“அத்தியாயம் 02”
காரில் மௌனம் மட்டுமே ஆட்சிப்புரிய அவனும் எதுவும் பேசவில்லை.
அவளும் அவனுக்குப் பயந்து எதுவும் பேசவில்லை.
ஆனால் அவளது கண்களோ விடாமல் கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தது.
“ப்ச்ச் அழுகைய நிறுத்திறியா எப்பப்பாரு அழுதுகிட்டு இரிடேட்டிங்”
அவன் உறும அவனது உறுமலின் வீரியத்தில் அவளது கண்ணீரும் வற்றிப் போனது.
இவளோ கண்களை உருட்டி உருட்டி அழுகையை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவனோ அதன் பின்னர் எதுவும் பேசவில்லை.
ஒரு மணித்தியாலத்தில் கார் அந்த அப்பார்ட்மென்ட்டை வந்தடைந்தது.
காரை நிறுத்தி விட்டு திரும்பி அவளைப் பார்க்க அவளோ இருக்கையில் சாய்ந்து இடது பக்கமாக தலை சாய்த்து தூங்கியிருந்தாள்.
ஏனோ அவளை எழுப்பத் தோன்றவில்லை.
முழுதாக அவள் பக்கம் திரும்பி மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக அவளை பார்த்தான்.
சிறிய நெற்றி, ஒப்பனைக் கலைஞர்களின் உதவியின்றி கடவுளால் இயற்கையாகவே த்ரேடிங் செய்யப்பட்டு சேர்ந்திருக்கும் புருவங்கள்.
மூடிய விழிகளைப் பார்த்ததும் உணர்ந்துக் கொள்ள முடியும் முட்டைக் கண் என்று அதற்கேற்றார் போல் பெரிய விழிகள் அதைப் பாதுகாக்கும் நீண்ட இமை முடிகள்.
நீண்ட சிறிய மூக்கு அதில் ஒய்யாரமாக மின்னிக் கொண்டிருந்தது மூக்குத்தி. அதற்குக் கீழ் சிறிய இதழ் தூக்கக் கலக்கத்தில் அதை சுளித்துக் கொண்டு படுத்தாள்.
இதழுக்கு சற்று கீழாக இடது பக்கத்தில் நானும் இருக்கிறேன் என்று கூறும் வகையில் சிறிய மச்சம்.
சிறிது உப்பிய மாசற்ற கன்னம் உணர்த்தியது இவள் இருபது வயதான விபரமற்ற பேதை என்று.
மாநிறத்திற்கும் சற்று குறைந்த நிறம்.
ஆனால் அழகி.
அவளை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு அவள் என்றும் பேரழகி தான்.
அவளை அங்குல அங்குலமாக பார்த்தான் இவன் அவனது பார்வையில் என்ன இருந்தது காதலா?காமமா?வன்மமா?ரசனையா? அது அவனுக்கே வெளிச்சம்.
எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும் பத்து நிமிடம் போல் இருந்தவன் லேசாக அவளது தோளைப் பிடித்து உளுக்க.
“ப்ப்ச்ச் இன்னம் கொஞ்ச நேரம் அத்த”
என சிணுங்கிக் கொண்டு மறுபக்கம் திரும்பியவளது தலை இருக்கையில் இருந்து நழுவ அவனது தோளைக் கொடுத்து தாங்கினான் அவளது தலையை.
அதில் இன்னும் லாவகமாகப் படுத்தவள் அவனது புஜத்தில் முகத்தைத் தேய்க்க ஆடவன் என்ன நிலைமையில் இருக்கிறான் என அந்த ஆண்டவனுக்கு மாத்திரமே தெரியும்.
அவனது கைகள் அவளது தோளை சுற்றி பாம்பு போல் படர அது அவனுக்கு வேண்டுமென்றால் இளகிய பிடியாக இருக்கலாம் ஆனால் காரிகையவளுக்கோ அது இரும்புப் பிடியாக இருந்தது வலியில் முகத்தை சுளித்தவள் கடினப்பட்டு இமைகளை திறக்க தனக்கு மிக அருகில் அவனது முகத்தைக் கண்டவள் திடுக்கிட்டுப் போய் விலக அவன் எங்கே விட்டான்?
“அது … தூக்..கம்”
திணறியது வார்த்தைகள்.
“வா”
உரைத்தவன் அவளிடமிருந்து விலகி காரிலிருந்து இறங்க மாரடைப்பு வருவதற்குப் போல் படுவேகமாகத் துடித்த இதயத்தைப் பிடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள் காரை விட்டு இறங்கினாள்.
