அத்தியாயம் -47 (எபிலாக்-1)

5 வருடங்களுக்கு பிறகு.…

நாளும் பொழுதும் யாருக்கும் காத்திருக்காம வேகமா உருண்டுப் போயிடுச்சு… அஞ்சு வருஷம் பஞ்சாப் பறந்து போச்சு. எல்லாரோட வாழ்க்கையிலேயும் பல மாற்றங்கள் வந்துச்சு. வேதம் வீட்டுலே இருந்த ஆட்களும், சத்தமும் கூடிப் போச்சு. விவானுக்கு மிதுன்-னு தம்பி பிறந்து அவனுக்கும் வயசு நாலு ஆகுது. மிதுன், அண்ணனுக்கு மேலே சேட்டைக்காரனா இருந்தான். கிருத்திகாவும் வேலைக்கு போயிடறதுனால சங்கரிக்கு ரெண்டு பேரப் பிள்ளைங்களையும் கட்டி மேய்க்கறதுக்கே நேரம் சரியா இருந்துச்சு. நீலவேணி முடிஞ்ச அளவு ஒத்தாசை பண்ணாலும், அவங்களுக்கும் வயசு கூடினதுனால முதல் மாதிரி ஓட முடியலே. வேதமூர்த்தி இப்போதைக்கு ஓய்வு பத்தி நினைக்கலே-னு சொன்னதுனால, அவரும் எப்போவும் போல அலுவல்ல பிஸி. ரிஷியும் விதுரனும் சேர்ந்து வியாபாரத்துல நல்லா முன்னேறினாங்க. விதுரன் அவனோட டிசைன் வணிகம் எதிர்பார்த்ததை விட மேலே போய், இப்போ அவன் ஆசைப் படி கமர்ஷியல் ப்ராஜெக்ட்ஸும் பண்ணான். பிசினஸ்லே, வெளியிலே அவன் எல்லாருக்கும் சிம்மசொப்பனமா இருந்தாலும் அவனைப் பார்த்து பயப்படாத ஒரே ஆள் அவனோட ஆகச் சிறந்தப் பாதி தான். 

கடைசியா நம்ம மதுரியா!! இப்போ பிறந்த கடைக்குட்டிக்கும் அவ மது தான். கிருத்திகா எவ்வளோ மிரட்டியும் ரெண்டுப் பேரும் கூப்பிடற விதத்தை மாத்திக்கவே இல்லை. ரெண்டுப் பேருக்கும் நிறைய செல்லம், அதோட ரொம்ப சேட்டைங்கறதால கிருத்திகா கொஞ்சம் கண்டிப்பாவும் இருந்தா. ரெண்டுப் பசங்களும் மதுரியா கிட்டப் போனாலும் கிருத்திகா வார்த்தைதான் கடைசி-னு உணர்த்திட்டுத் தான் எல்லாம் செய்வா. மதுரியாவும் ரீனாவும் வெற்றிகரமா அவங்க முதிர்கல்வியை முடிச்சாங்க. ரெண்டு பேரும் சந்திரனோட ஹாஸ்பிடல்லே தான் வேலை பார்க்கிறாங்க. மதுரியா சந்திரனுக்கு கீழே தான் ஜூனியரா இருக்கா. இன்னும் தனியா ப்ராக்டிஸ் பண்ணலே. ஆனா சந்திரன் இப்போவெல்லாம் சில சர்ஜரிகளை அவளைத் தனியா செய்ய விட்டுடறார். 

ப்ரதீப்பும் அங்கேயே தான் சைக்கியாடிரிஸ்டா இருக்கான். அவனுக்கு அதோட சேர்த்து ஹாஸ்பிடல் நிர்வாகத்தையும் குடுத்துட்டார். அவன் எடுத்தப்புறம் நிறைய மாற்றங்கள் செஞ்சு அதை நர்சிங் ஹோம்லே இருந்து ஹாஸ்பிடலா மாத்தினான். ஆனா ‘கார்ப்பரேட்’ தனம் இல்லாம நடந்துச்சு. மொத்தமா ப்ரதீப்போட முயற்சிதான் காரணம். ப்ரதீப்புக்கும் ரீனாவுக்கும் மூணு வயசுலே ஒரு பொண்ணு. பேர் மதுரா.. அவங்க அத்தைங்க பேரு மாதிரியேதான். பார்க்கவும் அப்படித்தான். ரெண்டாவது இன்னும் நாலு மாசத்திலே கையிலே தவழத் தயாராகிட்டிருக்கு. மதுரியாவும் கொஞ்சம் போராடிக் கஷ்டப்பட்டுப் படிச்சு முடிச்சா. படிப்பு முடிஞ்சதும் சந்திரன் கிட்ட ஜூனியரா சேர்ந்தா. சேர்றதுக்கு முன்னாடி கூட, “மதும்மா, ப்ரேம் சார் அவ்வளோ கூப்பிட்டார்லே? ப்ரதீப், சந்திரன் அங்கிள் கூட அவ்வளவு யோசிக்க சொன்னாங்களே?”-னு கேட்டான் விதுரன். “விது.. பீ ப்ராக்டிகல். அவர் பையனையே வைச்சு சாத்திட்டு அவர்கிட்ட எப்படி வர்க் பண்ண முடியும்? அவருக்கும் சங்கடம். எனக்கும் சங்கடம்.. அதெல்லாம் ஒத்து வராது”-னு முடிச்சிட்டா.

