உணவு உண்ணும் வரை அஜூதியாவுடன் இருந்த ராவணன் அதன் பிறகு,
“கால் ரொம்ப வலிச்சா இதுல டேப்லெட் இருக்கு. நான் பக்கத்து ரூம்ல தான் இருப்பேன். எதுனாலும் என்கிட்ட கேளு. இப்போ ரெஸ்ட் எடு மா” என்று சொல்லவும், இவளுக்கோ சப்பென்று ஆனது.
பக்கத்திலேயே இரு என்று அவனது கையைப் பிடித்துக் கொள்ள ஆசையாகத்தான் இருந்தது. ஆனாலும் நானேதான் சொல்ல வேண்டுமா? ஏன் இவனுக்கு ஆசையே இல்லையா என்ன? சரியான டியூப்லைட்! என்று மனதிற்குள் ராவணனைத் திட்டிக் கொண்டவள்,
“ரெஸ்ட் தானே… அதுக்கென்ன? எடுத்துட்டா போச்சு. நீங்க வேணும்னா தாலாட்டு பாடுங்களேன்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளைப் பார்த்த ராவணனோ,
“பாடணுமா?” என்று கேட்கவும், அவனை முறைத்தவள்,
“ஒன்னும் வேண்டாம்” என்று கையெடுத்து கும்பிடவும், தன் இதழைக் கடித்துச் சிரிப்பை அடக்கிக் கொண்டவன், சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
“இவரை… ஐயோ!” என்று கடுப்புடன் சொன்னவளோ, அப்படியே கட்டிலில் தலையணையை அணைத்தபடி படுத்துக் கொண்டவள், உடல் அலுப்பில் அப்படியே உறங்கிவிட, அலைபேசியின் சிணுங்கலில் தான் கண் விழித்தாள்.
ராவணன் தான் அழைத்திருந்தான்.
மெல்லிய புன்னகையுடன் காதில் வைத்தவளோ, அவன் சொன்ன செய்தியில் முகம் மலர, வேகமாக எழுந்து உடைமாற்றும் அறைக்குச் சென்றாள்.
அங்கே அழகான சிவப்பு நிற புடவை கட்டிலில் இருக்க, அதனுடன் அவள் அணிந்துகொள்ள வேண்டிய அணிகலன்களும் இருந்தன.
புன்னகையோடு அவற்றைப் பார்த்தவளின் பார்வை, அருகில் இருந்த சிறிய இதய வடிவ அட்டையின் மீது விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தாள்.
“காத்துட்டு இருக்கேன் – இப்படிக்கு ராவணன்” அவ்வளவுதான் எழுதியிருந்தது.
அதற்கே சில்லென்ற உணர்வு உள்ளுக்குள் பரவியது.
“என்னவா இருக்கும்?” என்று யோசித்தவளோ, ஒருவித பரவசத்துடனே தயாராகிக் கொண்டிருக்க,
இங்கே ராவணனோ, அஜூதியாவிடம் அலைபேசியில் பேசிய பிறகு நிமிடத்திற்கு ஒருமுறை தன் கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னவனை முடிந்தளவு காக்க வைத்துவிட்டு, அவன் கொடுத்த சிவப்பு நிற ஸ்பேஸ் சில்க் புடவையை அணிந்து, மிதமான ஒப்பனையுடன், விரித்து விடப்பட்டிருந்த நீண்ட கூந்தலில் ஜாதி மல்லியைச் சூடியபடி, அவன் கொடுத்த கண்ணாடி வளையல்களைத் தன் கரங்களில் அணிந்தவாறே வந்தவளைப் பார்த்து மூச்சு விட மறந்தான் ராவணன்.
அதிலும் அவள் தன் புடவையை ஒற்றைத் தோளில் வழிய விட்டிருக்க, அவன் மொத்தமாக வீழ்ந்திருந்தான்.
புன்னகையுடனே அவன் அருகே வந்தவளோ, குனிந்து தன்னை ஒருகணம் பார்த்தபடி,
“எப்படி இருக்கேன்?” என்று எதிர்பார்ப்புடன் அவன் முகம் பார்க்க,
“ஹான்…” சும்மாவே வார்த்தை வராது. இதில் தன்னவளைப் புடவையில் கண்ட பிறகு மூச்சு விடவே மறந்து நிற்கிறான். போதாக்குறைக்கு அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை சரம் வேறு ஆழகாலவிஷம் அவனின் சுவாசத்திற்குள் கலந்து அவனை எங்கோ ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்ல இதில் அவன் எங்கிருந்து பேச?
தலையை மட்டும் ஆட்டிவைத்தான் ராவணன்.
இவள் பெரிதாக எதிர்பார்த்திருக்க, அவனோ தலையை மட்டும் ஆட்டியதில் சுணங்கியவள்,
‘ஒருவேளை நல்லா இல்லையோ…’ என்று தனக்குள்ளே சொன்னபடி,
“அவ்வளவு தானா?” என்று முகத்தைச் சுருக்கிக் கேட்டாள்.
