அத்தியாயம் : 20
இன்வெஸ்டிகேஷன் ஆனந்தும் அவனது ஆட்களும் அந்த மர்ம நபருடன் ராஜகுமாரனின் பங்களாவை அடைந்தனர்.
வாசலில் நின்றிருந்த குமார், அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான். ஸ்வேதாவும், அவளது தாயும் அடைக்கப்பட்டிருந்த அதே மாடி அறைக்கு அந்த நபரை அழைத்து சென்று ஒரு நாற்காலியில் அமரவைத்து, தப்ப முடியாதபடி கயிற்றால் பலமாக கட்டினான்.
சில நொடியில் ராஜகுமாரனின் காரும் பங்களாவின் வாசலில் வந்து நின்றது. படபடவென்று உள்ளே நுழைந்தவன், வரவேற்பறையில் நின்ற ஆனந்திடம், “எங்க அவன்?” என்று தன் கோபத்தை மறைக்காமல் கேட்டான்.
“உங்க ஆளு குமாருதான் மாடிக்கு கூட்டிட்டு போனான் சார்” என்றான்.
தன்னையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தவனிடம், “நீங்க நாளைக்கு என் ஆபிஸ் வாங்க” என்று கூறிவிட்டு, பதற்றமும் ஆவேசமும் ஒருசேர பற்றி கொள்ள, மாடி படிகளை இரண்டு படியாக தாவி ஏறி அறைக்குள் நுழைந்தான் ராஜகுமாரன்.
அங்கே கட்டப்பட்டு கிடந்த அந்த நபரை பார்த்ததும், ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவனது முகத்தில் சரமாரியாகப் பளார் பளார் என்று அறைந்தான்.
அடிகள் முகத்தில் விழவும் வலி தாங்காமல் அலறிய அந்த நபர், “சார்… எதுக்கு சார் என்னை அடிக்கிறிங்க? நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று சத்தமாகக் கத்தினான்.
அவனது காலரைப் பிடித்துத் தன் முகத்திற்கு நேராக இழுத்த ராஜகுமாரன், கண்களில் அக்னி கக்க, “எதுக்குடா என் அண்ணனை கொன்ன?” என்று கர்ஜித்தான்.
ராஜகுமாரனின் அந்த மிரட்டலான குரல் மாடி அறை முழுவதிலும் எதிரொலிக்க, மூலையில் நடுங்கிப் போய் நின்றிருந்த ஸ்வேதாவிற்கும் சரளாவிற்கும் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.
‘இவன் எதுக்காக ராஜாவை கொன்றான்? இவனுக்கும் ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று குழப்பமும் பயமும் கலந்த மனதுடன் அவர்களை உற்று நோக்கினாள் ஸ்வேதா.
தேவயானியும் நடுங்கி போய் ராஜகுமாரனை பார்த்தாள்.
அடி வாங்கியதனால் உதடு கிழிந்து இரத்தம் வழிய, “ஐயோ சார்! நான் ஒன்னும் உங்க அண்ணனை கொல்லலைங்க! இதோ இந்த மூலையில் நிக்கிறாளே… இவளை பழிவாங்கத்தான் அன்னைக்கு நான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன்!” என்று திடுக்கிடும் உண்மையை கூறினான்.
அதிர்ந்துபோன ராஜகுமாரன், “இவளை எதுக்குடா நீ பழிவாங்கணும்?” என்று தன் பிடியை தளர்த்தாமல் கேட்டான்.
“அன்னைக்கு இவளும் உங்க இறந்துபோன அண்ணனும், நான் வேலை செய்ற பப்புக்கு வந்திருந்தாங்க. உங்க அண்ணனுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை போல. ஆனால், இவள் அவரை வற்புறுத்தி குடிக்க வச்சா. அவரோ வேண்டா வேண்டானு தடுத்து பார்த்தாரு. இவள் விடாம கொஞ்சி பேசி அவரை குடிக்க வச்சா. அதை பக்கத்துல இருந்து பார்த்த எனக்கு அவரை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது.
மேடம், அவர்தான் வேணானு சொல்றாருல, பாவம் அவரை விட்டுடுங்க. குடி பழக்கம் ரொம்ப ஆபத்தானதுனு… நான் நாகரிகமா இவள்கிட்ட சொன்னேன்.
