அத்தியாயம் : 22
தான் தங்கியிருந்த அறையில் இருந்து, துணிமணிகளை எடுத்து, தான் கொண்டு வந்த பையில் வைத்து கொண்டாள் தேவயானி. கிளம்புவதற்கு முன்பு, அவளை அறியாமலேயே, அவளது கால்கள் ஸ்வேதாவும் அவளது தாயும் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகில் சென்றன. தன் வாழ்க்கையை சிதைக்க பார்த்த அந்த சதிகாரர்களை நினைத்து, அவளுக்குள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் எழுந்தது.
அவர்கள் இருக்கும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவளை கண்டதும், ஸ்வேதாவும், சரளாவும், அவளை ஒருவித ஏளனமான பார்வையுடன் பார்த்தனர்.
அவர்களது அந்த பார்வையும் திமிரும் தேவயானியின் கோபத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. கோபமும், ஆவேசமும் ஒருசேர பொங்க, “ஏன்டி கெடுகெட்ட நாய்களா! நீங்க கெட்டதுமில்லாம, சூழ்ச்சி பண்ணி என்னையும் கெடுக்க பார்த்திங்களே… நீங்களெல்லாம் நல்லா இருப்பீங்களா?” என்று, அவர் இருவரும் நாக்கை பிடுங்கி கொண்டு சாகிற மாதிரி, நாலு வார்த்தை கேட்க வேண்டும் ஆத்திரத்துடன் கத்தினாள்.
ஆனால், ஸ்வேதாவோ துளியும் குற்ற உணர்ச்சியின்றி, “அம்மா… ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லாதவ என்னம்மா நம்மகிட்ட பேசுற பாரு?” என்று தேவயானியை ஏளனமாய் பார்த்தவாறு தாயிடம் கூறினாள்.
அதை வழிமொழிவது போல சரளா நக்கல் சிரிப்புடன், “நீயும் உன் அண்ணக்காவடி ஆத்தா, அப்பாவோ… இப்பாவோனு இழுத்துட்டு கிடக்கிற உங்க அப்பனும், காசு இல்லாம ஒருநாள் ரோட்டுல பிச்சை எடுக்க போறீங்க. அதை நாங்க கண்கூடா பார்க்கத்தான் போறோம். அப்படி ஒரு பரிதாப நிலைமை, உங்களுக்கு சீக்கிரமே வந்தா, எங்களை வந்து பாரு. எங்ககிட்ட இருக்கிற பணத்துல இருந்து, ஏதாவது உனக்கு பிச்சை போடுறோம்” என்றாள்.
அவர்களது பேச்சை கேட்டு முகம் சிவந்த தேவயானி, “ச்சீ… அந்த பணம் யாருக்கு வேணும்? சீக்கிரமே அந்த பணத்துக்கும் உங்களுக்கும், ஒரு பெரிய அழிவு வரும் பாருங்க” என்று சாபமிட்டாள்.
அதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறிய சரளா, “ஹே, சரித்தான் போடி! என் மகள் அழகுக்கும், அறிவுக்கும் அவள் இன்னும் கோடி கோடியா சம்பாதிப்பாடி” என்று பெருமையாக பேசினாள்.
“நீலாம் ஒரு தாயா? பெற்ற மகளை வச்சு இப்படிப் பணத்துக்கு அலைஞ்சு சம்பாதிச்சுட்டு இருக்கியே!” என்று தேவயானி அருவருப்புடன் கேள்வி கேட்டாள்.
தன் தாயை இழிவாகப் பேசியதை தாங்கி கொள்ள முடியாத ஸ்வேதா, “ஹே! எங்க அம்மாவை ஏதாவது பேசின, உன் வாயை உடைச்சிடுவேன்டி!” என்று கத்தியபடியே அவளை கட்டி வைத்திருப்பது அறிந்தும், அவளை நோக்கி கோபத்தில் பாய்ந்து எழ முயன்றாள்.
ஆனால், அன்று இருந்த கோழை தேவயானி இவள் அல்லவே… கட்டி போட்டிருந்த கயிறை அவிழ்த்து கொண்டு, வர முயன்ற ஸ்வேதாவின் அருகில் ஆவேசமாக சென்றவள், ஓங்கி அவளது கன்னத்தில் மாறிமாறி நாலு அறை அறைந்தாள்.
