அத்தியாயம் 12

அத்தியாயம் 12

 

அவனது கையில் இருக்கும் பத்திரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பாக்குற டைவோர்ஸ்க்கு இப்போவே அப்ளை பன்னலாம் நீ சைன் பன்னிக் கொடு”

அவன் நீட்ட அதை வாங்கவில்லை அவள்.

“நீ தானே சொன்ன அந்த பொண்ண கல்யாணம் பன்னிக்க சொல்லி அப்போ உன்ன நா விவாகரத்து பன்னனுமே அப்போ தானே அந்த பொண்ண கல்யாணம் பன்னலாம் என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு தான் இருக்கனும்”

உறுதியாக அவளது விழிகளைப் பார்த்துக் கூறினான்.

அவள் அந்த விவாகரத்துப் பத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுடன் சேர்ந்து வாழலாமா என்றால் திட்டவட்டமாக முடியாது என்றே கூறுவாள்.

அவனிடம் இருந்து விவாகரத்து பெறலாமா என்றால் ஏதோ ஒரு தயக்கம் ஆனாலும் விவாகரத்து செய்ய வேண்டிய நிலை.

ஏனெனில் அவனது வாரிசு இன்னொரு பெண்ணின் வயிற்றில் வளருதல்லவா ஆகவே அவ்வாரிசுக்கும் அப்பெண்ணிற்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமல்லவா??

அப்போ உன் வாழ்க்கை எனக் கேள்வி கேட்ட மனசாட்சிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.அவளது வாழ்க்கைக்காக அவனது வாழ்க்கையை வீணாக்க முடியாதே.

அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க முகத்திற்கு வெகு அருகில் சொடக்கிட்டான் அக்ஷரன்.

இவள் ‘ஙே’ என விழித்துப் போய் அவனைப் பார்த்தாள்.

“என்ன நின்னுக்கிட்டே கனவா”

அவன் புருவம் உயர்த்தினான்.

“இப்போ நா சொன்னதெல்லாம் உனக்கு ஓகே தானே”

அவன் கேட்க 

“என்ன”

அவள் மீண்டும் விழிக்க இரு கைகளையும் இடுப்பில் வைத்து மேலே பார்த்து உதட்டைக் குவித்து ஊதினான்.

“உஃப்”

“அப்போ நா சொன்னது எதுவுமே நீ கேட்டுட்டு இருக்கல்லயா”

அவன் கேட்க தலையை மறுப்பாக ஆட்டினாள்.

“சரி ஓகே சொல்றேன்”

“இந்த டைவோர்ஸ் கிடைக்க எப்பிடியும் இன்னும் ஒரு வருஷம் ஆகும்.அது வரைக்கும் நீ இங்க என்கூட என் பொண்டாட்டியா தான் இருக்கனும் ஏன்னா இந்த ஒரு வருஷத்துக்காச்சும் என்னோட அப்பா அம்மாவோட மனசுல நிம்மதியும் சந்தோஷமும் இருக்கனும்”

அவன் கூற அவளுக்கும் அதுவே சரியெனப்பட்டது வளர்த்த நன்றிக்காவது ஒரு வருடம் இங்கு சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கலாம்.அதன் மூலம் அவர்கள் இருவரும் சந்தோஷப்படுவார்கள்.

“அடுத்து என் பொண்டாட்டியா இருக்குற வரைக்கும் நா சொல்றத தான் கேக்கனும் இங்க உன்னோட வீடு போல இருக்கலாம் நோ ப்ரொப்ளம் உனக்கான என் கடமைல எந்தவித குறையும் இருக்காது ஏன்னா என்னைய நம்பி தான் அப்பா அம்மா உன்ன இங்க அனுப்பியிருக்காங்க”

அவன் கூறிக் கொண்டு செல்ல.

“அவங்க எங்க அனுப்பினாங்க நீங்க தானே இழுத்துட்டு வந்திங்க”

அவளது மனதில் ஓடியது என்னவோ இவை தான்.

“அடுத்து முக்கியமானது”

அவன் அடுத்த பீடிகையைப் போட அவள் பீதியாக அவனைப் பார்த்தாள்.