விதுரனும் மதுரியாவை ரொம்ப அன்பா பார்த்துக்கிட்டான். அவளை உண்மையிலேயே தாங்கத்தான் செஞ்சான். அதே சமயம் நிறைய சண்டையும் போடுவாங்க. வாக்குவாதம் வரும். ஆனா வந்த வேகத்துலேயே மறைஞ்சும் போகும். அதே மாதிரி ‘நித்தியம்’-லேயும் மாற்றங்கள் வந்துச்சு. நித்தியத்தோட வணிகமும் வளர்ந்துச்சு. தாத்தா ஒரு பெரிய இழப்புக்குப் பிறகு இனிமேல் ஆபீசுக்கு வரலே-னு சொல்லவும் பேரன் பரத் அவரோட வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சான். பரத்–ஆனந்தியாவுக்கு நிகேஷுக்கு அப்புறம் ஒரு பொண்ணு–நித்தியா பிறந்து ரெண்டு வயசாகுது. அவளுக்கும் அவ சித்தி ‘மது’ தான். இவங்க நாலு பேரும் மது-னு கூப்பிட்டாலே காதுலே புகை வரும் விதுரனுக்கு. அதனால அவனுக்கு அவ எப்போவுமே “மதும்மா” தான். நித்தியவாசன் வேலையில பரபரப்புன்னா சுபத்ரா பேரன் பேத்தினால பிஸி. பம்பரமா சுழல விட்டாங்க பாட்டியை. ரெண்டுப் பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகமில்லாததனால கண்ணிமைக்காமல் காவல் காக்கிற நிலைமை பாட்டிக்கு. அதிலேயும் மதுரியா வந்துட்டுப் போனா ரெண்டு நாளுக்கு சேட்டை கூடிப் போகும்.

எல்லாமே நல்லாத்தான் போச்சு. ஆனா மதுரியாவுக்குத்தான் தனக்கு பிள்ளையில்லைங்கற ஏக்கம் உள்ளுக்குள்ளே அரிக்க தொடங்கற வரைக்கும்! முதல்லே சின்ன ஏக்கமா வந்தப்போ விதுரன் அவளை மடை மாத்தினான். ஆபீசுக்கு வரச் சொல்லி வேலை குடுத்தான். ஒண்ணில்லே ரெண்டில்லே மூணு தேன்நிலவு கூட்டிட்டுப் போனான்.  அவன் காதலால் அந்த கவலையை மறக்கடிக்க முயற்சிப் பண்ணான். எல்லாம் கொஞ்ச நாள்தான்! வெளியிலேயும் அதைப் பத்தி அதிகம் பேசாததால, அவளோட ஏக்கம் உள்ளே இறங்கி வெறுமையை ஏற்படுத்த ஆரம்பிச்சுது. என்னடா பண்ணலாம்-னு விதுரன் கவலைப் படறப்போ கற்பகவல்லியோட ஆபரேஷன் வந்துச்சு. பாட்டியை கவனிக்கறது, பார்த்துக்கிறது-னு மதுரியா ஒரு ஆறு மாசம் குழந்தை விஷயத்தை மறந்திருந்தா. ஆனா அந்த நிம்மதியும் அதிக நாள் நீடிக்கலே. பாட்டி நார்மல் ஆகவும் மதுரியா திரும்பவும் வெறுமைக்குள்ளேப் போனா. 

கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆன நிலையிலே அவளோட மனநிலையை முதல் முதலா கவனிச்சது சங்கரிதான். விதுரன் கிட்டப் பேசி வற்புறுத்தி டாக்டர்கிட்ட அனுப்பினாங்க. மதுரியா வேலை செய்யற ஹாஸ்பிடல்லேயே ஒரு நல்ல டாக்டர் கிட்ட போனப்போ பரிசோதனையெல்லாம் பண்ணி அவளுக்கு நடந்த சர்ஜரினால எந்த பாதிப்பும் இல்லேன்னும் எல்லாம் நார்மலா இருக்குன்னும் சொல்லவும் மதுரியா ரொம்ப சந்தோஷமானா. ஆனா அதுக்கு ஆறே மாசம் தான் ஆயுள். திரும்ப களையிழந்துப் போச்சு அவ முகமும் மனசும்.

‘நை நை’ன்னு அரிக்கிற மனைவின்னா கூட கோபம் வரலாம். ஆனா தனக்குள்ளேயே மருகிற மனைவியை பார்த்து மனசுப் பிசையத்தான் செஞ்சுது விதுரனுக்கு. அவளை தேத்தறதுக்கு என்னென்னமோ பண்ணான். ஆனா அதெல்லாமே தற்காலிகமாத் தான் இருந்துச்சு. நாளாக நாளாகத் தனிமையிலே உட்கார்ந்து ஏக்கம் தாங்காம கண்ணீர் வடிக்க ஆரம்பிச்சா அவன் காதல் மனைவி. இன்னும் ஒரு ஒண்ணரை வருஷம் கடந்த நிலையிலே அவ கஷ்டம் தாங்க முடியாம திரும்ப டாக்டர் கிட்டேக் கூட்டிட்டுப் போனான். ப்ரதீப் கிட்டேயும் பேசினான். அவனும் மதுரியா மன அழுத்தத்துக்குப் போயிடக் கூடாது-னு அறிவுறுத்தினான். 

டாக்டரும் அவ நிலைமையை கேட்டு, ஐ.யு.ஐ(intra-uterine-implantation) பண்ணலாம்-னு சொல்லி ஐடியா குடுத்தாங்க. ஆனா அதுக்கு பரிசோதனை, மருந்து, ப்ரொசீஜர்-னு நரக வேதனை அனுபவிச்சா மதுரியா. அவ வலியும் கஷ்டமும் கண்ணாலே பார்க்க முடியலே விதுரனுக்கு. ஆனா என்ன பண்றது-னு புரியலே. மொத்தமா நாலு வாட்டி முயற்சிப் பண்ணி, அத்தனை முறையும் கருத் தங்காம போச்சு. அந்த டாக்டரே ஐ.வி.எஃப் (invitro fertilization) பத்தி சொல்லவும், இது அதை விட கஷ்டம்-னு புரிஞ்ச விதுரன் யோசிச்சு சொல்றதா அப்போதைக்கு சொன்னான். ஆனா விதி, அவங்களை அதைப் பத்தியே யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய இடியை அவங்க தலையிலே இறக்குச்சு. கற்பகவல்லி ஒரு நாள் ராத்திரி தூக்கத்துலேயே இறந்துப் போனாங்க. யாரும் எதிர்பார்க்கலே. எல்லாருமே ஆடிப் போனாங்க. 

நீலவேணிக்கும் பெரிய அடிதான். நித்தியானந்தமும் நிலைக் குலைஞ்சுப் போனார். அன்னிக்கு இருந்த நிலையிலே மிகப் பெரிய அடியா விழுந்தது மதுரியாவுக்குத்தான். விதுரனுக்கு ரொம்ப துக்கம் தான்னாலும் மதுரியாவை தேத்தி இயல்பாக்கிற பெரியப் பொறுப்பு அவனுக்கு இருந்துச்சு. ரொம்ப உடைஞ்சுப் போன அவளை திரும்ப ஒண்ணு கூட்டறதுக்கே அவனுக்கு ஆறு மாசமாச்சு. இதோ கற்பகவல்லி இறந்து ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இப்போதான் மதுரியா கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பழைய கலகலப்பு சிரிப்பெல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு. பேத்திக்காகவே தங்களை சீக்கிரம் நிலைப்படுத்திட்டாங்க நீலவேணியும், நித்தியானந்தமும். அவ கிட்டப் பேசி, சிரிச்சு, அதட்டி, கெஞ்சி, கொஞ்சி-னு அவளை இவ்வளோ தூரம் மாத்தினது விதுரன் மட்டும்தான்.

*****************************************************************************************

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம்!! 

