2 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 2

‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் பிரம்மாண்டமான தரைத்தளத்தில், தன் முன்னால் தலைகுனிந்து நின்றிருந்த, அந்த விற்பனைப் பிரதிநிதியை உற்றுப் பார்த்தான் ராஜகுமாரன். 

அவன் முகத்தில் தேங்கியிருந்த தயக்கத்தையும் சோர்வையும் கவனித்தவன், மெல்ல அவனது தோள்களின் மீது அன்போடு கை போட்டு, “தலை குனிய வேண்டியதில்லை தம்பி” என்றான். 

அவனது குரலில் அரவணைப்பு தெரியவும், ​அந்த விற்பனைப் பிரதிநிதி நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தான். அவனுக்குள் எந்தவிதமான பயமும் இல்லை. மாறாக, ராஜகுமாரனின் மீதான எல்லையற்ற மரியாதையும் பாசமும் மட்டுமே அவனின் கண்களில் மிளிர்ந்தது.

“நீங்க சந்தோஷமா, சேலையை எடுத்து அழகா விரித்து கஸ்டமருக்கு காட்டினால்தான்,   அந்த சேலை மேல ஒரு ஈர்ப்பு வரும். அவங்களுக்கு அதை வாங்கணும்னு ஒரு ஆர்வம் வரும். இல்லைன்னா, அவங்க பார்த்திட்டே இருப்பாங்க. கொஞ்ச நேரத்தில டிசைன் பிடிக்கலைன்னு சேலையை திருப்பி கொடுத்துட்டு வேற கடைக்கு போயிடுவாங்க. அப்புறம், நம்ம கடையோட பெயர்தான் கெடும். கஸ்டமர் சர்வீஸ் நல்லாயில்லைனு நாலுபேருக்கு சொல்வாங்க. அது அப்படியே பரவும். அதனால யாருக்கு நஷ்டம் நமக்குத்தான?” என்று அவன் கனிவாக புரிய வைக்கவும், 

‘ஆமாம்’ என்பது போல மெதுவாகத் தலையசைத்தான். 

ராஜகுமாரன் அவன் தோளில் மெல்லத் தட்டிவிட்டு, மீண்டும் மென்மையாக பேச ஆரம்பித்தான். அவனது குரலில் கண்டிப்பு இல்லை, அன்பும் அக்கறையும் கலந்த ஒரு பாசம் இருந்தது. அதனால் விற்பனைபிரதிநிதி அவனது பேச்சிற்கு கட்டுப்பட்டு, அவனை முழு மனதுடன் கவனித்தான். 

“சேலைங்கிறது உடலை மறைக்கிற ஆடை மட்டுமில்ல இல்லை தம்பி. மகிழ்ச்சியை, தன்னம்பிக்கையை, தைரியத்தை, அன்பை தர கூடிய ஒரு அற்புதமான பொருள். இந்த உணர்வையெல்லாம் நீங்க உணர்ந்து கஸ்டமரை உணர வைக்கணும். 

சேலையை வெறும் துணியாக பார்க்காமல், அதுல இருக்கிற கலைநயத்தையும், பாரம்பரியத்தையும், தெய்வீகமாக நினைச்சி, அதை அவங்களுக்கு புரிய வைக்கணும். அதாவது நீங்க சந்தோஷமா சேலையை எடுத்து காட்டினால், உங்க சந்தோஷம் கஸ்டமருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். நீங்க போடுற உழைப்பு அவங்களுக்கு புரியும். வியாபாரமும் நல்லபடியா நடக்கும். உங்களுக்கும் மனநிறைவு கிடைக்கும். அடுத்தடுத்த கஸ்டமரை நீங்க பார்த்துட்டு போய்ட்டே இருக்கலாம்” என்று உற்சாகப்படுத்தும்விதமாக கூறினான். 

​“சரிங்க சார்… இனிமேல் அப்படியே பண்றேன்” என்று உறுதியான குரலில் பதில் கூறினான் விற்பனைப்பிரதிநிதி.

“தம்பி நாங்க கொடுக்கிற சம்பளம் உங்களோட அடிப்படை தேவைக்கு மட்டும்தான் பயன்படும். ஆனால், இந்த மாதிரி பண்டிகை நாள்ல, நீங்க கஸ்டமர்கிட்ட எப்படி நடந்துகிறிங்க. அவங்களுக்கு எவ்வளவு சிறப்பான சேவையை  கொடுக்குறிங்கனு பொறுத்துதான், உங்களோட வருமானத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். நீங்க சம்பள பணத்தை தாண்டிய ஊக்கத்தொகையையும் ஒவ்வொரு மாசமும் சம்பாதிக்க முடியும். 

