அத்தியாயம் : 4
வியாபார உலகில் வெற்றிக்கொடி நாட்டிய ராஜகுமாரன், இன்று ஒரு சிறு குழந்தையை போல அழுது கொண்டிருப்பதை பார்த்தவர்கள், விதியின் விளையாட்டை எண்ணி வருந்தினார்கள்.
ராஜவர்மன் இறந்த செய்தி, ராஜகுமாரனின் உலகத்தை மட்டும் தலைகீழாக புரட்டி போடவில்லை. அவனை பற்றி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் கூட, ஒரு கணம் அவனது இறப்பு செய்தியை கேட்டு ஸ்தம்பித்துப் போனார்கள்.
இந்த துயரமான சூழலில், பெரியவர்களின் பேச்சிற்கிணங்க வெங்கடேசன், ராஜகுமாரனை மெல்ல அணுகினார்.
அவர் சிறு வயதில், ராஜகுமாரனின் தந்தையான ராஜேசேகருக்கு நெருங்கிய நண்பராகவும், அவர் மறைந்த பின்னர், தந்தை ஸ்தானத்தில் இருந்து ராஜகுமாரனுக்கும் ராஜவர்மனுக்கும் நல்ல வழிகாட்டியாகவும் இருந்து கொண்டிருப்பவர் என்பதால், அவர்கள் குடும்பத்திற்கு என்று இருக்கும் ஒரே ஒரு பெரிய மனிதரும் அவர்தான் என்பதால், அவர் பேசினால்தான் சரியாக இருக்கும் என்று மற்றவர்கள் அமைதியாக நின்றார்கள்.
ராஜகுமாரனின் கண்களில் தெரிந்த சோகமும், அண்ணனை அணைத்து அவன் அழ துடித்து கொண்டிருப்பதையும் கண்டு,
மெதுவாக அவனது தோளை தொட்டார் வெங்கடேசன். “குமரா… அழுதுட்டே இருக்காம ஆக வேண்டிய காரியத்தை பார்போம்டா…” அவரது குரலில் ஒருவித ஆழ்ந்த அமைதி இருந்தது. ஒரு பொறுப்புணர்ச்சி தெரிந்தது.
“மாமா… அண்ணனை நீங்க என்னென்னு கேளுங்க மாமா. நீங்க கேட்டாவது, அவன் எழுந்து வருவானா?” எனக் கேட்டான் ராஜகுமாரன். அவன் குரல் கரகரத்தது பேச முடியாமல் தவித்தான்.
இந்த நேரத்தில், அவனிடம் அதட்டி பேசுவதற்கு மனம் வராமல், “கொஞ்சம் மனசை தேத்திக்க குமரா” என்று மென்மையாக கூறினார்.
மாட்டேன் என்பது போல மறுப்பாய் தலை அசைத்தவன், அவரது கண்களை கோபமாக நோக்கினான். அவனது கண்கள் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தன. “மாமா அண்…ணனே என்னை விட்டுட்டு போய்ட்டான். இனி நான் என்ன செய்வேன். எப்படி அவன் இல்லாம?” என்று கத்தியவன், தரையில் மண்டியிட்டு கத்தி கதறி அழுக ஆரம்பித்தான்.
இப்படியே விட்டால், அண்ணன் தன்னை பிரிந்த துயரத்தை தாங்க முடியாமல் அழுதே தளர்ந்து விடுவான் என எண்ணியவர், மெதுவாக அவனை தூக்கி நிறுத்தி, அவனது கண்களை ஆழமாகப் பார்த்து, “அவன் உன்னை விட்டுட்டு எங்கையும் போக மாட்டான்டா. சின்ன வயசிலே உன்னை அவனோட குழந்தையா நினைச்சி தூக்கி வளர்த்தவன்டா. இப்ப மட்டும் உன்னை விட்டிட்டு போய்டுவானா?
நிச்சியமா போகமாட்டான். இனி, எப்பவும் உன்கூடவே இருப்பான். அவன் வாழாத வாழ்க்கையை நீ வாழ்ந்து காட்டணும்டா. அதை உன்கூடவே இருந்து, அவன் பார்த்து சந்தோஷபடுவான்டா. நாம அவனை நினைச்சி அழறதுனால, அவனுக்கு எந்த நிம்மதியும் கிடைக்காதுடா”
அவரின் இறுதி வார்த்தையில், அவனது அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டது.