எத்தனை மாடிகள் என்று எண்ணுவதற்குக் கூட முடியாத அளவு எண்ணற்ற மாடிகளைக் கொண்டிருந்தது அந்த அப்பார்ட்மென்ட்.
தலையை உயர்த்திப் பார்த்தவள் தலை சுற்றிப் போனாள்.
வானைத் தொடுமளவு கட்டிடங்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.ஆனால் வானை மிஞ்சிவிடுமளவுக்கு உயர்ந்து காணப்படும் கட்டிடத்தை பார்த்தவள் திகைத்தாள்.
“ஹேய் என்ன வாயப் பொலந்துட்டு இருக்க வா”
பின்னால் முதுகுக்கு மிக அருகில் தனது கழுத்தில் மூச்சுக் காற்றுப்படுமளவுக்கு அவன் நெருங்கிக் கூறவே தடுமாறி அவனிடமிருந்து விலகியவள் தலையைக் குனித்துக் கொள்ள இவன் தோளை உளுக்கிக் கொண்டு முன்னே செல்ல அவனுக்கு பின்னால் சென்றாள் நேத்ரா.
அவனது நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிறுபிள்ளைப் போல் ஓடியவள் அவனது நடை திடீரென தடைப்பட அவனது முதுகில் சென்று மோதினாள்.
“பார்த்து வரமாட்டியா”
கூறியவனை அவள் எங்கு பார்த்தாள் தலையை குனித்துக் கொண்டாள்.
“நீ இரு கார்ல என்னோட ஃபோன் இருக்கு எடுத்துட்டு வாரேன்”
எனக் கூறியவன் காரை நோக்கி நடக்க தனித்து விடப்பட்டவள் திரு திருவென விழித்தாள்.
அது இரவு நேரம் என்பதால் வெளியில் பெரிதாக யாரும் நடமாடவில்லை.
ஒரு சில பேர் அழைப்பேசியினுள்ளே தலையைப் புதைத்துக் கொண்டு சென்றனர்.
இவள் தான் அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்குத் தான் இந்த ஊர், ஊர் மக்கள் என அனைத்தும் புதிதே!!
ஏன் தனக்கு தாலி கட்டியவன் கூட புதிதே!!
ஏதேதோ சிந்தித்தவள் பெருமூச்சொன்றை விட.
“வா போலாம்”
என வந்து நின்றான் அக்ஷரன் பின் அவனும் அவளுடன் சேர்ந்து அவளது நடைக்கு ஈடாக மெதுவாக நடக்க அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் என்ன நடக்கப் போகின்றது எனக் காத்திருந்துப் பார்க்கலாம்!!
ஒரு ப்ளேட்டிற்கு முன்னால் வந்து நின்றவன் அதைத் திறந்து உள்ளே போக இவள் தான் போவோமா வேண்டாமா என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருந்தாள்.
பின்னே திருமணம் முடிந்து வந்திருக்கிறாள் ஏனோ வெறுமையாக உணர்ந்தாள்.
பின் மெதுவாக வீட்டிற்குள்ளே பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மேடமக்கு பாக்கு வெத்தில வெச்சி கூப்ட்டா தான் உள்ளே வருவிங்களோ”
அவன் காட்டமாகக் கேட்க அவனது குரலில் உள்ளே உதறல் எடுக்க எதுவும் யோசிக்காமல் வலது காலை எடுத்து வைத்து வந்தாள்.
அவள் எங்கு அறிவாள் அவனது குரலே அப்பிடி தான் என்று.
அவனோ அவள் உள்ளே வந்ததும் வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்றான்.
இவளுக்குத் தான் அந்த வீட்டைப் பார்த்ததும் மலைப்பாக இருந்தது.
அல்ட்ரா மாடர்ன் வீடு அது.
கறுப்பு மற்றும் அவளது விருப்ப நிறமான வெள்ளையிலே வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அனைத்துப் பொருட்களும் கறுப்பு&வெள்ளை நிறங்கள் தான்.
வரவேற்பறையானது மிகப்பெரியதாக இருந்தது.
அதில் வீற்றிருக்கும் ஸோபாவாவில் இருந்து அங்கு அழகுக்காக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி வரை கறுப்பு மற்றும் வெள்ளை தான்.
வித்தியாசமானது தான் ஆனால் அழகாக இருந்தது.
அந்த வீட்டை பார்த்ததுமே ஊகிக்க முடியும் வீட்டின் உரிமையாளர் ரசனை மிக்கவர் என.
அதை நினைத்துப் பார்த்ததும் இதழ்கள் கேலியில் வளைந்தது.
