அத்தியாயம் : 16
பெருமாளிடம் கேட்டு ஒவ்வொரு காய்கறியையும் எப்படி எந்தவாக்கில் நறுக்க வேண்டும் எனக் கேட்டு விரைவாக செய்து முடித்துவிட்டு, “அடுத்து என்ன செய்யணும் அங்கிள்?” எனக் கேட்டாள் தேவயானி.
எல்லா வேலைக்கும் ஆட்கள் இருக்கவும், அவளுக்கு என்ன வேலை கொடுப்பது எனத் தெரியாது தவித்தவர், சாப்பாடு மேஜையில் பூக்கள் இருப்பதை பார்த்துவிட்டு, “நீ சாமி கும்பிடலாம்ன்னா, பூவை எடுத்து தம்பி படத்துக்கும், விளக்குக்கும் போட்டு தீபத்தை ஏத்தும்மா” என்றார்.
நடுகூடத்தின் மையத்தில் ஆள் உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்த ராஜவர்மன் புகைப்படத்தை பார்த்துவிட்டு, ஒரு கணம் மனதிற்குள் வருந்தியவள், நாற்காலியில் ஏறி அவனது புகைப்படத்தை மேலே இருந்து கீழே வரை துடைத்துவிட்டு, மாலை அணிவித்து, விளக்கிற்கு பூ போட்டு, விளக்கு ஏற்றி, வாசனை ஊதுபத்திகளை ஏற்றும்போது, அறையிலிருந்து வெளியே வந்த ராஜகுமாரன் கண்ணில் அவள் பட்டாள்.
வெளியில் கிளம்பும் போது அண்ணனை வணங்கிவிட்டு செல்வதுதான் அவனது பழக்கம். அதன்படி ராஜவர்மன் புகைப்படத்தின் அருகில் அவன் வந்தபோது, அவனை கண்டதும் அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டாள் தேவயானி.
வழக்கம்போல தன்னை வளர்த்து ஆளாக்கியதற்கும், தன்னை நம்பி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி தந்ததற்கும் நன்றி கூறிவிட்டு, ‘நீதான் எப்பவும் எனக்கு துணையாக இருக்கணும். நீதான் எனக்கு மகனாக வந்து பிறக்கணும். நீ என்னை வளர்ந்தது போல, நான் உன்னை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவேன். அப்புறம், உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த ஸ்வேதாவை கண்டுபிடிக்க சீக்கிரம் ஒரு வழியை நீதான் காட்டணும். அப்போதுதான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று மனதிற்குள் வேண்டிவிட்டு சாப்பாடுமேஜையின் அருகில் உள்ள நாற்காலியில் வந்தமர்ந்து, “மாமா… ஒரு காப்பி” என்று குரல் கொடுத்தான்.
அறையிலிருந்து வெளிவந்த தேவயானி, காப்பி கோப்பை அவனிடம் நீட்டிவிட்டு, “குட் மார்னிங் சார்” என்று தயக்கத்துடன் கூறினாள்.
அவனோ எதுவும் கூறாது அவள் நீட்டிய தட்டில் இருந்து கோப்பையை எடுத்து கொண்டான்.
“சார் ஒரு ஹெல்ப்… கன்னியாகுமரியில என் ஓர்ஜினல் சர்டிபிகேட், ட்ரெஸ் இதலாம் ரென்டல் ரூம்ல இருக்கு. அதை எடுக்கணும் சார். எனக்கு போட்டுக்க வேற ட்ரெஸ் இல்லை” என்று மெல்லிய குரலில் கோரிக்கை வைப்பது போல பவ்வியமான குரலில் கூறினாள்.
அமைதியாக இருந்தவன், பட்டென்று, “குமார்…” என்று உரைக்க அழைத்தான்.
அவன் கணீரென்ற குரல் கேட்டு தேவயானி அதிர்ந்துவிட, அவர்கள் முன்பு வந்து நின்றான் குமார்.