“என்ன?” அவனது புரியாத பாவனையில்,
“அது… நீங்க எதுவுமே சொல்லல. நான் நல்லா இல்லையா? உங்களுக்கு புடிக்கலையா?” என்று அஜூதியா கவலையாகக் கேட்கவும்,
அஜூதியாவைப் பார்த்துக் கொண்டே அவளருகில் இன்னும் ஓர் அடி நெருங்கி வந்தவன், அவளைத் தலை முதல் கால் வரை ஒருமுறை பார்த்துவிட்டு, தன் குரலைச் செருமியபடி,
“என்ன சொல்லணும்?” என்று கேட்டான்.
“உங்களுக்குத் தோணுறதை சொல்லுங்க” என்றாள் அவள்.
அவள் முகத்திலோ எதிர்பார்ப்பு!
அவனுக்கோ பரிதவிப்பு!
அதுவும் அவளது கண்கள் வேறு அநியாயத்திற்கு அவனைப் படுத்தி எடுக்க,
“சொல்லித்தான் ஆகணுமா?” என்று மென்மையாகக் கேட்டான்.
“சொல்றதுல என்ன?” என்றபடி சட்டென்று அவன் முகம் பார்த்தாள்.
இது என்ன குரல்? இதற்கு முன் அவன் இப்படி பேசியதே இல்லையே! என்று எண்ணிக்கொண்டே அவன் விழிகளைப் பார்த்தவளுக்கு, அவன் பார்வையின் மாற்றம் ஏதோ செய்ய, மனம் படபடக்க நின்றிருந்தாள்.
அவனோ,
“சொல்லத் தெரியல” என்றான்.
அவளும்,
“பரவாயில்ல” என்ற நொடி, செயல் வீரன் அவனோ சட்டென்று குனிந்து அவளது கன்னத்தில் பட்டும் படாமல் தன் இதழை ஒற்றி எடுத்துவிட்டு,
“போலாமா?” என்று மெதுவாகக் கேட்க, அவளது தலை தானாக அசைந்தது.
அவனாகத் தரும் முதல் முத்தம், அவளது மனதிற்குள் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்திருக்க,
எதற்காக இந்த அலங்காரம்?
எங்கே அழைத்துச் செல்லப் போகிறான்?
இப்படி எதுவுமே தெரியாத போதிலும், ராவணன் அழைத்தான் என்ற ஒரே காரணத்திற்காக, அவனது கரங்களோடு தன் கரங்களை கோர்த்துக் கொண்டு நடந்தாள் அஜூதியா.
@@@@@
அவளது கரத்தைப் பற்றிக் கொண்ட ராவணன், அவளை கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாட்சிற்கு (சொகுசு படகு) அழைத்துச் சென்றான்.
படகை நெருங்கியதும் முதலில் ஏறியவன்,
“வா” என்று தன் கரத்தை நீட்டி அவள் உள்ளே வர உதவி செய்ய,
அவளுக்கோ புடவை அணிந்திருந்ததால் சற்று தடுமாற்றமாக இருக்கவும், யோசிக்கவே இல்லை. சட்டென்று படகிலிருந்து கீழே குதித்திறங்கியவன், அவள் சுதாரிப்பதற்குள் அவளது இடையைப் பற்றி அப்படியே தன் தலைக்கு மேல் தூக்கி உள்ளே இறக்கிவிட்டான்.
பின்பு படகைக் கட்டியிருந்த கயிற்றை எடுத்து படகுக்குள் போட்டுவிட்டு, தானும் படகில் ஏறினான்.
அதன் பிறகு நேரே கேபினுக்குள் சென்றவன், அங்கே இருந்த இருக்கையைச் சரி செய்து அவளை அமர வைத்துவிட்டு, படகை இயக்கினான்.
எஞ்சின் இயக்கப்பட்டதும், மெதுவாகக் கடலைக் கிழித்துக் கொண்டு படகு முன்னோக்கிச் செல்லத் தொடங்கியது.
ராவணனின் பத்து விரல்களும் அவளது இடையில் பதிந்த கணமே அவளது விழிகள் பெரிதாக விரிந்திருக்க, அடுத்தடுத்த அவனது செயல்களில் இன்னுமே வியப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
படகை செலுத்தியபடியே பக்கவாட்டாக அஜூதியாவைத் திரும்பிப் பார்த்த ராவணன்,
“என்னாச்சு?” என்று அவளது விரிந்த விழிகளைப் பார்த்துக் கேட்டான்.
“இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
அதற்கு புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், படகின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே செல்ல, பெண்ணவளின் கவனம் முழுவதும் அவளவனின் மீதே இருந்தது.
வழக்கமாக அணிந்திருக்கும் கருப்பு நிற ஷர்ட்டை அணிந்து, அதன் கைகளை முட்டி வரை மடக்கிவிட்டிருக்க,
தன் முன்னே இருக்கும் அலைகடலின் அழகு! பௌர்ணமி நிலவு! பனிவிழும் இரவு!