என்ன விஷயம் என அவள் அவனைப் பார்த்தாள்.

“இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் தான் இருக்கனும் தேவையில்லாம அப்பா அம்மாக்கு இப்போவே சொல்லத் தேவையில்ல பிரியகிட்ட சொல்லிக்கலாம் அதோட என்னோட லவ்வர்கிட்டயும் சொல்ல வேணாம்”

லவ்வர் என்ற வார்த்தையை அழுத்திக் கூற இவளுக்கு மனம் சுணங்கியது.

“ம்ம்”

மௌனமாகத் தலையாட்ட அவன் தன் கையில் இருந்த பத்திரத்தை அவளிடம் நீட்டினான்.

வாங்காமல் இருக்க முடியாதா என்று தான் எண்ணினாள்.

“என்னவோ காதலிச்சு கல்யாணம் பன்னிக்கிட்டது போல இவ்ளோ கவலப்பட்ற”

மனசாட்சி வேறு இடர இவளும் வேறு வழியின்றி அப்பத்திரத்தைக் கையில் வாங்கினாள்.

அவன் பேனாவை நீட்ட நடுங்கும் கைகளினால் அதையும் வாங்கியவள்.

கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டே அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒப்பம் வைத்தாள்.

“ஓகே நோ இஷ்யூஸ் நீ நீயா இரு”

அவன் தோளைக் குலுக்கிக் கூறி விட்டு அப்பத்திரத்தை எடுத்துக் கொண்டுச் சென்றான்.

“இவரோட வாழ்க்கைல ஒரு மூலைல சரி எனக்கு இடமில்லையா”

இவள் இவ்வாறு நினைத்துக் கொண்டாள்.

அவளாகக் கேட்டதை தான் அவன் தந்துள்ளான் என அவள் மறந்துவிட்டாள் போலும்..!!

*****

மறுநாள் காலையும் வழமை போன்றே சென்றது.

எந்தவித மாற்றமும் இல்லை.

அவள் இருவருக்கும் சேர்த்து காஃபி போட்டாள்.

அவன் இருவருக்கும் சேர்த்து சமைத்தான்.

“எனக்கு ஏதாச்சும் வேல வாங்கிக் கொடுக்குறிங்களா”

சாப்பிடும் போது அவள் அவனிடம் கேட்க அவனோ எனக்குக் கேட்கவில்லை என்ற ரீதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

மீண்டும் கேட்க ஒரு மாதிரியாக இருக்க அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

சமயலறைக்குச் சென்று சாப்பிட்ட தட்டைக் கழுவி விட்டு வர அவன் நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“உன்கிட்ட என்ன திறமை இருக்கு”

அவள் அறைக்குள் செல்லப் போக அவனது குரலில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் சாப்பிட்டுக் கொண்டு தான் இருந்தான். அவளோ தன்னிடம் தான் கேட்டானா இல்லை வேறு யாரிடமாவது அழைப்பேசியில் பேசினானா? என நினைத்து அவனைப் பார்த்தாள்.

கையில் ஃபோன் இல்லை அப்படியென்றால் தன்னிடம் தான் கேட்டுள்ளான் என நினைத்தவள்.

“அது.. என்னன்னு எனக்கேத் தெரியல”

அவள் கையைப் பிசைந்துக் கொண்டுக் கூற அப்பொழுது தான் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

“பாட்டுப்பாடத் தெரியுமா”

அவன் கேட்க 

“ம்ஹும் அவ்ளோ வராது”

“அப்போ டான்ஸ்”

“ம்ஹும் சுட்டுப் போட்டாலும் வராது”

“தைக்குறது வேற டிசைனிங் அப்பிடி எதுனாச்சும் இன்ட்ரஸ்ட் இருக்கா”

“ம்ஹும் அதெல்லாம் சின்ன வயசுல இருந்தே புடிக்காது”

முகத்தை சுருக்கி அவனிடம் கூற அவனோ சுருக்கிய மூக்கில் மின்னிக் கொண்டிருக்கும் மூக்குத்தியையேப் பார்த்தான்.