“இந்த பெண்ணோட திங்க்ஸ் கன்னியாகுமரியில இருக்கு. அதை எடுத்து கொடுத்திரு” என்று அவனுக்கு உத்திரவிட்டான்.
“கன்னியாகுமரியில பஸ்ஸாண்டுக்கு பக்கத்தில் சரஸ்வதி பெண்கள் விடுதி. ரூம் சாவி என் பர்ஸ்ஸில் இருக்கு. என் பர்ஸ் சங்கர் அண்ணன்கிட்ட இருக்கு” என்று பட்டென்று தகவலை கூறினாள் தேவயானி.
“ஓக்கேம்மா நான் பார்த்துக்கிறேன்” என்றான் குமார்.
அவ்வளவுத்தான் பேச்சு முடிந்துவிட்டது என்பது போல அவ்விரு ஆண்களும் அமைதி கொள்ள, சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் தேவயானி.
சில நொடியில் காப்பி கோப்பையை கையில் ஏந்தியவாறு சமயலறைக்குள் வந்த ராஜகுமாரன், “அச்சச்சோ! என்ன அங்கிள் பார்த்து செய்ய கூடாதா? இப்படி ரத்தம் வருதே?” என்று பெருமாளின் கைவிரலில் ஏற்பட்ட காயத்தை பார்த்து துடித்தவளாக, அருகில் இருந்த ஒரு துணியை எடுத்து அவரது கையில் கட்டிவிட்டாள்.
அவர்களை கண்ட ராஜகுமாரன், “என்ன மாமா ஆச்சி?” எனக் கேட்டான்.
“ஒன்னுமில்லைப்பா. பச்சைமிளகாய் நறுக்கும்போது விரல்ல கத்தி பட்டிருச்சி. நீ கிளம்பிட்டீயா?”
“ஆமாம் மாமா சாப்பாட்டை கடைக்கு கொடுத்துவிடுங்க” என்று ராஜகுமாரன் கூறி கொண்டிருக்க, அடுப்பில் மேல் கொதித்து கொண்டிருந்த ரவா பச்சடி அடிபிடிக்க ஆரம்பிக்கவும், கரண்டி கொண்டு கிளற ஆரம்பித்தாள் தேவயானி.
“சரிங்க மாமா முடிஞ்சா சமையல் செய்ங்க. இல்லன்னா நான் கடையில கூட சாப்பிட்டுகிறேன்” எனக் கூறிவிட்டு ராஜகுமாரன் நகர்ந்ததும்,
“அங்கிள் நீங்க இருங்க நான் சமைக்கிறேன். எனக்கு சமைக்க தெரியும் அங்கிள். எதாவது டவுட் வந்தா, உங்ககிட்ட கேட்கிறேன் சரிங்களா?” என்றவள், பச்சடியை தயார் செய்து, அவனுக்கு கொடுத்துவிடும் பாத்திரத்தில் மாற்றி வைத்தாள்.
ராஜகுமாரனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, மற்ற வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினார் பெருமாள்.
தானும் சாப்பிட்டு, அடுத்து மதியத்திற்கு சமைக்க வேண்டிய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் தேவயானி. ஏதோ மிகப்பெரிய கவலையில் இருந்து விடுப்பட்ட உணர்வுடன் மனதிற்குள் நிம்மதியை உணர்ந்தாள்.
அவள் ஸ்வேதா இல்லை தேவயானி என்று அறிந்து கொண்டதும், ராஜகுமாரனை தவிர, அவளை தவறாக பேசியவர்களும், அவளை கை நீட்டி அடித்தவர்களும், அவளது காலில் விழாத குறையாக தனிதனியாக வந்து மன்னிப்பு கேட்டனர்.
தன்னிடம் ராஜவர்மனை பற்றி விசாரித்ததை தவிர, கன்னியமாக நடந்து கொண்ட அவர்களது நல்ல குணத்தை புரிந்து கொண்ட தேவயானியோ, அவர்கள் மன்னிப்பு கேட்டதும் உடனடியாக அந்த மன்னிப்பை ஏற்று கொண்டாள். அதனால் எதையும் மனதில் வைத்து கொள்ளாது, அனைவரிடமும் நல்லவிதமாக பேச ஆரம்பித்தாள்.