ஆனா… நான் சொன்னதை போய், நேரா எங்க பப் ஓனர்கிட்ட சொல்லி, என் மேல புகார் கொடுத்துட்டா. இதனால ஓனர் என்னை வேலையை விட்டு தூக்கிட்டாரு.
எனக்கு இரண்டு தங்கச்சிங்க சார். அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்ச கடன் இருக்கு. கடன் கட்ட முடியாம இதுநாள் வரை ஒரு வேலை இல்லாமல் தவிச்சுட்டு இருக்கிறேன் சார்” என்று கண்ணீர் மல்க கூறினான்.
‘அதானே பார்த்தேன் அண்ணனுக்கு குடிக்கிற பழக்கமே இல்லையே? அண்ணனை குடிக்காரனாக்கி இவள் பக்கம் இழுத்துக்கலாம்னு நினைச்சிருக்கா?’ என்று மனதிற்குள் எண்ணியவாறு, ஸ்வேதாவை பார்த்து முறைத்தான்.
அவளோ… அவன் பார்வையை சந்திக்க பயந்து தலை குனிந்து கொண்டாடள்.
“மேல சொல்லு?”
“உங்க அண்ணன் இறந்த அன்னைக்கு, இந்த தெருவுல இருக்குற பத்தாம் நம்பர் வீட்டுல டிரைவர் வேலைக்கு ஆள் தேவைனு வேலை கேட்டு போயிட்டு இருந்தேன். அப்ப… இந்த வீட்டு வாசல்ல, உங்க அண்ணனோட கார் நிக்கிறதை பார்த்தேன். பப்ல என்னை கேவலமா வேலை விட்டு தூக்க காரணமான… இவள் இந்த வீட்டுலதான் இருக்காளான்னு நினைச்சு, எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறிடுச்சு. வீட்டுக்குள்ள புகுந்து இவளை ஏதாவது பண்ணிரணும் அல்லது நம்ம லோன் கட்ட எதாவது நகையோ பணத்தையோ எடுத்துட்டுப் போயிடலாம்னுதான் உள்ள நுழைஞ்சேன்.
ஆனா… உங்க அண்ணனை துப்பாக்கியால சுட்டது நான் இல்லை சார்! சத்தியமா நான் இல்லை!” என்று கத்தினான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்பட்டமான உண்மையாக தெரிந்தது. அவனது முகத்தில் இருந்த பயமும், அவன் கூறிய சூழ்நிலையும் அவன் பொய் சொல்லவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியது.
ஆனால், அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ராஜகுமாரனுக்கு பைத்தியமே பிடிப்பது போன்ற ஒரு பிரம்மை உண்டானது. அவன் சொல்வது உண்மையானால், அண்ணனைக் கொன்ற உண்மையான குற்றவாளிதான் யார்? மர்மமும் குழப்பமும் அவனது மூளையை கவ்வி கொள்ள, செய்வதறியாமல் திகைத்து நின்றான்.
அறையில் நிலவிய அந்த நிசப்தம், ஒரு குண்டூசி கீழே விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருந்தது. அனைவரும் ராஜகுமாரனையே பார்த்து கொண்டிருந்தனர்.
ராஜகுமாரனின் முகம் கோபத்தின் உச்சகட்டத்தால் விறைத்துப் போய், அந்த பப் ஊழியனை நோக்கி குவிந்தது. அவனது கண்களில் கொப்பளித்த கேள்விக்கு வடிகால் தேடியவன், தன் குரலை இயன்றவரை தாழ்த்தி, மிக அமைதியான ஆனால் உறுதியான தொனியில், “என் அண்ணனை துப்பாக்கியால சுட்டது யார்னு உனக்கு தெரியுமா? அன்னைக்கு அப்படி என்னதான் நடந்தது? உண்மையை சொல்லு… உண்மையை மட்டும்தான் சொல்லணும் ம்ம்ம்…” என்று மிரட்டும் தோணியில் கேட்டான்.