“குமரா… நீ ராஜவர்மனின் தம்பி மட்டுமில்லை நீதான்டா அவனோட பிள்ளையும் கூட. அவன் ஆரம்பிச்ச ராஜா டெக்ஸ்டைல்ஸ்க்கு அடுத்த ராஜாவும் நீதான். நீ இப்படி சோர்ந்து போய் நின்னா எப்படிடா? நீதான் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லா சடங்குகளையும் செய்யணும். அப்பத்தான், அவனோட ஆத்மா சாந்தி அடையும்” என்று, மென்மையாக, ஆனால் உறுதியாக கூறினார்.
வெங்கடேசனின் ஒவ்வொரு சத்தியமான வார்த்தையும், துயரத்தால் சிதறிய ராஜகுமாரனின் மனதை ஒன்று சேர்த்தது. தன்னை பிடித்திருந்தவர்களின் கையை எடுத்து விட்டான். நேராக நின்றான்.
அவனின் கைகள் இரண்டையும் இறுக பிடித்து, “உன் அண்ணனுக்கு செய்ய வேண்டிய நிறைய காரியங்கள் இருக்குடா. நீதானே அவனோட வாரிசு நீதான் எல்லாம் செய்யணும்” என்றார்.
அவர் கொடுத்த அழுத்தம், அவன் போற்றியிருந்த துக்கம் என்னும் போர்வையை சிறிது விலக்கி விட, ‘சிறுவயதில் தன்னை குளிர்பாட்டி பாராட்டி சீராட்டி எல்லாம் செய்த அண்ணனுக்கு, தான் எல்லாம் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுக்க வைத்தன.
வழிந்து கொண்டிருந்த கண்ணீர் துளிகளுக்கு இடையே, அவர் கண்களை மெல்ல நோக்கினான் ராஜகுமாரன்.
வெங்கடேசன் கண்களில் தெரிந்த பொறுப்புணர்ச்சியை பார்த்து, இது உணர்ச்சிவசப்படும் நேரம் இல்லை என்பதை அந்த பார்வையில் அவனுள்ளும் உணர்ந்தான்.
ஏனெனில் அவர்தான் தங்கள் இருவருடன் அதிகம் பழகியவர், தங்கள் இன்ப துன்பங்களில் கலந்து கொண்டவர், அவரே தற்போது பொறுப்புணர்வுடன் பேசும்போது, ராஜவர்மனின் தம்பியாகிய, நானும் பொறுப்புணர்ச்சியுடன் மாற வேண்டும். இனி ஆக வேண்டிய காரியத்தை சரியாக செய்ய வேண்டும் என்று, அவரின் பேச்சிற்கு மனதை செயல்படுத்த முனைந்தான்.
அவனது, உடல் மனம் என்று அனைத்திலும் தன் அண்ணனை இழந்த துயரம் ஆட் கொண்டு, அசைய முடியாமல் அவனை பிடித்து கண்டாலும், அசையாமல் கிடந்த ராஜவர்மனின் உடலை பார்த்து, ‘அண்ணா, என்னை நல்லபடியா வளர்த்து ஆளாக்கின உனக்கு நான் எல்லாம் செய்வேன்’ என்று, மனதுக்குள் சபதம் எடுத்துவிட்டு,
மனதை ஆக்கிரமித்து கொண்டிருந்த துயர புயலுக்கு மத்தியில், கடமை உணர்வை கட்டாயமாக வர வழைத்து கொண்டு, “என்ன காரியங்கள் செய்யணும் மாமா?” எனக் கேட்டான். ராஜகுமாரனின் குரல் சற்று தெளிந்திருந்தது.
“முதல்ல போலீஸ்க்கு தகவல் கொடுக்கணும். அவங்க சொன்ன பிறகு ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போகணும். அங்க வேலை முடிஞ்சதும், இறுதி சடங்குகளுக்கான ஏற்பாட்டிற்கு நேரம் பார்த்துட்டு, எல்லாருக்கும் தகவல் சொல்லணும். அப்படியே இன்னைக்கு ஒருநாள் எல்லா கடைகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிடலாம்ப்பா” என்று பொறுமையாக கூறினார்.