தினமும் மூன்று வேளையும், அனைவரும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று மனமார நினைத்தவள், நானே மூன்று வேளையும் சமையல் செய்கிறேன் என்று பெருமாளிடம் அடம்பிடித்து சமையல் செய்தாள். அவர்கள் வீட்டு நடைமுறைப்படி, அவள் சமைத்த சாப்பாடு அனைவருக்கும் பிடித்து போனது.
“என்ன மாமா, வரவர உங்க சமையல் ருசியா இருக்கு?” என்று இயல்பாக கேட்பது போல, சிறிது நையாண்டியும் கலந்த உண்மையாக பாராட்டும் நிறைந்த குரலில் கேட்டான் குமார்.
“நான் செய்யலடா. தேவயானிதான் சமைச்சிச்சு” என்று பெருமாள் கூறவும்,
“அதான் நல்லாயிருக்கா?” என்று வழக்கம்போல அவரிடம் வம்பிழுக்க ஆரம்பித்தான்.
“படவா ராஸ்கல்! அப்ப… இவ்வளவு நாளும் என் சமையல் நல்லா இல்லைனு சொல்றியா?” என்று கோபமாக கேட்டார். அவரது கோபம் கூட ஏதோ செல்லமாக திட்டுவது போலத்தான் குமாருக்கு தோன்றியது. அவர்களை கவனித்து கொண்டிருந்த தேவயாணிக்கும் அப்படித்தான் தோன்றியது.
“அப்படி சொல்ல முடியாது மாமா. ஆனால், இந்த பொண்ணு சமையல் நல்லாயிருக்குனு சொல்ல முடியும்” என்றான் இதழோரமாய் சிரித்தவாறு.
“உனக்கு இனிமேல சாப்பாடு கிடையாதுடா. நீ வெளியில சாப்பிட்டுக்க. நான் தம்பிக்கிட்ட சொல்லிக்கிறேன். ரொம்ப நையாண்டி பண்றான். இவனுக்கு சாப்பாடு போட முடியாதுன்னு,”
“மாமா… உனக்கு வயசாயிருச்சு. கண்ணு சரியா தெரியாம நீ பாட்டுக்கு உப்பையும் உரப்பையும் அள்ளிப்போட்டு, எங்களை சாகடிக்க பார்க்கிறனு அண்ணன்கிட்ட நான் சொல்லி உன் சீட்டைக் கிழிக்கவா?”
“உன்னால முடிஞ்சா… என் சீட்டை கிழிடா பார்ப்போம்” என்று ஏதோ சண்டைக்கு செல்பவர் போல அவர் கேட்க,
“மாமா… முடியாதுன்னு சொல்றியா?” என்று சண்டைக்குத் தயாராக அவனும் கூற,
தேவயானிக்கு இவர்கள் இருவரின் அன்பான சண்டையை பார்க்க சிரிப்புதான் வந்தது. புன்னகையுடன் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
“முதல்ல, உன் அண்ணனுக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கட்டி வைங்கடா. எவ்வளவு நாள் நானே அவனுக்கு சமைச்சு போடுறது? நான் இனிமேல சமையல் பொறுப்பை வரப்போற பொண்ணுகிட்ட கொடுத்துட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்” என்று சலிப்பாய் பெருமாள் கூறவும்,
“யோவ்! அண்ணிகிட்ட பொறுப்பை கொடுத்துட்டு நீ என்ன இங்க பண்ண போற?”
“நீயே எந்த வேலையும் பார்க்காம தெண்டத்துக்கு சாப்பிட்டுட்டு வீட்டில இருக்கும்போது, இவ்வளவு நாள் உங்களுக்கெல்லாம் உழைச்சு கொட்டியிருக்கேன். எனக்குத் தம்பி சாப்பாடு போட மாட்டானா?”