அந்த நபர் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு, தன்னை சமன் செய்துவிட்டு பேச தொடங்கினான். “நான் வீட்டின் பின்பக்க வழியாதான் உள்ள வந்தேன். அப்ப… கீழிருந்த ஒரு ரூமோட கதவு திறந்திருந்தது. உள்ள வந்தேன். அடுத்த நிமிஷம் யாரோ நடந்து வர்ற சத்தம் கேட்டுச்சு. பயந்து போய் உடனே கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுகிட்டேன். வந்தவர் யார்னு எனக்கு முகம் தெரியலை. ஆனா… அந்த ஆள் நின்றுகொண்டிருந்த போது அவரோட இடது கால்ல ஒரு பெரிய தழும்பு இருக்கிறதை என்னால தெளிவா பார்க்க முடிஞ்சது.”
அவன் சொல்லி முடித்த அந்த விநாடி, அங்கிருந்த சங்கர் சட்டென்று, “ம்ம்ம்… அது எங்க பெருமாள் மாமா. அவருக்குத்தான் இடது கால்ல பெரிய தழும்பு இருக்கு” என்றான்.
அவன் சொன்னதை கேட்டதும் அறையில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் அதிர்ச்சியுடன் பெருமாளின் மீது விழுந்தது. ஆனால், பெருமாளோ முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல், ஒருவிதப் பதற்றத்தை மறைத்தபடி நின்றிருந்தார்.
“ஆமாம்… அந்த ஆள்தான் நேரா அலமாரியை திறக்கிற சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான்…”
உடனே குறுக்கிட்ட பெருமாள், பதறியடித்துக் கொண்டு, “நான்… நான் தம்பி சட்டையெல்லாம் மடிச்சு வைக்கிறதுக்காகத்தான் தம்பியோட ரூம்க்குள்ள வந்தேன்!” என்று திக்கித் திணறித் தன்னை நியாயப்படுத்த முயன்றார்.
ஆனால், அந்த பப் ஊழியன் உடனே அவரை நோக்கி விரல் நீட்டி, “இல்லை… பொய்! நீங்க சொல்றது அப்பட்டமான பொய்!” என்று உரத்த குரலில் கத்தினான்.
“இந்த ஆள் அலமாரியில இருந்து பணத்தை எடுத்துட்டு இருந்தான். அப்ப… திடீர்னு பாத்ரூம்ல இருந்து இறந்து போன… இவரோட அண்ணன் வெளிய வந்துட்டாரு. உங்க பெருமாள் மாமா… அவர்கிட்ட கையும் களவுமா மாட்டிக்கிட்டாரு!
மாமா பண்ண காரியத்தைப் பார்த்து அதிர்ந்து போனவரு, என்ன காரியம் பண்ண துணிஞ்சிட்டீங்க மாமா?
அப்படின்னு கேட்டு கோபப்பட்டாரு.
அதுக்கு உங்க மாமா, தம்பி என்னை மன்னிச்சுருங்க… எனக்கு என் மகனை காப்பாத்த வேறு வழியே தெரியலைனு சொல்லி அழுதாரு.
உடனே இவரு அண்ணன், அவனை கெடுக்குறதே நீர்தான் மாமா. முதல்ல உம்மைத்தான் முதல்ல திருத்தணும். அவன் கொஞ்ச நாள் ஜெயில்ல இருந்துட்டு வரட்டும். அப்புறம் நம்ம கம்பெனியில ஏதாவது வேலை கொடுக்கலாம் அப்படின்னு சொன்னாரு.
ஆனா, உங்க மாமா விடலை. இந்த ஒரு தடவை உதவி பண்ணுங்க தம்பி, உங்க கால்ல வேணா விழுகிறேனு கெஞ்சினாரு.
அதுக்கு இவரு அண்ணன், நீங்க போங்க மாமா, இந்த உதவியை என்கிட்ட நீங்க எதிர்பார்க்காதிங்க. நான் செய்ய மாட்டேன். அவன் செஞ்ச தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்க வேண்டியவன்தான்னு ரொம்ப கண்டிப்பா சொல்லிட்டாரு.
