28 – விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் :  28

ஜோதிடர் குறித்து கொடுத்த சுபதினத்தின்படி, “இன்னும் நான்கு வரம்த்தான் உன் கல்யாணத்துக்கு நாளு இருக்கு. அதனால, இன்னையிலிருந்தே திருமண வேலையை தொடங்கணும். பாதி பாதி வேலையா பிரிச்சிகிட்டாலும் சரி… இல்லைன்னா இப்பலாம்  ஆட்களை வரவேற்கிறதுல இருந்து சாப்பாடு பரிமாறுற வரை ஒரே கேட்டரிங் சர்வீஸ் பண்றாங்க. அவங்ககிட்ட பொறுப்பை ஒப்படைச்சாலும் சரி…” என்று வெங்கடேசன் கூற,

“இல்லை மாமா நம்ம சைடு ஆட்களை வரவேற்க உங்களை விட்டா யாரும் என்னகில்லை. நீங்க எல்லாரையும் வரவேற்க முடியாது. நாம எல்லாத்தையும் நடத்தி தர கேட்டரிங் சர்வீஸ் ஆட்கிட்டையே பொறுப்பை ஒப்படைச்சிடலாம்” என்றான் குமார்.

“அப்ப… இந்த சென்னை சிட்டியிலே நல்லா பண்ணித்தர கேட்டரிங் சர்வீஸ் யாருன்னு பார்த்து முதல்ல புக் பண்ணிருப்பா. ஏன்னா அன்னைக்கு நிறைய மூகூர்த்தம் இருக்கலாம்.. நாம எல்லாத்தையும் முதல்லையே அரேஞ்ச் பண்ணிடுறது நமக்கு நல்லது. அப்புறம் கடைசி நேரத்துல திண்டாட்டமா போய்ரும்ப்பா” என்றார் அனுபவம் வாய்ந்தவராய்…

“சரிங்க மாமா… முதல்ல கேட்டரிங் சர்வீஸ்க்கும் மண்டபத்துக்கும் இன்னும் இரண்டு நாள்ல ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றான் ராஜகுமாரன்.

“அப்புறம் எத்தனை பேரை அழைக்க போறனு ஒரு லிஸ்ட் போட்டு பத்திரிக்கை அச்சடிக்க கொடுக்கும்போது, தேவயானி வீட்டுக்கு எத்தனை பத்திரிக்கை வேணும்னு கேட்டுட்டு சேர்த்து கொடுத்திருப்பா” 

“சரிங்க மாமா” என்று தலையாட்டினான்.

இவ்வாறாக அவர் ஒவ்வொன்றாக சொல்ல, சொல்ல மனதிற்குள் குறித்து வைத்து கொண்டான்.

“ஊருக்கு போனதும் இரண்டு நாளைக்கு ஒருக்க உனக்கு கால் பண்றேன் சரியா… அப்ப நாங்க கிளம்புறோம்ப்பா. பத்திரிக்கை வந்ததும் சொல்லு. நம்ம சொந்தக்காரவங்களுக்கு பத்திரிகை வைக்க, நான் உன்கூட வர்றேன்” எனக் கூறிவிட்டு எழுந்தவர், மனையாளை பார்க்க அவளோ, தாங்கள் கொண்டு வந்த பையை அறைக்குள் இருந்து எடுத்து கொண்டு நடுக்கூடத்திற்கு வந்தாள். இருவரும் ராஜகுமாரனிடம் சொல்லி கொண்டு கிளம்பினார்கள்.

குமாரை அழைத்து அவ்விருவரையும், அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு வரும்படி பணித்தான் ராஜகுமாரன். 

மறுநாள் மதியம் சாப்பிட்டுவிட்டு ஓய்வாக அமர்ந்தவன், வெங்கடேசன் சொன்னபடியே, சென்னை நகரத்திலேயே முன்னனி மற்றம் மிக பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு, வாயில் நின்று விருந்தினர்களை வரவேற்பதிலிருந்து தொடங்கி, அவர்களுக்கு உணவு பரிமாறுவது, இறுதியில் வந்தவர்களுக்கு தாம்பூல பை கொடுக்கும், அத்தனை பொறுப்புகளையும் முழுமையாக ஒப்படைத்தான். 