“இனிமே உங்களுக்கு பயப்படுற தேவயானி நான் கிடையாது. என்கிட்ட மறுபடியும் ஏதாவது வச்சுக்கிட்டிங்க… உங்களை உயிரோட கொல்ல கூட நான் தயங்க மாட்டேன். ஜாக்கிரதை!” என்று அவர்களை எச்சரித்துவிட்டு, அவர்களை திருப்பி பார்க்காது கீழே இறங்கி வந்தாள்.
கீழே அவளுக்காக காத்திருந்த குமார், அவளை பார்த்ததும், “போலாமாம்மா?” எனக் கேட்டான்.
“ஒரு நிமிஷம் அண்ணா… நான் சார்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு, ராஜகுமாரனை தேடி சென்றாள்.
அவனது அறையின் கதவு திறந்திருக்க, வெளியே நின்றுகொண்டு, “சார்… உள்ள வரலாமா?” என்று பணிவுடன் அனுமதி கேட்டாள்.
ஜன்னல் அருகில் நின்றுகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன், அவளது குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து, “வா” என்றான்.
உள்ளே நுழைந்தவள் தயக்கத்துடன் பேச தொடங்கினாள்: “சா…ர் நான் வந்து… முதல்ல நீங்க என்னை இந்த வீட்டுக்கு பலவந்தமா அழைச்சிட்டு வந்தப்ப… எப்படா இந்த வீட்டை விட்டு வெளியே போவோம்னு நினைச்சு அழுதிட்டு இருந்தேன்.”
இந்த வார்த்தையைக் கேட்டதும் ராஜகுமாரனுக்குள் ஒரு சிறு வருத்தம் மனதிற்குள் நிழலாடியது.
“ஆனா… இப்ப… இந்த வீட்டை விட்டு போக எனக்கு மனசே வரலை சார். எனக்கு இங்க பாதுகாப்பும், வீட்டு வேலை செய்றப்ப நிம்மதியும் கிடைச்சது. வேற எங்கேயும் இந்த சம்பளத்துல எனக்கு இப்படிப்பட்ட வேலை கிடைக்காது. நான்… நான் ஒரு இரண்டு நாள் போயிட்டு, என் அப்பா அம்மாவை பார்த்துட்டு வந்துடட்டுமா? அதுக்கப்புறம் இந்த வீட்டுல நான் சமையல் வேலை செய்யட்டுமா? எனக்கு இந்த வேலையை தருவிங்களா?” என்று மிகுந்த தயக்கத்துடனும் எதிர்பார்ப்புடனுடன் கேட்டாள்.
அவளது அந்த எளிய வேண்டுகோலை கேட்ட ராஜகுமாரன், ஒரு விநாடி கூட யோசிக்காமல், “சரி” என்றான்.
அவன் வார்த்தையை கேட்டு முகம் மலர்ந்தவள், “ரொம்ப தேங்க்ஸ் சார்” என கூறிவிட்டு, மகிழ்ச்சி ததும்ப வேகமாக கார் நிற்குமிடம் நோக்கி சென்றாள்.
அவளது முகத்தில் தெரிந்த அந்த தெளிவையும் மகிழ்ச்சியையும் பார்த்ததும், ராஜகுமாரனின் மனதிலிருந்த பாரம் ஏதோ கொஞ்சம் குறைந்தது போல உணர்ந்தவன், ‘சரி, இனிமேல் தொழிலை போய் கவனிக்கலாம்’ என்று நினைத்தவனாக, தன் காரில் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.
மறுபுறம், குமாருடன் காரில் ஏறி உட்கார்ந்த தேவயானி, “அண்ணா… சார்கிட்ட சமையல் வேலை கேட்டேன், எனக்கு மறுக்காம அந்த வேலையை கொடுத்துட்டாரு! இனிமேல சாருக்கு உப்புமா பண்ணும்போது, உங்களுக்கு பிடிக்கிற மாதிரி வேற சாப்பாடு செஞ்சு தர்றேன்” என்றாள் குதூகலமாக.