“அப்போ மேக்கப் பன்னுறது பத்தி எதாச்சும் தெரியுமா”

“மேக்கப் பன்னுறத பத்தியும் தெரியாது மேக்கப் பன்னுறதும் புடிக்காது”

“வேற”

இடது கையின் நடுவிரலால் புருவத்தை நீவி விட்டுக் கொண்டே அவன் யோசித்தான்.

இவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.இதுவரை இவ்வாறு அவள் யோசித்தது கூட இல்லையே.யோசித்தாலும் ஏதேதோ தேவையற்ற சிந்தனைகள் தானே நிறைந்திருக்கும்.

“அப்போ இந்த கவித கத எதாச்சும் எழுத வருமா”

அவன் கேட்க கண்களில் மின்னல் வெட்ட விழியை அகல விரித்தவள்.

“ஸ்கூல் போற டைம் கத எழுதுவேன் அப்போ பேப்பர்ல எல்லாம் கொடுப்பேன் என்னோட கதையெல்லாம் பேப்பர்ல கூட வந்திருக்கு தெரியுமா”

அவள் ஆர்வம் மின்ன சிறுபிள்ளைப் போல் இவனிடம் கேட்க தலையை இடவலமாக ஆட்டியவன்.

“அப்போ நாளைக்கு ரெடியா இரு”

அவன் கூறி விட்டு எழுந்து செல்ல இவள் தான் விழித்தாள்.

“எங்கயாச்சும் ஸ்கூல்ல சேர்த்து விட்டு பசங்களுக்கு கத சொல்லிக் கொடுக்க சொல்லுவாங்களோ”

அவள் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவன் சிறிது நேரத்தில் வெளியேறினான்.

போகும் போது மத்தியானத்திற்கு சமைத்து வைத்துள்ளதாகவும் சாப்பிடுமாறும் கூறி விட்டுத் தான் சென்றான்.

அவனது செயலில் நேற்று அவன் தானா விவாகரத்துப் பத்திரத்தை நீட்டி ஒப்பமிடுமாறு கூறினானா இல்லை வேறு யாராவதா என சந்தேகம் கூட வந்துவிட்டது அவளுக்கு.

******

“என்ன நண்பா காதலியும் மனைவியும் நேத்து சந்திச்சிக்கிட்டாங்க போல”

அக்ஷரன் கதவை மூடிக் கொண்டு வெளியேறி இரண்டு அடிகள் வைத்திருப்பான் பழக்கப்பட்ட குரலில் திரும்பினான்.

அங்கு தேவிப்பிரியாவின் கணவன் அபிலேஷ் தான் நின்றுக் கொண்டிருந்தான் இவனை ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்பிடியா எனக்குத் தெரியலயே”

இவனும் நக்கலாகக் கூற.

“நீ காதல் மயக்கத்துல இருந்திருப்ப அதான் காதலி வீட்டுக்கு வந்தது கூட தெரியல போல”

“ஆமா காதல் மயக்கம் தான்”

அவன் கூற இவன் முறைத்தான்.

“ராஸ்கல் அநியாயத்துக்கு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கைய சீரழிக்குறியே”

அபிலேஷ் கோவமாகக் கூற அவனைப் பார்த்துப் புருவம் உயர்த்தியவன்.

“இது என்னோட வாழ்க்க நீ தலையிடாதே”

“ஆமா இப்பிடி பொண்ணுங்கள ஏமாத்திக்கிட்டு வாழுறது எல்லாம் வாழ்க்கையா”

அவன் கூற வேகமாக அவனை நெருங்கியவன் அபிலேஷின் சட்டைக் காலரை பிடித்து இழுக்க அவனும் இவனது சட்டைக் காலரை பிடித்தான்.

“இனிமே இதப்பத்தி நீ பேசின கொன்னு புதச்சிடுவேன்”

அக்ஷரன் சிவந்த விழிகளுடன் வார்த்தைகளைப் பற்களுக்கிடையில் கடித்துக் கூற அவனது கண்ணில் தெரிந்த சீற்றத்தில் தானாக கைகள் சட்டை காலரில் இருந்து கீழிறங்கியது.