அன்னிக்கு சாயந்திரம் ஆறு மணி போல ஹாஸ்பிடல்லேயிருந்து வீட்டுக்கு வந்தா மதுரியா. “குட் ஈவினிங் பா. குட் ஈவினிங் மா. ஹாய் வீ.. மிது.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”-னு கேட்டுட்டே வந்து சோஃபாலே உட்கார்ந்தா. “வாம்மா… காஃபி குடிக்கிறியா?”-னு கேட்டாங்க சங்கரி. “ம்ம்ம்.. ஹாஃப் கப் சங்கரிம்மா”-னு சொல்லிட்டுத் தலையை பின்னுக்கு வைச்சவ அப்படியே சோபாவுல சாய்ஞ்சுத் தூங்கிப் போனா. ஒரு பத்து நிமிஷத்துலே விதுரனும் வந்து, அவளைப் பார்த்து அர்த்தச் சிரிப்புச் சிரிச்சிட்டே மாடிக்குப் போயிட்டு வந்தான். 

“ரியா… காஃபி..”-னு சங்கரி சொல்லிட்டே வரவும், “ஷ்ஷ்…”யென கையை காட்டினார் வேதமூர்த்தி. “காஃபியை இவனுக்கு குடு. அவ ஒரு பத்து நிமிஷம் தூங்கட்டும்”-னு சொன்னார் வேதமூர்த்தி. “ஏன் டா ஒரு வாரமா ரொம்ப அசந்துப் போறாளே? ரொம்ப வேலையா?”-னு கேட்டாங்க நீலவேணி. “ஆமாடா.. பிள்ளை ஓய்ஞ்சுப் போயி வீடு வர்றா. சர்ஜரி ஜாஸ்தியா?”-னு கேட்டார் வேதமூர்த்தி. ஒரு சிரிப்பு சிரிச்சவன், “அசதியாதான் இருக்கணுமா? வேறே நல்ல விஷயம் இருக்கக் கூடாதா?”-னு விதுரன் கேட்கவும், நீலவேணி “நிஜமாவா தம்பி? அவளும் சொல்லவே இல்ல?”-னு கேட்டாங்க. “அவளுக்குத் தெரியாது பாட்டி.. நாளைக்கு சனிக்கிழமையில்லே? லீவு அவளுக்கு.. அதான் டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கேன்… அவங்களே சொல்லட்டும். அது வரைக்கும் எந்த எதிர்பார்ப்பும் வர வேண்டாம்”-னு சொல்லவும் அதுவே எல்லாருக்கும் சரி-னு பட்டுச்சு. ஆனா பெரியவங்க மூணு பேருக்கும் அவ்வளோ சந்தோஷம். முகம் கொள்ளா சிரிப்பு. விதுரனும் மாடிக்கு குளிக்க டிரெஸ் மாத்த அதே சிரிப்போட போனான்.

அவன் குளிச்சுட்டு வெளியே வர்றப்போ அவ வார்ட்ரோப்லே எதையோ குடைஞ்சிட்டு இருந்தா. சத்தமில்லாம போய் அவளை பின்னாடியிலே இருந்து கட்டிப் பிடிச்சான். அவனோட வாசம், தலையிலே இருந்த ஈரம், குளிச்சுட்டு வந்த சிலுசிலுப்பு எல்லாம் கிறங்க அடிச்சாலும், “விது.. என்ன பண்றீங்க? கதவு திறந்திருக்கு. விடுங்க”-னு நெளியவும், “விடத்தான் முடியலியே! மேடம் முகத்துலே பழைய குறும்பு, பேச்சு, சிரிப்பு-னு ஜொலிக்கிறீங்களே!! சும்மாயிருக்க முடியலே”-னு கழுத்துலே முகம் புதைச்சான். ஒரு பெருமூச்சு விட்டு, “பாட்டி போனப்புறம் நிறைய விஷயம் புரிஞ்சுது விது. இழப்பு தான். ஆனா கால் இல்லை-னு ஒரு நாள் கூட ஓயலே. நார்மல் லைஃப் லீட் பண்ணாங்க. அவங்க வளர்த்த நான், குழந்தை இல்லே-னு மறுகி உங்களையும் கஷ்டப்படுத்தி சாரி.. விது… பாட்டியில்லே-னு உறைக்கும் போதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு”-னு சொல்றப்போவே கண்ணுலே இருந்து தண்ணி வழிஞ்சுது. அது உணர்ந்த விதுரனும் அது கன்னம் தாண்டறதுக்கு முன்னாடி அது மேலேயே முத்தம் குடுத்தான். “உன் கண்ணீர் அருவிக்கு கர்சீப் பத்தலைடி”-னு சிரிச்சான்.

