஏடிஎம் கார்டுகள் உள்ளே இருக்க, “எப்படி இதை அவர் கிட்ட கொடுக்குறது?”என அவள் சிந்திக்கும் பொழுதே அவனது அடையாளட்டை அவளது விழிகளில் படவும், கண்கள் பளிச்சிட அதை மட்டும் தன் கையில் எடுத்தாள். 

பெயர், விலாசம் போக மிச்சம் இருந்த இடத்தில் வழமையான கருப்பு நிற வி நெக் டீஷர்ட் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் சிவந்த இதழில் அளவாக தவிழ்ந்த புன்னகை என அந்த சின்ன சிறிய புகைப்படத்திலும் ஆளை அசத்தும் அழகனாய் ராவணன் பெண்ணவளை வசீகரிக்க, “சிரிக்க எல்லாம் வர தான் செய்யுது, ஆனா என்கிட்ட மட்டும் அவ்வளவு கோபம், ஹம் கொஞ்சம் முரடன்  தான்!” என்று சலித்துக்கொண்டவள்,

“எப்போ தான் என்னை பார்த்து சிரிப்ப ஹான். இனிமே முறைச்ச அவ்வளவு தான் பார்த்துக்கோ? முரடன் முரடன்!” என போட்டோவை பார்த்து அடிப்பது போல செய்கை செய்தவள், பின்பு, “முறைச்சாலும் அழகு தான்”என்று புகைப்படத்திலே அவனது கன்னத்தை கிள்ளுவது போல பாவனை செய்து கொஞ்சு தீர்த்து, தன் இதழில் புன்னகை மலர அவனது நிழற்படத்திடம் மட்டும் காதல் பல பேசியவளுக்கு இன்று ராவணனை நேரில் சந்தித்ததே அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்க, அதே மகிழ்ச்சியுடன் தன் கருப்பு நிற டைரியை கையில் எடுத்தவள் நாற்காலியில் அமர்ந்து, தன்னவனின் முகத்தை மனதிற்குள் எண்ணிப்பார்த்தபடி அவன் மேல் தான் கொண்ட ஆழமான காதலை கவிதையாய் மாற்றினாள்!

இங்கே அவளது முரடனோ தனது சிந்தனையில் அடிக்கடி குறுக்கிட்டு, தன்னை வேலை செய்யவிடாமல் தன் கவனத்தை சிதறடிக்கும் அஜூதியாவின் எண்ணங்களை ஒதுக்கி தள்ள எவ்வளவோ முயன்றவன் அது முடியாமல் போகவும், மடிக்கணினியை மூடி தூக்கி எறியாத குறையாக ஓரமாக போட்டுவிட்டு இருக்கரங்களால் தன் தலையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கண்களை மூடினான்.

‘இது போன்ற மெல்லிய உணர்வுகளெல்லாம் உன் கொள்கைக்கு எதிரானது. தூக்கி போடு’ என தனக்கு தானே கூறி, திசை மாறி ஓட துடிக்கும் தன் மனதை கடினப்பட்டு கட்டியிழுத்து ஒருநிலைப்படுத்த முயற்சிதான். ஆனால் மனமோ மீண்டும் மீண்டும் அவளிடம் தான் செல்வேன் என குழந்தையாய் அடம் பிடிக்க, ‘நோ நோ’ என கத்தியவன் மனதை தன் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போட்டிருந்த ஆம்கட் பனியனை தலை வழியாக கழட்டி எறிந்துவிட்டு குளியல் அறையில் உள்ள ஷவரை திறந்து விட்டு சுவற்றில் இரு கரங்களை ஊன்றியபடி கொட்டும் குளிர்ந்த நீருக்கு அடியில் கண்களை மூடி நின்றிருந்தான். வெளியே குளிரெடுத்தாலும் அவனுள் அவள் மூட்டிய தீ மற்றும் குறையாமல் தகித்துக்கொண்டே இருக்க, இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்த பொழுதும் தன் உணர்வுகளை அடக்கி திடமாக இருந்த ராவணனால் அஜூதியா மூலம் தனக்குள் தட்டி எழுப்பப்படும் உணர்வுகளை அவ்வளவு எளிதாக கடந்து வந்துவிட முடியவில்லை. பெண்ணவளின் ஒவ்வொரு செய்கைகளிலும் ஆணவன் தடுமாறி கொண்டிருந்தான்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top