மொத்தத்தில் உங்களோட செயலும் முயற்சியும், நல்லா இருந்தால், இந்த ஆடி மாசத்துல நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு கண்டிப்பா உங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். மேலும், அந்த கஸ்டமரே அவங்களுக்கு நல்ல சர்வீஸ் பண்ணிங்கனு, திரும்ப  தேடி வந்து உங்களை பார்க்கிறதுக்கும், உங்களது வருமானத்தை ஒவ்வொரு மாதமும் அவங்களே அதிகப்படுத்துறக்கும் வாய்ப்பிருக்கு” என்று  நடைமுறை எதார்த்தத்தைப் புரிய வைத்து, ஊழியனின் முகத்தை மலரச் செய்தான்.

ராஜகுமாரனின் வார்த்தைகள், விற்பனைபிரதிநிதிக்கு புதிதாக தோன்றின. பெரும்பாலும், உரிமையாளர்கள் வியாபாரம் நடக்கவில்லை என்றாலோ, வேலை பார்க்கவில்லை என்றாலோ சத்தம் போடுவார்கள் அல்லது வேலையை விட்டு நீக்குவார்கள். ஆனால், ராஜகுமாரனின் அணுகுமுறை வித்தியாசமாகவும், அவர்களது தவறுகளை பக்குவமாக பேசி புரிய வைத்து, அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு ஆதரவாகவும் பேசினான். அவனின் பொறுமையான இந்த குணம், கடையில் இருந்த  அனைவருக்கும் அவனை பிடிக்க காரணமாக இருந்தது. 

“‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்ங்கிற, நம்ம கடையோட பேரு வெறும் பேருல மட்டும் ராஜானு இருந்தா  பத்தாது தம்பி. நம்ம கடைக்கு வர்ற ஒவ்வொரு கஸ்டமரையும், ராஜா, ராணியா நாமத்தான் பீல் பண்ண வைக்கணும். ஒரு நல்ல பட்டுச்சேலையை வாங்கிட்டு போறோம்ன்ற, சந்தோஷத்தை நாமதான் அவங்களுக்கு உருவாக்கணும். இந்த கடையில கிடைக்கிற சர்வீஸ் மாதிரி வேற எங்கையும் கிடையாதுன்னு நாமதான் அவங்களை சொல்ல வைக்கணும். நான் சொன்ன எல்லாத்தையும்  நீங்க உணர்வுபூர்வமா உணர்ந்து செஞ்சீங்கன்னா, இந்த வேலை வந்து ஒரு கொண்டாட்டமா தெரியும் தம்பி. நாம கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம்னு கவலையே தோணாது சரியா?” என்று  புன்னகைமுகமாக கூறினான்.

விற்பனைபிரதிநிதியின் முகத்திலும் உண்மையான புன்னகை அரும்பியது. “சரி, போய் உங்களோட வேலையை சந்தோஷமா செய்யுங்க. எதுவும்  சந்தேகம் வந்தாலும், தயங்காமல் வந்து கேளுங்க. நான் உங்ககூடவே இருக்கேன்” என்று, அன்பாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தான்.

தனது இடத்திற்கு சென்ற விற்பனைபிரதிநிதி, நடையிலும், முகத்திலும் ஒரு தெளிவும், புத்துணர்ச்சியும் தெரிந்தது. அவன் அந்த வாடிக்கையாளரிடம் சேலையை எடுத்து காட்ட ஆரம்பித்தபோது, முன்பைவிட அதிக உற்சாகத்துடனும், புன்னகையுடனும் பேசினான். 

சேலையின் ஒவ்வொரு அம்சத்தையும் பொறுமையாகவும், விளக்கமாகவும் கூறினான்.

அவனை கவனித்து கொண்டிருந்த ராஜகுமாரன், ‘இனி அவன் நன்றாக வியாபாரம் செய்திடுவான்’ என்ற மனநிறைவுடன் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தான். 

‘கொஞ்சம் அன்பான பேச்சு, ஒரு விற்பனை பிரதிநிதியின் மனநிலையை மாற்றுகிறது. வேலையாட்களிடம் அன்பும் அக்கறையும் காட்டுவது, வியாபாரத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்’ என்பதை  அவ்வேளையில் உணர்வுபூர்வமாக உணர்ந்தான். 