கொஞ்சல், கிண்டல்-னு கழிஞ்ச கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், “விது.. விடுங்க… என்னாச்சு உங்களுக்கு? பிள்ளையில்லா வீட்டுலே கிழவன் துள்ளின கதையா இருக்கு.. விலகுங்க”-னு அவனை தள்ளினா. “அடிங்க… யாரை பார்த்துடி கிழவன்-னு சொன்னே? 33 வயசுலே கிழவனா?”-னு போலியா மிரட்டவும், “பின்னே குமரனா?”-னு உதட்டை சுழிச்சா. “இப்போவே வா.. உன்னையே தூக்கி தண்டால் எடுத்துக் காட்டறேன்… கிழவனாமே?”-னு சொல்லவும், “எனக்கு வேறே வேலை இல்லையா? விலகுங்க..”-னு அதட்டினா. “உன் கிட்டே நாளைக்குப் பேசிக்கிறேன். அப்போ பார்க்கிறேன்.. என்ன சொல்றே”-னு விடாம பேசவும், “ஏன்? நாளைக்கு உங்க வயசுலே பாதி குறைய போகுதா என்ன?”-னு நமுட்டு சிரிப்போட கேட்டா மதுரியா. “உன்னை என்ன பண்றேன் பார்”-னு இழுத்து அவ முகம் நோக்கி குனியவும், “மது… மதூ..”-னு கோரஸா ஏலம் விட்டுக்கிட்டே வந்தாங்க விவானும் மிதுனும். விதுரன் பதறி விலகினான். மதுரியாவுக்கு அடக்க முடியாம சிரிப்பு.

“என்ன மது? ஹெல்ப் வேணும்-னு சொன்னா இதோ வர்றேன்னு சொல்லிட்டு சித்தப்பா கூட என்ன பண்றீங்க? வாங்க..”-னு அதட்டலா கேட்டான் விவான். “எங்கேடா பண்ண விட்டீங்க?”-னு விதுரன் கேட்கவும், “விதூ… ஷ்ஷ்”-னு அதட்டினா மதுரியா. “என்ன வேணும் வீ? மிதுக்குட்டிக்கு என்ன வேணும்?”-னு அவங்க கிட்டப் போனா. “மது.. சைன்ஸ் ப்ராஜெக்ட் ‘க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்’ மாடல் பண்ணணும்.. எல்லாம் வாங்கியாச்சு”-னு விவானும், “மது… சார்ட்லே ‘மை ஃபேமிலி’ வரையணும்.. ப்ளீஸ்” – இது மிதுன். “ஓ.. யெஸ் பண்ணிடலாம்…. ரெடி பண்ணி வைங்க.. இதோ வரேன்”-னு சொன்னா மதுரியா. “மது… கீழே ஒரே ஸ்வீட் வாசனை… ஏதோ சர்ப்ரைஸாம் உங்களுக்கு.. அம்மா, பாட்டி எல்லாம் ஒரே சீக்ரெட் தான்”-னு சிரிச்சான் விவான். “ஐயோ பயப்புள்ளை போட்டு விட்டுடுச்சே”-னு விதுரன் யோசிக்கும் போதே, “என்ன சர்ப்ரைஸ் டா?”-னு சிரிச்சுட்டேக் கேட்டா மதுரியா. “அதுவா? நாளைக்கு உங்களுக்கு..”-னு இழுக்கும் போதே விவான் தலையிலே லொட்டு-னு குட்டு விழுந்துச்சு.

வேறே யாருமில்லே… அவங்க அம்மா கிருத்திகா தான். “ஏன்டா? ரூம்லே நடக்க முடியாம பரப்பிட்டு இங்கே என்ன அரட்டை? போங்கடா..”-னு அதட்டவும், பசங்க ப்ராஜெக்ட் விஷயம் சொல்லவும், “அது சரி.. ப்ராஜெக்ட் உனக்கா? அவளுக்கா? ஹாஸ்பிடல்லேயிருந்து அசந்து வந்திருக்கா”-னு திட்டினா கிருத்திகா. “ஒண்ணும் ப்ராப்ளம் இல்லேக்கா”-னு மதுரியா சொல்லவும், “ஆமா அண்ணி ஒண்ணும் பிரச்சினை இல்லை.. அன்னிக்கு கசக்கி போட்டதை இன்னிக்கு முடிக்கட்டும்”-னு சொல்லவும், மதுரியா திகைப்பாப் பார்த்தா. “சே.. பரத்தப்பா.. அந்த பேப்பரை கூடவா குடுத்து மானத்தை வாங்குவீங்க?”-னு நினைச்சுட்டு அவனைப் பார்த்தா, அழகா ஒத்த புருவம் தூக்கி கண்ணடிச்சான். முகச் சிவப்பை மறைக்க, “பசங்களா, நம்ம போகலாம்.. மிதூ… ஃபர்ஸ்ட் அண்ணா வேலை முடிக்கலாம்”-னு கூட்டிட்டுப் போனா. 