“நீ இப்பிடிப்பட்டவன்னு தெரிஞ்சதும் உன்னோட ப்ரன்ட்ஷிப்ப கூட தூக்கிப் போட்டுட்டேன் ச்ச்ச உன்னப் போய் நல்லவன்னு நெனச்சனே”

அபிலேஷ் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கூற சட்டைக் காலரிலிருந்து கையை எடுத்தவன் அவளது சட்டைக் காலரை சரி செய்தவாறே.

“நா நல்லவன் வள்ளவன்னு உன்கிட்ட சொன்னேனா இல்லையே அப்புறம் எதுக்கு இவ்ளோ துள்ளுற”

அவனைப் பார்த்துக் கூறியவன்.

“இனிமே இப்பிடி தேவையில்லாம என்னோட விஷயத்துல தலையிட்ட தல இருக்காது. அதோட நீ என் ப்ரன்ட்டா இருக்குற வரைக்கும் தான் எனக்கு நல்லது கெட்டது சொல்லித் தர உரிமை இருக்கு இப்போ நீ தான் என்னோட ப்ரன்ட் இல்லையே அப்போ இந்த உரிமையிருக்கு  ம***** இருக்குன்னு நெனச்சிக்கிட்டு என்கிட்ட பேச வராதே சொல்லிட்டேன்”

அபிலேஷிடம் கோவமாகக் கூறியவன் அவனை முறைத்து விட்டு செல்ல இவனும் போகும் அவனையே முறைத்தான்.

இருந்தும் நண்பன் இவ்வாறு சீரழிகிறானே என்ற கவலை மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

******

“என்னங்க ஒரு எட்டு போய் அவங்கள பார்த்துட்டு வந்துடலாமே”

சாப்பிட்டு விட்டு கை கழுவிக் கொண்டிருக்கும் தன் கணவனிடம் தயக்கமாகக் கேட்டார் தேவகி.

ஞானவேலோ கைகளை துண்டில் துடைத்துக் கொண்டே அவரை யோசனையாகப் பார்த்தார்.

“இல்லங்க ரெண்டு பேரும் தான் கண்ணுக்குள்ளயே நிக்குதுங்க ஒரு தடவ பார்த்துட்டா போதும்”

அவர் தாய்க்கே உரிய பதட்டத்தில் கூறினார்.

“ம்ம் சரி நாளன்னைக்குப் போகலாம்”

கூறி விட்டு சென்னறவர் ஏதோ யோசனையில் மீண்டும் திரும்பி மனைவியைப் பார்த்தவர்.

“நேத்ராக்கு பேசியிருந்த மாப்ள தம்பி நேத்து என்கிட்ட பேசினாரு அவர் பட்டணத்துக்குப் போறாராம் அக்ஷரனோட வீட்டு விலாசத்த கேட்டாரு ஒரு எட்டுப் போய் பார்த்து மன்னிப்பக் கேட்டு வரனுமாம்”

அவர் கூற தேவகியை குழப்பமாகக் கணவனைப் பார்த்தார்.

“எதுக்குங்க அந்த தம்பி மன்னிப்பு கேட்கனும்”

“இல்ல கல்யாண நேரத்துல அவங்க அப்பா அம்மா நேத்ராகிட்ட அந்த சொத்து பத்திரத்த கேட்டு தகராறு பன்னாங்களே அதுக்குத் தானாம்”

கணவன் கூற தேவகிக்கும் அன்று நடந்தது கண்முன் வந்து போனது.

அந்த மணமகனின் பெற்றோர்கள் நேத்ராவிடம் மணமேடையில் வைத்து சொத்துப் பத்திரத்தைத் தருமாறு கேட்டதும் அடுத்து புயல் போல் அக்ஷரன் உள்ளே நுழைந்து மணமகனை இழுத்துப் போட்டு விட்டு மணமகன் அமரும் இடத்தில் அமர்ந்து அவளது கழுத்தில் தாலி கட்டியது அனைத்தும் நினைவில் வந்து போக பெருமூச்சொன்றை விட்டார்.

******

தொடரும்..❤

 

 

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top