அவ்வளவு ரசனை மிக்கவர் பார்க்கக் கூட முடியாத அளவு அசிங்கமாக இருக்கும் தன்னை எதற்கு மணம் முடிக்க வேண்டும்.இது தான் அவளது எண்ணவோட்டம்.
வீட்டை சுற்றி விழிகளை சுழல விட்டாள்.
மூன்று அறைகள் பார்த்ததும் விளங்கியது மூன்றும் மூன்று ஊர் தங்கக் கூடிய அளவு பெரிய அறை என்று.
அங்கு காணப்பட்ட சமயலறையைப் பார்த்ததும் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகள் நடைபெறும் சமையலறை போல் அவ்வளவு அழகாக நவீன தரத்தில் காணப்பட்டது சமயலறை.
அதற்கு கொஞ்சம் பக்கத்தில் பெரிய பால்கனி.
அழகான பூக்கள் அவ்விடத்தையே அலங்கரித்திருந்தன.
மொத்தத்தில் வீடு நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது.
வீட்டைச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவளது கவனத்தை தடை செய்தது கதவு மூடப்படு்ம் சத்தம்.
அவன் தான் கறுப்பு நிறத்தில் முழு நீண்ட கை டீஷேர்ட் போட்டு அதை முழங்கை வரை உயரத்தி விட்டு சாம்பல் நிறத்தில் bபொட்டம் அணிந்து வெளியே வந்தான்.
வெளியே வந்தவன் அங்கு ஒருத்தி இருப்பதையே கவனிக்காமல் வெளியேறினான்.
கதவை வேறு பூட்டிக் கொண்டு செல்ல இவளுக்கு பக்கென்றது.
தனித் தீவில் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும் அந்த நிலையில் தான் அவள் இருந்தாள்.
“எங்க போறாங்க”
எனத் தொண்டைக் குழி ஏற இறங்க அவன்சென்று இரண்டு நிமிடத்தில் தான் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
கையைப் பிசைந்துக் கொண்டு அங்கே நின்றிருந்தவளுக்கு அழுகை வந்தது.
இதழ் கடித்து அழுகையை கட்டுப்படுத்த கண்ணீரோ நான் கட்டுப்பட மாட்டேன் என்பது போல் உருண்டு விழுந்தது கன்னத்தில்.
என்ன செய்வது ஏது செய்வது என அறியாமல் திருவிழாவில் பெற்றோரை இழந்த குழந்தைப் போல் விம்மி விம்மி அழுதாள்.
ஞானவேல் மற்றும் தேவகியின் நீண்ட கால தவத்தினால் கிடைக்கப் பெற்ற தவப்புதல்வனே அக்ஷரன்.
நேத்ராவின் தந்தை தாசனும் தாய் சந்தனாவும் காதலித்த போது வீட்டினர் ஜாதியைக் காட்டி ஒத்துக் கொள்ளாத போது ஊரை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களது காதல் சின்னமாக சந்தனா கருவுற்றாள்.
சந்தனாவின் ஐந்தாவது மாதத்தில் காதல் கணவன் விபத்தில் உயிர் விட்டார்.
பின் தனது உதிரத்தை இவ்வுலகிற்கு கொண்டு வந்து விட்டு தன் காதல் கணவனைத் தேடி சந்தனாவும் இவ்வுலகை விட்டு இறையடி சேர அவர்கள் இருவரும் ஊருக்கு வந்த போது நட்புக்கரம் நீட்டிய ஞானவேல் மற்றும் தேவகியிடம் தனது சிசுவை தனது இறுதி நிமிடத்தில் ஒப்படைத்த திருப்தியில் அவர் இவ்வுலகை விட்டு நீங்க.
அன்றிலிருந்து நேத்ராவிற்கு பெற்றோராகிப் போனர் இருவரும்.
அக்ஷரன் சிறு வயதில் நேத்ராவுடன் நன்றாகப் பழகினப் போதும் ஓரளவு விளங்குகின்ற வயது வந்ததும் அவளிடமிருந்து விலகினான் பின் அவளைப் பார்த்தாலே எரிந்து விழுவான்.
அவளும் அவனுக்குப் பயந்து அவன் முன்னால் செல்வதைக் குறைத்துக் கொண்டாள்.
பின் அவனது மேற்படிப்புக்காக வெளியூர் சென்றான்.
அங்கையே வேலையும் தேடிக் கொள்ள இவளும் ஊரில் உள்ள பாடசாலையில் ப்ளஸ் வன் வரைப் படித்தாள்.