அவ கண் மறைஞ்சதும், “கங்கிராட்ஸ் விதுரன். எப்போ தெரியும்?”-னு கேட்டா கிருத்திகா. “தேங்க்ஸ் அண்ணி. 15 நாள் முன்னாடி அவளுக்கு டவுட் வராம ப்ளட் டெஸ்ட் எடுக்க வைச்சேன். நாளைக்கு ஸ்கேன் எடுக்கணும். எடுத்தப்புறம் தான் அவளுக்கு சொல்லணும்.. அப்பாடா… 48 நாள் ஆயிடுச்சு”-னு சொன்னான். “அப்புறம் எப்படி அவளுக்கு டவுட் வரலே?”-னு கிருத்திகா கேட்கவும், “அந்த ஐ.யு.ஐ டிரீட்மெண்டுக்காக குடுத்த மருந்துனால சில சமயம் இர்ரெகுலர் பீரியட்ஸ்… அதான் அவ நோட் பண்ணலே.. சிம்ப்டம்ஸ்லே டவுட் வந்து நான் தான் எடுக்க சொன்னேன்.. ஃபுல்லா கன்ஃபர்ம் ஆனதும் அவளுக்கு சொல்லலாம்”னு முடிக்கவும், “சூப்பர்.. சூப்பர்.. எனக்கே எக்ஸைடடா இருக்கு”னு சொன்னா கிருத்திகா.

இப்படியே சந்தோஷமும் படபடப்புமா சனிக்கிழமை விடிஞ்சுது வேதம்-லே. காலையிலே எந்திரிச்சுதுலே இருந்து விரட்டி விரட்டி அவளை வெளியே போக தயாராகச் சொன்னான். மதுரியாவுக்கு வீடே பரபரப்பா இருக்கற மாதிரி தோணுச்சு. “என்னாச்சு? சாடர்டே மாதிரியே இல்லையே?”-னு சொல்லிட்டேத் திரும்பினா நித்தியவாசனும் சுபத்ராவும் வந்துட்டு இருந்தாங்க. “மா… அப்பா.. வாங்க.. காலையிலே இவ்வளோ சீக்கிரமா?”-னு வரவேற்கவும், “அது ஒண்ணும் இல்லேடா… காலையிலே கொஞ்சம் வெளியே வேலை. நேத்திக்கு கோயில்லே ப்ரதோஷம். போற வழியிலே பிரசாதம் குடுக்கணும்-னு அம்மாவோட விருப்பம்”-னு சொன்னார் நித்தியவாசன். அதுக்குள்ளே மகளுக்கு விபூதி, குங்குமம் வைச்சு விட்டு, நெத்தியிலே முத்தம் குடுத்து, “வெளியிலே கிளம்பிட்டு இருக்கீங்களாடா? பார்த்துப் போயிட்டு வாங்க”-னு கண்ணுலே தண்ணி வைச்சுட்டு சொன்னாங்க சுபத்ரா. மதுரியா வினோதமா பார்க்கவும், “மதும்மா… கிளம்பலாம்டா டைம் ஆகுது”-னு கவனத்தைத் திசைத் திருப்பினான் விதுரன். 

“ம்ம்ம்.. போகலாம்… எங்கே தான் போறோம்?”-னு அலுத்துக் கிட்டேக் கிளம்பினா… வாசல் பக்கம் போனவங்க எதிர்லே வந்த விக்கியையும் ரிதேஷையும் பார்த்து ப்ரேக் போட்ட மாதிரி நின்னாங்க. விதுரனைத் தவிர எல்லார் முகத்துலேயும் லேசான ஸ்மைல் தானே தவிர மத்தபடி அதிர்ச்சியோ திகைப்போ இல்லை.. ஏன்னா 5 வருஷமா நடக்கிற விஷயம் தானே இது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top