ராஜகுமாரன், அழகும் அறிவும் ஒருங்கே அமைய பெற்றிருந்த முப்பது வயது இளைஞன். அவனது கருமையான விழிகளும், எடுப்பான மூக்கும், தெளிந்த சிந்தனையுடன் கூடிய முகமும், அவனை பார்ப்பவருக்கு தானாக மரியாதையை கொடுக்க வைத்தது. 

ஏனெனில், வியாபாரத்தை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாக  மட்டும் அவன் பார்க்கவில்லை. தங்களது குல தொழிலை கைவிடாது எடுத்து செய்ய வேண்டும், தங்களது உழைப்பின் மூலம் உருவாக்கப்படும் தரமான படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியமாகவும், தன் கீழ் வேலை பார்க்கும் வேலையாட்கள், தன்னை தேடி வரும் வாடிக்கையாளர் என்று தங்கள் மூவரையும் இணைக்கும்  இந்த உறவு பாலத்தை இறுதி மூச்சு வரை தொடர வேண்டும் என்றும், மொத்தத்தில் வியாபாரத்தை ஒரு கலையாக நினைத்து, ஒவ்வொன்றாக பக்தியுடன் பார்த்து செய்து வருகிறான். 

நிச்சியமாக ஆடி மாதம் முடிவடையும்போது, ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ ஒரு புதிய உச்சத்தை தொடும் என்று  ஆழமாக நம்பினான். இதனால் உள்நாட்டு வியாபாரத்தோடு நின்றுவிடாமல், உலக அரங்கில் தங்கள் பாரம்பரிய பட்டுச்சேலைகளின் சிறப்பை பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வெளிநாட்டில் ஒரு ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற, தனது அடுத்தகட்ட திட்டத்தை பற்றி மகிழ்ச்சியுடன் மனதிற்குள் எண்ண ஆரம்பித்தான். 

தங்களது வியாபாரத்தை, தனது வாழ்வின் உயிர்மூச்சாக கருதிய அவனின் பார்வை, அவனது கடுமையான மற்றும் நேர்மையான முயற்சியால் தற்போது அவனை உலகளாவிய பயணத்திற்கு அழைத்து செல்ல காத்திருந்தது.

சென்னையில் முதன்முதலாக ஆரம்பித்த தங்கள் முதல் கடையில் அமர்ந்து கொண்டு, தமிழகம் முழுவதும் தங்களது கடையின் வியாபாரத்தை விரைவாகவும், வெற்றிகரமாகவும் விரிவுபடுத்தியவன், அடுத்து வெளிநாட்டிலும் காலூன்றும் முயற்சியை இனி கையில் எடுக்க வேண்டும் என்று பெரும் மகிழ்ச்சியுடன் எண்ணி கொண்டிருந்தான் ராஜகுமாரன்.

அங்கே கடைக்குள் பட்டுச்சேலைகளின் கண்களை பறிக்கும் பளபளப்பும், வாடிக்கையாளர்களின் கலகலப்பான பேச்சுக்குரலும், விற்பனையாளர்களின் உற்சாகமான விளக்கங்களும்  ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ கடை முழுவதும் மங்களகரமாக ஒலித்து கொண்டிருந்தது. மொத்தத்தில் ஒரு திருவிழாக்களம் போலவோ அவ்விடம் கோலாகலமாக காட்சியளித்தது. 

ராஜகுமாரன், தனது குளிரூட்டப்பட்ட பிரத்யேக அறையிலிருந்து இந்த வெற்றி கோலாகலத்தை மனம் மகிழ்ந்து கவனித்து கொண்டிருந்தான். 

இந்த ஆடி மாதம், தங்களுக்கு சிறப்பான வெற்றிகளை குவித்துத்தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், முதலாளி என்ற சிம்மாசனத்தில் ஒரு ராஜா போல கம்பீரமாக அமர்ந்திருந்தான். 

அச்சமயம், அவனது மேசையில் இருந்த அவனது விலை உயர்ந்த அலைபேசி சிணுங்கியது. திரையில் ‘சங்கர்’ என்ற பெயரை காட்டியது. 

எதாவது வியாபாரம் குறித்த தகவலாக இருக்கும் என்ற மகிழ்ச்சியான மனநிலையுடன் அழைப்பை ஏற்று, “சொல்லுடா?” என்றான் மிக இயல்பான குரலில்.