அவளது சந்தோஷத்தை கண்டு புன்னகைத்த குமார், “ரொம்ப நல்லதும்மா… அப்புறம், உங்க அப்பாவுக்கு ஆபரேஷன் இன்னும் ரெண்டு நாள்ல பண்ண போறாங்க. அதுக்கான பணத்தை அண்ணன் கட்ட சொன்னாரு, நான் பணத்தை ஹாஸ்பிட்டல்ல கட்டிட்டேன். ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதும் எனக்கு தகவல் சொல்லும்மா.”
“சரிங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்” என்றவள், அவள் பெற்றோர் இருக்கும் மருத்துவமனை வாசலில் கார் நின்றதும், இறங்கிவிட்டு கூறினாள்.
அவளிடம் தன் போன் நம்பரைக் கொடுத்த குமார், “எந்த உதவி தேவப்பட்டாலும் உடனே கூப்பிடும்மா யோசிக்காதே” என்றான்.
“சரிங்கண்ணா, பார்த்து போயிட்டு வாங்க” என்றவள், கார் கிளம்ப தயாரானதும் சட்டென்று அவசரகதியாக குமாரை அழைத்து, “அண்ணா… அந்த ஸ்வேதாவை மட்டும் எக்காரணம் கொண்டும் தப்பிக்க விட்டுடாதீங்க. அவளுக்குரிய சரியான தண்டனையை நம்ம சார்கிட்ட சொல்லி சீக்கிரமே வாங்கி தரணும்.”
“சரிம்மா… அவங்க எங்கேயும் தப்பிக்காம நான் பார்த்துக்கிறேன்” என்று உறுதியளித்த குமார், காரை ஸ்டார்ட் செய்து வேகமாக புறப்பட்டு சென்றான்.
மருத்துவமனை வரவேற்பரையில் தன் தந்தை பெயரை சொல்லி, அவர்கள் இருக்கும் அறையை கேட்டு அங்கு சென்றவள், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும், தன் தாயை ஓடிச் சென்று அணைத்து கொண்டாள்.
கிட்டத்தட்ட இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக பெற்றோரை பிரிந்து, பயத்திலும் தவிப்பிலும் வாழ்ந்தவள், தாயை அணைத்து கொண்டதும், கிடைத்த சந்தோஷத்தில், கண்களில் ஆனந்த கண்ணீர் மெல்ல அரும்பிய, கண்களை துடைத்து கொண்டாள்.
அன்னையின் தோளில் இருந்து முகத்தை விலகியவள், அருகில் படுத்திருந்த தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு, “அப்பா… உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றமும் அக்கறையும் கலந்த குரலில் கேட்டாள்.
மகள் தன்னைத் தேடி வந்து நின்றதை பார்த்ததும் அந்தத் தந்தையின் கண்கள் மெல்ல கலங்கின. “எனக்கு இப்ப பரவாயில்லைம்மா வலி குறைஞ்சிருக்கு. நல்லா மூச்சு விட முடியுது” என்றார் தழுதழுத்த குரலில்.
தேவயானியின் முகத்தில் தவழ்ந்த மலர்ச்சியையும் நிம்மதியையும் பார்த்த அவளது தாய் கற்பகம், “உங்க ஓனரோட அண்ணன் இறந்துபோனதுக்கு அந்த ஸ்வேதாவும் அவங்க அம்மாவும்தான் காரணமா?” எனக் கேட்டாள்.
இல்லை என்பது போல தலையை ஆட்டிய தேவயானி, “இல்லைம்மா… அதுங்க… அவர் இறந்து போறதுக்குக் காரணம் இல்லை. வேறொருத்தர்தான் காரணம்” என்று சொல்லிவிட்டு, பப் ஊழியன் மூலமாகத் தெரியவந்த உண்மைகளையும், பெருமாள் மாமா செய்த நம்பிக்கை துரோகத்தையும், அதன் பிறகு நடந்த பரபரப்பான சம்பவங்களையும் விளக்கமாக சொன்னாள்.