அதேபோல், திருமணம் நடத்த ஒரு பிரம்மாண்டமான மண்டபத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அந்த இடத்தின் அழகிலும் வசதிகளிலும் மெய்சிலிர்த்துப் போய் உடனே முன்பதிவு செய்தான்.

அடுத்ததாக, தன் வாழ்க்கையின் மிக முக்கியமான விழாவிற்கு அழைக்க வேண்டிய விருந்தினர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் முழு மூச்சுடன் இறங்கியவன், “மாமா… எனக்கு நம்ம வீட்டு சொந்தங்கள் யாரும் தெரியாது. யாரை அழைக்கணும்னு… நீங்க ஒரு லிஸ்ட் போட்டு தர்றிங்களா?” என்று  வெங்கடேசனிடம் அன்பான குரலில் வேண்டுக்கோல் வைத்தான்.

அவரோ ‘சரி’ என்று ஒப்பு கொள்ளவும், அடுத்தடுதாக வீட்டு வேலைகள், ஆபிஸ் வேலை ஆட்கள், தொழில் வட்டார நண்பர்கள், காலேஜ் நண்பர்கள், முன்னாடி வேலை பார்த்த இடத்தில் உள்ள நண்பர்கள், தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கூட இருந்த நலம்விரும்பிகள் என்று அத்தனை பேரின் பெயரையும்  பட்டு பட்டென்று எழுதி கொண்டான். 

அச்சமயம் தேவயானி வீட்டு சார்பாக எத்தனை பேருக்கு பத்திரிக்கை வேண்டும் என்று அவளிடம் கேட்பதற்காக அவளது அலைபேசிக்கு அழைத்தான்.

“சொல்லுங்க சார்” என்று மறுபக்கம் தேவயானி கேட்கவும்,

“என்ன இன்னும் சார்னு கூப்பிட்டு இருக்க?” என்று சற்று உரிமையும் குறும்பும் கலந்த குரலில் கேட்டான்.

அவன் கேள்வியில் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தவள், “ம்ம்ம்… எப்படி கூப்பிடுறது?” எனக் கேட்டுவிட்டு திருதிருவென முழித்தாள்.

“உங்க அம்மா… உங்க அப்பாவை எப்படி கூப்பிடுவாங்க?” எனக் கேட்டான்.

“மாமானு கூப்பிடுவாங்க”

“நீயும் என்னை அப்படியே கூப்பிடு”

உடனே அவளது முகம் வெட்கத்தால் தக்காளிப் பழம் போல சிவந்துபோனது. “ம்ம்ம்… எனக்கு பட்டுனு அப்படி கூப்பிட ஏதோ போல இருக்கு. நான் வாங்க போங்கனு உங்களை கூப்பிடுறேன்.” எனக் கூறிவிட்டு இதழை கடித்து கொண்டாள்.

அவளது அந்த மழலைக் குரலையும் வெட்கத்தையும் நேரில் ரசிக்க முடியலையே என நினைத்தவன், “நீ என்னை மாமானு கூப்பிட்டா, உனக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் தருவேன். எங்க மாமானு கூப்பிடு???” என்று ஆசையாக கேட்டான்.

“இன்னொரு நாள் கூப்பிடுறேன்ங்க ப்ளீஸ்…” என்று தயக்கத்துடன் முனங்கினாள்.

அவளது வெட்கத்தை மேலும் சோதிக்க விரும்பாமல் விட்டுவிட்டவன், “சரி… உங்க வீட்டு சைடுல எத்தனை பேரை கல்யாணத்துக்கு அழைக்க போறிங்க. உங்களுக்கு எத்தனை பத்திரிக்கை வேணும்னு, வீட்டுல கேட்டு எனக்கு வாட்ச்ஆப் பண்ணு” என்றவன், ஒரு பெருமூச்சு விட்டு கொண்டு, “கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு. ந்யூயார்க்குல கடை ஆரம்பிக்கிற வேலை வேற பரபரப்பா போயிட்டு இருக்கு. எதை நான் பார்க்கிறது. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.

இப்ப… என் அண்ணன் மட்டும் இருந்தா… கல்யாண வேலையை அவங்களே பார்த்திருவாங்க. எனக்கு எப்பவுமே சிரமம் கொடுக்க மாட்டாங்க. எல்லாத்தையும் செஞ்சிட்ட பின்னாடித்தான், என்கிட்ட சொல்வாங்க. என் அண்ணனை நான் ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சற்று கரகரத்த குரலில் கூறினான்.