“இன்னைக்கு கடைக்கு லீவு விட வேண்டாம் மாமா. நமக்கு ரெகுலர் கஸ்டமர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. கண்டிப்பா இந்த ஆடி மாசம் புது கலெக்ஷன், ஆஃபருக்காக நம்ம கடையை தேடி வருவாங்க. சில பேரு வெளிநாட்டில இருந்து வருவாங்க. இந்த நேரத்துல கடையை மூடினா அவங்களுக்கு ஏமாற்றமா போய்ரும். அந்த மக்களாலத்தான நாங்க வாழ்க்கையில உயர்ந்தோம். மக்களுக்காக கடை திறந்திருக்கட்டும். இந்த ஆடி மாசம் முடியட்டும், ஒரு நாள் பார்த்து, அண்ணனுக்காக அன்னைக்கு அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விட்டிடலாம்.
சங்கர் போலீஸ்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லு. சிவா… அண்ணனுக்காக சடங்கு செய்ய ஐயரை அழைச்சிட்டு வா” என்று உத்தரவிட்டான்.
முதற்கட்டமாக, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் உடனடியாக வந்து ராஐவர்மனை புகைப்படம் எடுத்தார்கள்.
ராஜகுமாரனை தனியாக அழைத்தார் காவலதிகாரி. “சார் எதுக்காக சூசைட் பண்ணிக்கிட்டாங்கனு உங்களுக்கு காரணம் தெரியுமா?” எனக் கேட்டார்.
“என்ன காரணம்னு எனக்கு தெரியலை. எந்தவொரு பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட அண்ணன் சொல்லிருவாங்க. ஆனா, ஏன் இப்படி பண்ணாங்கனு தெரியாம நான் தவிச்சிட்டு இருக்கேன்.
கடையில ஆடி ஆஃபர் போயிட்டு இருக்கு. இன்னைக்கு கடைக்கு கூட அண்ணன் வரலை. இல்லைன்னா எப்பவுமே அண்ணன்தான் முதல்ல கடைக்கு கிளம்புவாங்க. நான் கொஞ்சம் லேட்டாத்தான் கிளம்புவேன். நேத்து என்னை முன்னாடி போக சொன்னாங்கனு நான் கிளம்பி முதல்ல போனேன். கொஞ்ச நேரத்தில இப்படி பண்ணிட்டாங்க” என்று மிகுந்த வருத்ததுடன் கூறினான்.
“உங்களுக்கு இந்த வீட்டுல, கடையில, தொழில்ரீதியா யார் மேலையாவது சந்தேகம் இருக்கா?” என்று வழக்கமான கேள்வியை கேட்கவும்,
“சத்தியமா எங்களுக்கு எதிரியோ, துரோகியோ யாருமே இல்லை. எங்ககிட்ட வேலை பார்க்கிற எல்லாரையும் எங்க கூட பிறந்த தம்பிங்களாதான் நாங்க நினைப்போம். அவங்களும் எங்ககிட்ட அப்படித்தான் நடந்துக்கிட்டு இருக்காங்க. இதுநாள் வரை ஒரு பிரச்சினையும் எங்ககிட்ட வேலை பார்க்கிறவங்களால எங்களுக்கு வந்ததே இல்லை. அதுனால யாரையும் சந்தேகப்பட எனக்கு தோணலை” என்று தயக்கமின்றி பதிலளித்தான்.
காவலதிகாரி யோசித்தவண்ணமிருக்க, “தயவுசெய்து அண்ணன் பெயரை கலங்கப்படுத்தாம, அதிகபடியான கடனின் காரணமா தற்கொலை செய்து கொண்டார்னு எழுதிருங்க. நான் உங்ககிட்ட கெஞ்சி கேட்டுக்கிறேன் சார் ப்ளீஸ்…” என்று காவலதிகாரியிடம் கையெழுத்து கும்பிட்டு கேட்டான்.
ஒரு நிமிடம் யோசித்த முகமாக இருந்த காவலதிகாரி, “போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும். அப்புறம் நாம பேசுவோம் ஏன்னா எந்த காரணமும் இல்லாம ஒருத்தர் தற்கொலை செய்துக்க வாய்ப்பே இல்லை. அதான் எனக்கு கொஞ்சம் சந்தேகத்தை கொடுக்குது” என்று கூறிவிட்டு அகன்றார்.
அவனுள்ளும் அதே சந்தேகம்தான் அண்ணனை இழந்த துயரத்தின் இடையிலும் அவனை நிம்மதியாக இருக்கவிடாமல் இந்த சந்தேகம் அவ்வப்போது அவனின் மூளையில் குடைந்தது. விடை தெரியாது யோசித்தவண்ணமிருந்தவன், வெங்கடேசன் அழைப்பிற்கிணங்க, அவரை காண சென்றான்.