உடனே உங்க மாமா டிராயரில் இருந்த துப்பாக்கியை எடுத்து, என் குடும்பமானமே போயிரும். அதை பார்த்திட்டு, நான் உயிரோட இருக்கிறதுக்கு பதிலா நான் என்னை சுட்டுக்கிட்டு சாகுறேனு, இவரு அண்ணன்கிட்ட சொன்னாரு.
அதுக்கு அவரு, மாமா நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க… சொல்லிட்டு அவரை தற்கொலை பண்ணிக்க விடாம தடுத்தாரு. அந்த வாக்குவாதத்துல, அந்தப் போராட்டத்துல திடீர்னு துப்பாக்கியில இருந்த குண்டு வெடிச்சு, இவரு அண்ணன் ரத்த வெள்ளத்துல கீழே விழுந்துட்டாரு!
அதை பார்த்து அதிர்ந்துபோன உங்க மாமா, உடனே துப்பாக்கியை ஒரு துணியை வச்சு துடைச்சுட்டு, இவரு அண்ணன் கையில வச்சுட்டாரு. அப்புறம் அங்க இருந்த பணத்தையும் எடுத்துக்கிட்டு, பின்பக்கக் கதவு வழியா ஓடிட்டாரு.
நான் இதையெல்லாம் கட்டிலுக்கு அடியிலிருந்து உறைஞ்சு போய் கேட்டுட்டு இருந்தேன். அவரு போனதுக்கு அப்புறம் நான் வெளியே வரும்போது என் கை அந்த துப்பாக்கியில பட்டிருச்சி. அந்த சமயம் கதவு வேற தட்டுற சத்தம் கேட்டது.
நான் பார்த்தப்ப இவரு அண்ணனோட உயிர் பிரிஞ்சிருந்தது. இனிமே இவரை காப்பாத்த முடியாதுன்னு, நானும் அதே பின்பக்க கதவு வழியா வெளியே தப்பிச்சு ஓடிட்டேன் சார்.
இதுதான் சார் அன்னைக்கு உண்மையா நடந்த விஷயம். நான் இந்த பொண்ணை பழிவாங்கத்தான் இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சேனே தவிர, உங்க அண்ணனை கொல்லணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்லை சார்!” என்று மூச்சுவாங்க கூறி முடித்தான்.
அவன் பேசி முடித்ததும், மாடி அறை முழுவதும் ஒரு பயங்கரமான பேரதிர்ச்சி அலை பரவியது. அனைவரின் பார்வையும் இப்போது நடுங்கிப் போயிருந்த பெருமாளின் மீது பாய்ந்தது. ராஜகுமாரனின் கண்கள் கோபத்தில் இரத்தச் சிவப்பாக மாறி, அந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் துடித்தது.
“த…ம்பி அது நானே எதிர்பார்க்கலை. இல்லைன்னா… நம்ம ராஜாவை நானே கொல்வேனா?” என்று தனிந்த குரலில் கூறியவர் மறுகணம்,
“நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் தம்பி என்னை மன்னிச்சிரு” என்று ராஜகுமாரன் காலில் வந்து விழுந்து அழுதார்.
“ஏன்ய்யா… இவ்வளவு நாளும் எத்தனை முறை அண்ணனுக்கு என்னாச்சினு எப்படியெல்லாம் நாங்க துடிச்சோம், தவிச்சோம் அப்பலாம் வாய்யை முடிட்டு எங்களோட நீயும் நல்லவன் மாதிரி கூட்டத்தோடு கோவிந்தா போட…. உனக்கு எப்படிய்யா மனசு வந்தது?” என்று குமார் கேட்க,
“ஹே நீ சும்மா இரு. டெய்லியும் நான் மனசுக்குள்ள செத்து பொழைச்சிட்டு இருந்தேன்” என்றார் பெருமாள்.
“என்ன செத்து பொழைச்ச? மூணு வேளையும் மூக்கு புடிக்க சாப்பிட்டுட்டு இருந்த. இப்ப இந்த ஆள் உண்மையை சொல்லலைன்னா… இன்னும் நீ உண்மையை சொல்லாமத்தான இருந்திருப்ப” என்று அவரை திட்டினான் சங்கர்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
இந்த திருப்பத்தை நீங்கள் எதிர்பார்த்திங்களா? என்று லைக் அண்ட் கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்கவும்