அவனை வார்த்தையை கேட்டு தேவயானி இதயம் கனகனத்தது. வருத்தம் நிறைந்த குரலில், “உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனு எனக்கு தெரியலைங்க. ஏன்னா… எனக்கும், உங்க அண்ணனை பத்தி தெரிஞ்சி பின்னாடி, தினமும் அவருக்கு விளக்கு ஏத்துற நேரம், மனசு ரொம்ப வருத்ததமா இருக்கும். அவருக்கு இப்படி நிலைமை வந்திருக்க கூடாதுனு மனசு துடிக்கும்” 

“எங்க அண்ணன்… எப்பவும் கலகலன்னு சிரிச்ச முகமா எல்லார்கிட்டேயும் பேசுவாங்க. அதனால அவங்களை சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும்” என்றான் பழைய நினைவுகளை அசைபோட்டவாறு…

“ம்ம்ம்”

“சரி… நான் போனை வைக்கிறேன். வேலை கெடக்கு” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ராஜகுமாரன்.

தேவயானியோ அவனுக்கு தான் உதவி செய்ய முடியாத நிலையை எண்ணி மனதிற்குள் வருந்தி கொண்டிருந்தாள்.

அச்சமயம், தேவயானி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதைப் பார்த்த  பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவர், வழக்கமான உரிமையோடு தேவயானியின் வீட்டின் வாசலுக்கு வந்து, “என்னங்க கற்பகம்… பாப்பாவுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? வேலைக்கு போகாம வீட்டுல இருக்கு?” என்று கேட்டார்.

“அய்யோ அப்படிலாம் இல்லைக்கா. தேவயானிக்கு கல்யாணம் முடிவாகிருக்கு” என்றாள் முகத்தில் புன்னகை தழும்ப கூறினாள் கற்பகம்.

“மாப்பிள்ளை யாரு?” என்று முகவாயில் ஆச்சரியத்துடன் கை வைத்து கேட்டாள்.

“நம்ம ஊருல ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ ஒரு பெரிய கடை இருக்குல. அந்த கடை ஓனருக்கும் நம்ம தேவயானிக்கும்தான் கல்யாணம். அங்கத்தான் பாப்பா வேலை பார்த்தா. அவளோட குணமும், சமையலும் அந்த ஓனர் தம்பிக்கு பிடிச்சிபோய், அவங்க வீட்டுல இருந்து வந்து பொண்ணு கேட்டாங்க. அவ்வளவு  பெரிய கோடிஸ்வர சம்மந்தம், மாப்பிள்ளையும் ரொம்ப தங்கமானவருனு,  நாங்களும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்” என்று பெருமையாக கூறினாள்.

அந்த கடை காஞ்சிபுரத்தில் ரொம்ப பெரிய பெயர் பெற்ற கடையாகிற்றே என்று மனதிற்குள் எண்ணியவள், “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டாள். 

“ஆமாம்க்கா… அடுத்த மாசம் 30ம் தேதி சென்னையில மண்டபத்துல வச்சு கல்யாணம்” 

“தேவயானி ரொம்ப நல்ல பொண்ணு. அது குணத்துக்கு ஏத்த சம்பந்தம்தான் அமைஞ்சிருக்கு” என்று சொல்லவும், கற்பகத்திற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

“நம்ம வீட்டு ஆட்களுக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து மூணு பஸ் அனுப்புறேனு சொல்லிருக்காங்க. நீங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடணும்க்கா” என்று அன்போடு அழைக்க,

“பஸ் விட்டிருக்காங்கன்னா…. கண்டிப்பா வந்துருவோம்க்கா” என்று உறுதியாக கூறினாள். 

திருமண செய்தி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருக்கும் தெருவிற்குள் பரவ ஆரம்பிக்க, சிலர் வீடு தேடி வந்து வாழ்த்தினார்கள். “பத்திரிக்கை வந்ததும் உங்க வீட்டுக்கு வந்து அழைக்கலாம்னு நினைச்சிருந்தேன் சித்தி. இன்னும் பத்திரிக்கை வரலை” என்றார் சிறிது சங்கடத்துடன்… பாஸ்கர்.