ஆனால், மறுபக்கத்தில் இருந்து வந்த சங்கரின் தேம்பலும் அழுகுரலும், அடுத்த நொடியே ராஜகுமாரனைப் பீதி அடைய வைத்தது. 

“குமாரண்ணா…  அண்ணா நம்மை எல்லாம் விட்டிட்டுப் போயிட்டாருண்ணா” என்று சங்கர் விம்மியபடி சொல்லவும்,  

இதயத்தை யாரோ சுத்தியலால் ஓங்கி அடிப்பது போலிருந்தது ராஜகுமாரனுக்கு. அதுவரை கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தவனது  கால்,  அதிர்ச்சியில் தன்னியல்பாக கீழே இறங்கியது. 

அவனால் ஒரு துளிகூட, சங்கர் கூறியதை நம்ப முடியவில்லை. “என்னடா சொல்ற? என்னாச்சு?” அவன் குரல் அவனறியாமலே நடுங்கியது. தொண்டை வறண்டு போனது. 

“ஆமாம்ண்ணா… அண்ணா நம்மையெல்லாம் விட்டிட்டுப் போயிட்டாரு…” என்று சங்கர் மீண்டும் கதறினான்.

ராஜகுமாரனின் மூளை ஒருகணம் மறுத்துபோய் செயல்பட மறுத்தது. “என்…ன நடந்தது?” எனக் கேட்டவனின் குரல் ஒரு கணம் வலுவிழந்தது. ஆனால், அடுத்த நொடியே ஒருவித பதற்றத்துடன், “விவரமா விஷயத்தை சொல்லுடா?” என்று  தெளிவாக கத்தி கேட்டான். தன் அண்ணனுக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்துகொள்ள அவன் மனதிற்குள் தவிப்பு அலைமோதியது.

சங்கர், தனது அழுகையை அடக்கப் பெரும் முயற்சி செய்து, தட்டுத்தடுமாறி அந்தப் பயங்கரமான விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான். “நான் ஹால்ல சிவாகூட பேசிட்டு இருந்தேன். அப்ப… துப்பாக்கி சத்தம் கேட்டுச்சுண்ணா. அதுவும் அண்ணன் ரூம்லதான். நாங்க உடனே பதறிப்போய் அண்ணன் ரூம் கதவை தட்டினோம். அண்ணன் கதவை திறக்கலை. அண்ணா… அண்ணானு எவ்வளவோ கூப்பிட்டோம். அண்ணன் குரலே கேட்கலை. உடனே தாமதிக்காமல் நாங்க கதவை உடைச்சிட்டோம். உள்ளே போய் பார்த்தால், அண்ணன் தன்னை தானே சுட்டுக்கிட்டு தரையில் கிடக்கிறார்ண்ணா. அண்ணன் தலையில பாய்ந்த குண்டு அந்த பக்கம் சிதறி வந்திருச்சு.  தலையில் இருந்து ரத்தம் வந்திட்டே இருக்கு… நீங்க சீக்கிரம் வாங்கண்ணா” 

அவன் கூறியது ஏதோ ஒரு வினோதமான கனவாக இருக்க கூடாதா? இல்லை உண்மையில் இது நடந்துவிட்டதா? என்ற இரண்டுவகையான எண்ணத்திற்கும் இடையில் சில நொடி தத்தளித்தவன் கண்கள் இருளடைந்தன, ”அண்ணா… நீங்க வாங்கண்ணா” என்ற சங்கரின் அழுகுரலில், ஏதோ அவனை கனவில் இருந்து மீண்டது போல பட்டென்று, “ஹாஸ்….பிட்டல் அண்ணனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போடா. எப்படியாவது அண்ணனை காப்பாத்துடா” ஒருவேளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், தன் அண்ணனை காப்பாற்ற முடியுமோ  என்ற சிறு நூலிழை நம்பிக்கையுடன்  கேட்டான். 

“இல்லைண்ணா… அண்ணன் உடம்புல உயிர் இல்ல.  நீங்க சீக்கிரம் வாங்கண்ணா எனக்கு என்ன பண்றதுன்னே புரியல” என்று விம்மினான்.

ஹாய் ப்ரெண்ட்ஸ்!

இந்த இரண்டாவது அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். நீங்கள் இடும் ஒவ்வொரு லைக் அண்ட் கமெண்ட் இந்த கதை வெற்றிக்கு தகுதி பெறும். மறக்காமல் உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கவும். 

அன்புடன்

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top