“ஊருக்கே சாப்பாடு போடுறவரு உனக்கு சாப்பாடு போடாம விடுவாரா? நீ வேற இத்தனை வருஷம் உழைப்பை உப்புமாவா செஞ்சு கொட்டியிருக்க. அதனால, தினமும் உனக்கும் அண்ணன்கிட்ட சொல்லி உப்புமாவா போட சொல்லிடுறேன்” என்று அடக்கமாட்டாமல் சிரித்தவாறு குமார் கூற.
“உப்புமாவா… எனக்கு வேண்டாம்” என்றார் அலறல் குரலில்,
“அப்புறம் எதுக்குய்யா வாரத்துக்கு நாலு தடவை உப்புமா போட்டு எங்களை சாகடிக்கிற?”
“உன் அண்ணனுக்கு உப்புமா பிடிக்கும்னுதான்டா அடிக்கடி செய்ய வேண்டியிருக்கு. ஆனால், உப்புமா செய்ற அன்னைக்கெல்லாம் நான் சாப்பிடாம பட்டினியாகக்கூட இருந்திருவேன். எனக்கு உப்புமாவே பிடிக்காது,” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்துக்கொண்டு கூறினார்.
அவரது கையை பிடித்து, “மாமா… ஸாரி மாமா. உனக்கு உப்புமாவை தவிர வேற எதுவும் செய்ய தெரியாதுன்னு, உன்னை தப்பா நினைச்சு… நம்ம பையலுககிட்ட உன்னை கன்னாபின்னானு திட்டிட்டேன்”
பெருமாள் அவனை முறைத்துப் பார்த்தார்.
“ஏன் மாமா? குமார் அண்ணனுக்கு உப்புமான்னா இவ்வளவு பிடிக்குது? எனக்கு தமிழ் மொழியில் மட்டுமில்லை, சமையலிலும் பிடிக்காத ஒரே பெயர் உப்புமாதான். நானும் அன்னைக்கு சாப்பிட மாட்டேன்” என்றான் குமார்.
அவ்வேளையில் தன் வீட்டிலும் தந்தையும் உப்புமா சாப்பிட மாட்டார். அவருக்கும் உப்புமா பிடிக்காது என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் தேவயாணி.
“சின்ன வயசில ராஜாவுக்கு சமைக்க தெரியாதாம். கையில இருக்கிற கொஞ்சம் காசுக்கு ஏத்தபடி எப்படி சமைக்கணும்னு அப்ப அவங்க இருந்த… பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட கேட்டுத்தான் சமைப்பானாம். அந்த பாட்டிதான் காசு கம்மியாவும், சீக்கிரமாவும் சமைக்கிற மாதிரி உப்புமா செய்ய சொல்லி கொடுத்துச்சாம். அதனால அடிக்கடி உப்புமாதான் செய்வானாம் ராஜா. அப்படி சாப்பிட்டு பழகித்தான் உப்புமான்னா குமார் சாப்பிட்டுக்குவான்”
“இப்ப… ராஜா இறந்ததுக்கு அப்புறம் குமார் சரியாவே சாப்பிடுறதில்லை. ஒருவேளை உப்புமா வச்சாவது அண்ணனுக்காக சாப்பிடுவானு நினைச்சு செஞ்சேன். நான் நினைச்ச மாதிரி கொஞ்சம் கூட மீதி வைக்காம சாப்பிட்டிருக்கான். குமார் எப்பவும் அவன் அண்ணனையும் பழசையும் மறக்க மாட்டான். நல்ல பையன்” என்று கவலை படிந்த, உணர்ச்சி ததும்பும் குரலில் பெருமாள் கூறி முடித்தார்.
தேவயானியும், குமாரும் சோகமே உருவெடுத்ததுபோன்று அவர்மீது பார்வையைப் பதிந்திருந்தார்கள்.