“அதனால என்னப்பா… நாங்க கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திருவோம்” 

இப்படியாக தேவயானி திருமண விஷயம்… ஏதோ ஒரு சொந்தகாரர்கள் மூலம், சரளாவிற்கு விஷயம் சென்றடைந்தது.

“அக்கா இருக்கும்போது தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணலாமா? சட்டு புட்டுனு ஸ்வேதாவுக்கு ஒரு நல்ல வரனா பார்த்து கட்டி வைங்கக்கா. உங்களுக்கும் வயசாகிட்டே போகுதில்ல” என்று அந்த உறவுக்கார பெண் சொல்லவும்,

“என் பொண்ணுக்கு நான் வெளிநாட்டுல ஒரு நல்ல வரனா பார்த்துட்டு இருக்கேன்” என்று பெருமையாக கூறியவள், ‘ஏன்னா… உள்ளூர்ல அவளை பத்தி தெரிஞ்சவனோ, இல்லை திருமணத்திற்கு பிறகு அவளை பற்றி தெரிந்துவிட்டால் அவளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவான். இதுவே ஃபாரின் மாப்பிள்ளையா இருந்தால் இங்கு இதலாம் சாதாரணம் என்பதால் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்க்கலாம்’ என்ற எண்ணத்தில் இருந்தாள் சரளா.

அன்னையின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த ஸ்வேதா என்ன விஷயம் என்று கேட்க, “ம்ம்ம்… நம்ம அடைச்சு வச்சிருந்தான்ல ராஜகுமாரன், அவனுக்கும் தேவயானிக்கும் கல்யாணமாம்” என்றாள் சலிப்புடன் சரளா.

“இவனுக்கு என்ன வேற பொண்ணே கிடைக்கலைய்யா. போயும் போயும் இந்த அன்னக்காவடியை போய் கல்யாணம் பண்ணிக்கிறான்” என்றாள் சலிப்பாக…

“அவள் அன்னக்காவடியா இருந்தாலும் அவனை  கல்யாணம் பண்ணிக்கிட்டா இனி கோடீஸ்வரிதான சொல்லு? அந்த வீடே அவ்வளவு பெரிசா அவ்வளவு அழகா இருந்தது. தமிழ்நாடு முழுக்க அவங்களுக்கு கடை வருமானம் வருது. எப்ப எவ்வளவு பெரிய கோடீஸ்வரியாக போறா.

இப்படியொரு சம்பந்தம் உனக்கு அமையலையேம்மா. அதுதான் அம்மாவுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.” என்று கண்கள் கலங்க கூறினாள்.

“அம்மா எனக்கு கல்யாணத்துல சுத்தமா விருப்பமில்லை. ஒருத்தனுக்கு அடிமையா வேலை பார்த்திட்டு, குழந்தை பெத்துகிட்டு அதுக்கு குண்டி கழுவிட்டு இருக்க முடியாது” என்றாள் வெறுப்பான குரலில்..

மகளின் பேச்சில் அதிர்ச்சி அடைந்தவள், “அய்யோ அப்படிலாம் சொல்லாதம்மா. நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தை மட்டும் பெத்து கொடு. அம்மா வளர்க்கிறேன்” என்று மகளின் தாடையை பிடித்து செல்லமாக கேட்டாள்.

“அம்மா எனக்கு கல்யாணம் வேணாம்மா”

“அப்படிலாம் சொல்ல கூடாதும்மா. அம்மாவுக்கு அப்புறம் உனக்குனு குடும்பம் வேணும். இப்ப நல்லா சம்பாதிச்சிட்ட… போதும் இந்த பணமே நமக்கு. இந்த ஊரு இந்த நாடு நமக்கு வேணாம். நான் உனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா பார்க்கிறேன். பேசாம நாம வெளிநாட்டுல போய் செட்டிலாகிருவோம் ம்ம்ம்… என்னம்மா சொல்ற?” என்று அவளது கையை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்.

“சரிம்மா… உங்க விருப்பம் போல பண்ணுங்க. நான் ஷாப்பிங் போயிட்டு வர்றேன்” எனக் கூறிவிட்டு நகர்ந்தாள்.

அவள் திருமணத்திற்கு ஒத்து கொண்டதை நினைத்து, பெரு மகிழ்ச்சி அடைந்த சரளா, உடனே வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிள்ளையை பார்க்கும் படலத்தை ஆரம்பித்தாள்.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

 

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top