அடுத்தகட்டமாக ராஜவர்மன் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்து சென்று மருத்துவர்களிடம் பேசினான். ஒவ்வொரு நடைமுறையும் அவனுக்கு புதிதாக இருந்தது. ஆனால், ராஜவர்மனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற எண்ணம் அவனைத் தாங்கி பிடித்து அவனை செயல்பட வைத்தது.
ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரும் ராஜகுமாரனுக்கு துணை நின்றார்கள். சங்கரும், சிவாவும், அவனுக்காக எல்லா உதவிகளையும் மின்னல் வேகத்தில் செய்து கொடுத்தார்கள்.
மருத்துமணையில் பிரதே பரிசோதனை முடிவில், மருத்துவரை பார்க்க வெங்கடேசன், சங்கர் மற்றும் சிவாவுடன் சென்றான் ராஜகுமாரன்.
“புல்லட்… அவர் மூளைய சிதைச்சிருச்சி. அதனால அவர் உயிர் பத்து நிமிஷத்துல உடலைவிட்டு பிரிஞ்சிருச்சிருக்கு. அப்புறம், அவர் நேத்து இரவு அளவுக்கு அதிகமா ட்ரிங் பண்ணிருக்கிறாரு. அவர் கழுத்துல உடம்புல வேற யாருடைய கை தடம் எதுவும் இல்லை. பைனலி, சூசைட் அட்மெண்ட்டுனு ரிப்போர்ட் எழுதியிருக்கேன்” என்று மருத்துவர் கூறவும்,
விபரம் கேள்விப்பட்டதும் ராஜகுமாரனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. “அண்ணனுக்கு குடிக்கிற பழக்கமே கிடையாது டாக்டர். நீங்க அளவுக்கு அதிகமா குடிச்சிருக்காங்கனு சொல்றிங்க?” என்று சந்தேகமாய் கேட்டான்.
“உண்மைத்தான் சார் அவர் குடிச்சிருக்காரு. அவர் வயித்தை க்ளீன் பண்ணும்போதும், அவர் பிளட்டிலும் ஆல்கஹால் கலந்திருக்கிறதை டெஸ்ட் பண்ணிட்டுத்தான் சொல்றேன்” என்று மருத்துவர் கூறவும்,
‘அண்ணன் தற்கொலை செய்து கொண்டதையே எதிர்பாராத மற்றும் நம்பமுடியாத ஒரு அதிர்ச்சியா இருக்கிறது. இப்ப… அவனுக்கு குடிபழக்கம் வேறு இருந்திருக்கிறதா? அண்ணன் தனக்கு தெரியாம ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறானா?’ என்று எண்ணி மனதிற்குள் அதிர்ந்தவன், “ஓ…க்கே டாக்டர்” என்றான் மங்கலான குரலில்.
“அவர் ஏதோ மனஅழுத்துல இருந்திருக்கணும் அதனாலதான் அளவுக்கு அதிகமா ட்ரிங் பண்ணிருக்காரு. சூசைட்டும் பண்ணிக்கிட்டாரு. அவருக்கு என்ன பிராப்ளம்? ஏன் இப்படி பண்ணிட்டாரு?”
இந்த கேள்விக்கு ராஜகுமாரனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவனுக்கே காரணம் தெரியவில்லையே…
“பிஸ்னஸ்காக அதிகப்படியா கடன் வாங்கிட்டான் டாக்டர். அதனாலத்தான் இந்த முடிவை எடுத்துட்டேன் போல” என்று வெங்கடேசன் பதில் கூற,
“தற்கொலை எதுக்கும் தீர்வு கிடையாதுனு எங்களால முடிஞ்சளவுக்கு நாங்க கேம்ப் போடுறோம். ஆனா, இது யாருக்கும் போய் சென்றடையுறதில்லைனு சில நேரம் இவரை மாதிரியான, ஒரு சாதித்த நபரோட முடிவுல நினைக்க தோணுது” என்றார் வருத்ததுடன் மருத்துவர்…
நால்வரும் அமைதியாக இருந்தார்கள். குறிப்பாக ராஜகுமாரன் அதிர்ச்சியில் உறைந்திருந்தான். ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத்தான் அவன் தாங்கி கொள்வான்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
உங்க லைக் அண்ட் கமெண்ட்ஸை மறக்காமல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். தினமும் ஒரு அத்தியாயம் பதிவிடுகிறேன். மறக்காமல் அட்டெண்ட்டன்ஸ் போட்டுருங்க. பை…
அன்புடன்
சாய்லஷ்மி.