“தேவயானி அக்கா, அதான் அந்த பிசாசு எப்ப நம்மகிட்ட மாட்டுறாளோ? அன்னைக்குத்தான் குமார் பழையபடி நல்லா சாப்பிடுவான், தூங்குவான்னு நினைக்கிறேன்” என்று பெருமாள் சொல்லவும், தேவயானிக்கு மனதிற்குள் குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“அதுமட்டுமல்ல மாமா. அவளை கண்டுபிடிச்ச பிறகுதான் குமார் அண்ணன் கல்யாணம் பண்ணிக்குவாரு. நாங்களும் அண்ணன் கல்யாணம் பண்ண பிறகுதான் கல்யாணம் பண்ணிக்குவோம். அவள் கிடைக்க எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை. நாங்க அண்ணனுக்காக கல்யாணம் பண்ணாமல் முரட்டு சிங்கிளாக காத்திருப்போம்” என்றான் உணர்ச்சி ததும்பும் குரலில் குமார்.
இவ்வளவு அன்போடு, இத்தனை ஆட்கள் கூட இருக்கிறவங்க மத்தியில் இருந்து, இறந்த ராஜாவை தற்கொலை செய்யத் தூண்டுற அளவுக்கு ஸ்வேதா அப்படி என்ன செய்தாள்? என்ற யோசனை இயல்பாக தேவயானிக்கு வந்தது. “அங்கிள் நான் கேட்கிறேனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க. ராஜா சாரை தற்கொலை பண்ணிக்க வைக்கிற அளவுக்கு ஸ்வேதா அப்படி என்ன பண்ணா?” என்று கோபமாகவும், கேள்வியாகவும் அவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
அவளது கேள்வியில் பெருமாளுக்கு கோபம் வந்துவிட, “ஹ்ம்ம்… எங்க பையனை காதலிக்கிற மாதிரி நடிச்சு, கார் நகை பணம்னு வாங்கிட்டு, கல்யாணம் பண்ணலாம்னு கேட்டதும், நான் உங்களை பிரண்டாத்தான் நினைக்கிறேனு, எங்க பையனை கழற்றிவிட்டுட்டா. அதனால பையன் அப்செட்டாகி குடி பழக்கமே இல்லாதவன் குடிச்சிருக்கான். அப்புறம், அவள் ஏமாத்திட்டாள்ன்ற ஒரு விரக்தியில தற்கொலை பண்ணிக்கிட்டான். சொல்லப்போனா, அவளோட தங்கச்சிங்கிறதுக்காகவே உனக்கெல்லாம் சாப்பாடே போட கூடாது. நான்லாம் உன் அக்கா மேல அப்படியொரு வெறியில இருக்கேன்” என்று பட்டென்று கோபமாகச் சொல்லிவிட,
தேவயானுக்கு மெல்ல கண்கள் கலங்க ஆரம்பித்தன.
அவளது கண்களில் கண்ணீர்த் துளிகளைக் கண்ட பின்னர், குமாருக்கு வருத்தமாகிவிட்டது. “யோவ்… அந்த பிராடுகாரி மேல உள்ள கோபத்தை இந்த அப்பாவி பொண்ணு மேல ஏன்யா காட்டுற? சொல்லப்போனா, அப்படியொரு மோசமான பிறவிக்கு இவ்வளவு நல்ல பொண்ணு தங்கச்சியா வந்து பிறந்திருக்குன்னு நீ இந்த பொண்ணை வாழ்த்தணும்யா” என்று தேவயானிக்காக வக்காலத்து வாங்கினான்.
அவர்கள் வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்த உரையாடலை, வாசலுக்கு அருகில் இருந்த அறையினுள், ஜன்னலின் அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த ராஜகுமாரன், குமார் கூறிய வார்த்தையை எவ்வாறு மனதிற்குள் எடுத்துக்கொள்வது எனத் தெரியாமல் குழம்பினான். ‘அவள் நல்லவளா? இல்லை ஏமாற்றுவாதியா?’ என்று ஒரு கணம் குழம்பினான்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்…
ஸ்வேதா எப்படி சிக்குவாள் என்ற ஐடியா இருக்கிறதா? உங்கள் கருத்துக்களை லைக் அண்ட் கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்கவும்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.