என எதையும் ரசிக்கத் தோன்றாது, அவனைத்தான் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அதுவும் இன்று அவன் கொடுத்த முத்தம் வேறு இப்பொழுது அவளது எண்ணத்தில் வந்து விட, அனிச்சையாகத் தன் கன்னத்தைத் தொட்டு பார்த்தவளுக்கோ மேனியெங்கும் ஒருவித சிலிர்ப்பு.
தாடையில் கையூன்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதுவரை அவனை ஒரு கடினமான மனிதனாக மட்டுமே பார்த்தவளுக்கு, இப்படி அமைதியாகக் கடலை ரசித்தபடி போட்டை ஓட்டிக் கொண்டிருந்த அவனது தோற்றம் புதிதாக இருந்தது.
முகத்தில் எப்பொழுதும் இருக்கும் இறுக்கம் இல்லை. ஒருவிதமாக வித்தியாசமாக இருந்தான்.
அஜூதியாவின் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்தவன், பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்து,
“என்ன?” என்று ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்திக் கேட்டான்.
அவளோ,
‘ஒன்னுமில்ல’ என்பதாய் இடவலமாகத் தலையை மட்டும் அசைத்தவள், வெட்கத்துடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
அவன் இதழ்களிலும் சிறு புன்னகை மலர்ந்தது.
சில நிமிடங்கள் பயணித்த பிறகு, சுற்றிலும் எந்தப் படகும் இல்லாத அமைதியான கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்தவன், படகின் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தான்.
கடலின் அலைகள் மட்டும் மெதுவாகப் படகைத் தழுவிக் கொண்டிருக்க,
எஞ்சினை அணைத்தவன், படகு மெதுவாக நின்றதும் எழுந்து முன்பக்கம் சென்றான்.
அங்கே இருந்த ஆங்கரை எடுத்தவன், அதனுடன் இணைந்திருந்த கயிற்றை கையில் பிடித்துக் கொண்டு படகின் விளிம்பில் இறங்கினான்.
அஜூதியாவோ படகு நின்றதும் எழுந்து நின்றவள், அவன் செய்கையைப் பார்த்து,
“என்ன பண்றீங்க?” என்று கேட்க,
அவன் பதில் சொல்லாமல் ஆங்கரோடு கீழே இறங்கியவன், கடல் நீரைத் தொட்டான்.
அவனது கால்கள் தண்ணீரைத் தொட்ட நொடியே பதறிப்போனவள்,
“ராவணா…!” என்று கத்திவிட,
“என்னாச்சு?” என்று திரும்பிப் பார்த்தவன், அவளது பயந்த முகத்தைக் கண்டு,
“என்னடா?” என்றான்.
“கடலுக்குள்ளே ஏன் போறீங்க?” என்று பயத்துடன் கூறினாள்.
அவனுக்குச் சிரிப்பே வந்துவிட்டது.
“நான் கடலுக்குள்ள எல்லாம் போகல மா… போட்டை நிறுத்துறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறியவன், ஆங்கரை கடலில் இறக்கினான்.
அவனது கால்களையும் உடையையும் தொட்டிருந்த கடல் நீரைப் பார்த்தவள் இன்னும் பதற்றமாக,
“ஜாக்கிரதையா வாங்க…” என்று அவனைத் தவிப்புடன் பார்த்தபடி குரல் கொடுத்தாள்.
தன் மீது அவள் கொண்டிருந்த அக்கறையை ரசித்தவன், ஆங்கர் சரியாகப் பதிந்திருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே மீண்டும் அவளருகே வந்து, அவளைப் பார்த்துப் புன்னகைக்க,
“இந்த ராத்திரில நடுக்கடலுக்குள்ளே இதெல்லாம் தேவையா? விட்டா உள்ள குதிச்சிருவீங்க போல!” என்று விழிகள் இரண்டிலும் நீர் கோர்த்துவிட, கோபத்துடன் சண்டையிட்டாள்.
முகம் சிவக்க, விழிகளை உருட்டிக்கொண்டு தன்னிடம் சண்டையிடும் தன்னவளை விழியகற்றாது ரசித்தவன், அப்படியே தன் கரங்களை விரித்து அவளை வா என்று சொல்ல,
வேகமாக வந்து அவன் மார்போடு மோதியவள், அப்படியே அவனை அணைத்துக் கொண்டாள்.
“பயந்துட்டியா?” என்றான்.
“ம்ம்…” நாசியை உறிஞ்சியபடி தலையை மட்டும் அசைத்தாள்.
“இதெல்லாம் எனக்கு பழக்கமான ஒன்னு தான்” என்று அவளது கேசத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே கூறினான்.
“ம்ம்… சரி. இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்றவளிடம்,
“இதோ ஒரு அஞ்சு நிமிஷம் இங்கேயே இரு. வந்திடுறேன்” என்றவன், வேகமாகப் படிக்கட்டு வழியாக மேலே உள்ள ஓபன் டெக்கிற்குச் சென்றான்.