அவள் சொல்ல சொல்ல, கற்பகம் வாயை பிளந்து கொண்டு அதிர்ச்சியுடன் கேட்டாள். “அடக்கடவுளே! அந்த வீட்டுக்குள்ள இவ்வளவு பெரிய சதி நடந்ததா? அந்த ஆளு உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ண நினைக்கலாமா?” என்றவள், “ம்ம்ம்… மனுஷங்க எப்ப எப்படி மாறுவாங்கனே தெரியாது போல?” என்று புலம்பினாள்.
“ஆனா பாருங்கம்மா… அந்த ஸ்வேதாவும், அவ அம்மாவும் நம்மளை என்னவெல்லாம் கேவலமா பேசினாங்க தெரியுமா?” என்று அவர்கள் பேசியதை சொல்லிவிட்டு, “சார்கிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சாலும், அதுங்களுக்கு கொழுப்பு அடங்கலைம்மா!” என்று ஆவேசப்பட்டாள் தேவயானி.
அவளது கோபத்தை தணிப்பது போல, மகளது கைகளை பற்றி கொண்டு, “விடுடா… அதுங்க எப்படியும் தொலைஞ்சு போகுதுங்க. அதுங்களை பத்தி நாம ஏன் கவலைப்படணும்? இனிமேல அதுங்க தொல்லை நமக்கு வரகூடாதுன்னா. நாம… உங்க அப்பாவுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சதும், நம்ம சொந்த ஊருக்கே திரும்ப போயிடலாம். நம்ம ஊரு, நம்ம சொந்தக்காரங்க இருக்கிற இடத்துல, நம்மளை யாரும் வந்து ஒண்ணும் பண்ண முடியாது” என்றாள் உறுதியான குரலில்.
ஆனால் இந்த வார்த்தையைக் கேட்டதும் தேவயானியின் முகத்தில் ஒரு சிறு தயக்கம் நிழலாடியது. “ம்மா… எனக்கு ஊருக்கு போக விருப்பம் இல்லைம்மா. நான் அந்த சார்கிட்ட பேசி, அவரு வீட்டுலையே எனக்கு சமையல் வேலை கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருக்கேன்ம்மா! அந்த வீடு போல ஒரு நல்ல பாதுகாப்பான இடமும், இவ்வளவு மரியாதையான சம்பளமும் எனக்கு வேற எங்க போனாலும் கிடைக்காதும்மா. நீங்க வேணா ஊருக்கு போங்க. நான் வாரத்துல ஒரு நாள் லீவு கேட்டு வீட்டுக்கு வந்துட்டு போறேன், சரியா?” என்று கெஞ்சலாக கேட்டாள்.
“இல்லைம்மா… அதெல்லாம் முடியாது! நீயும் எங்களோட ஊருக்கு வந்திரணும், தனியா அங்க இருக்க வேண்டாம்.”
“அம்மா புரிஞ்சுக்கங்க… நமக்கு இருக்கிற கடனை எல்லாம் அடைக்கணும்ல? அதுக்கு இந்த சம்பளம்தான் கரெக்டா இருக்கும். அதுமட்டுமில்லாம, அங்க எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. அத்தனை பேர் பாதுகாப்பா பார்த்துக்குறாங்கம்மா. நான் அங்கேயே வேலை பார்க்கிறேன். அப்பா, நீங்களாவது அம்மாகிட்ட சொல்லுங்கப்பா” என்று பெற்றோரிடம் மாறி மாறி உரிமையுடன் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
மகளின் பேச்சில் இருந்த நியாயத்தையும், அவளது எதிர்கால பாதுகாப்பையும் யோசித்து பார்த்த அவளது தந்தை, சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, “அவள் அங்கையே வேலை பார்க்கட்டும் கற்பகம். அந்த ஓனர் நல்ல மனுஷனா தெரியுறாரு. இல்லன்னா.. எனக்கு ஆப்ரேஷன் பண்ண ஏற்பாடு பண்ணிருப்பாரா?” என்றார்.
கற்பகம் மறுத்து பேசாது அமைதியாக இருக்கவும், பெற்றோரின் சம்மதத்தை பெற்ற தேவயானியின் மனம் மலர்ந்தது.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.