படிப்பு அவ்வளவாக ஏறாத போது ஞானவேலும் பெண் பிள்ளை அவ்வளவு படிக்கத் தேவையில்லை என்று விட்டுவிட்டார்.
இறுதியாக அவன் மேற்படிப்புக்குச் செல்லும் போது பார்த்தவள் பின் இன்று மணமேடையில் தான் அவனைப் பார்த்தாள்.
எதை நினைத்து அழுதாளோ அழுதாள் அழுதாள் அழுதாள் அழுதுக் கொண்டே இருந்தாள்.
கதவுத் திறக்கப்படும் சத்தத்தில் அழுகை பட்டென நின்றது அங்கு ஒரு நான்கு பையுடன் உள்ளே நுழைந்தான் அவன்.
அவளுக்கோ அவன் உள்ளே வந்ததும் தான் நிம்மதியாக இருந்தது.
அவனும் அவளைத் தான் பார்த்தான்.
கண்ணீர் கன்னத்தில் வற்றாமல் இருக்க அதை பார்த்தவன் அவள் இப்பொழுது அழுதிருக்காள் என்று உணர்ந்தான்.
எதுவும் பேசாமல் அவளிடம் வந்தவன் கையில் இருக்கும் பைகளை அவளிடம் நீட்ட அவளோ வாங்காமல் அவனை தான் பார்த்தாள்.
“உனக்கான ட்ரெஸ் போய் சேன்ஞ் பன்னிட்டு வா”
இதை வாங்கியே தீர வேண்டும் என்ற ரீதியில் அவன் நீ்ட்டிக் கொண்டிருக்க மறுக்க முடியாமல் அதைப் பெற்றுக் கொண்டு அவனைப் பார்க்க.
“என்ன”
“எ..ங்க”
எங்கு சென்று மாற்ற வேண்டும் என கேட்க நினைத்து அரைவாசியில் நிறுத்த அதை உணர்ந்தவன்.
அங்கிருந்த இன்னொரு அறைக்குள் செல்ல அவனைப் பின்த் தொடர்ந்தாள்.
உள்ளே சென்றவன் அங்கு ஒட்டிக் காணப்படும் குளியறைக்குள் நுழைய இவள் விழித்தாள்.
“உள்ள வா”
குரல் வந்தது இவளுக்கு பக்கென்று இருந்தது மறுத்தால் திட்டி விடுவானோ என்ற எண்ணத்தில் தயங்கிக் கொண்டு உள்ளே நுழைய.
அவனோ எந்தவித தயக்கமுமின்றி அவளது கையைப் பிடித்து இழுத்தான்.
இவளுக்குத் தான் உடல் சில்லிட்டுப் போனது பயத்தில் உடல் நடுங்க ஆரம்பிக்க.
“இத இப்பிடி யூஸ் பன்னு இத இப்பிடி திருப்பு இத இப்பிடி ஓஃப் பன்னு ஆன் பன்ன இத ப்ரஸ் பன்னு”
நவீன குளியறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது என சொல்லிக் கொடுக்க.
அவன் சொன்னது அனைத்தும் காதில் விழுந்தாலும் அவனது கைக்குள் சிறைப்பட்டிருக்கும் தனது கையை எடுப்பதிலே குறியாக இருந்தாள்.
அதை உணர்ந்தவன் கையைவிட்டு விட்டு அவளை அழுத்தமாகப் பார்த்து விட்டு.
“குளிச்சிட்டு வா நா வைட் பன்றேன்”
எனக் கூறி வெளியேற இவளுக்குத் தான் அவன் எதற்காக அவ்வாறு கூறினான் என யோசித்துக் கொண்டிருந்தவள்.
தலையை உழுக்கி அதை அப்புறப்படுத்தியவள் கையிலிருந்த பையில் காணப்பட்ட ஆடையை எடுத்தாள்.
வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற அலங்காரம் செய்யப்பட்ட அழகான டாப்பும் அதற்கேற்ற துப்பட்டாவும், கறுப்பு நிறத்திலாலான லெgகினும் இருந்தது.
பின் மற்ற பையை திறக்க அதில் அவளுக்குத் தேவையான அனைத்து உள்ளாடைகளும் இருந்தது.
அதுவும் அவளுக்கு ஏற்ற அளவில் அதைப் பார்த்ததும் முகம் குப்பென்று வியர்க்க அத்துடன் இதயம் தாறுமாறாகத் துடித்தது.
******
தொடரும்..♥
ஸ்டோரி எப்பிடின்னு சொல்லுங்க போகப் போக கத சூடு பிடிக்கும்😉
💜அஷு💜