அத்தியாயம் -31

விதுரன் வீட்ல முத்தரப்பு சந்திப்பு முடிஞ்சு மூணு நாளாச்சு. எல்லாரோட வாழ்கையும் இயல்பாப் போச்சு. மதுரியாவுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுது. எப்போவும் போல அன்னிக்கு அவன் ஆபீசுக்கு வந்த பாதி முடிஞ்ச வேலையை பார்த்தவளை ஒர கண்ணால ஒரு சிரிப்போட பார்த்துட்டே அவன் வேலையை பார்த்தான். “விது… இந்த பேக் க்ரவுண்ட் நல்லா இல்லே. டிசைனர்ஸ் குடுத்த டெம்ப்ளேட்லே அந்த மரூண் கலர் நல்லா இருக்கு”-னு அவனை நிமிர்ந்தே பார்க்காம சொன்னா. “அம்மாடீ… சரியா ரெண்டு நாள் ஆச்சு மது என் கிட்ட பேசி… இப்போதான் மனசு வந்துச்சா?”-னு சிரிச்சுட்டே சொன்னான். “ஏது? பேச்செல்லாம் வேறே மாதிரி இருக்கு? நாளைக்கு ஒன்பது மணிக்கு ‘டார்லேட்’-லே மீட்டிங்… ஃபிக்ஸ் பண்ணியாச்சு”னு- சொல்லிட்டே வேலையை தொடர்ந்தா. “ஹேய்… அது முந்தா நாள் கேன்சல் பண்ணியாச்சே?”-னு கேட்கவும் “ஆமாம், வேண்டாத வியாக்கியானம் பேச பிசினஸ் மீட்டிங்கை கேன்சல் பண்ணா விளங்கிடும். நான் தான் ருத்திரன் சாருக்கு மெயில் பண்ணி ரீஸ்கெட்யூல் பண்ணேன்”-னு லேப்டாப்பை மூடினா.

மூணு நாள் முன்னாடி பேச்சுவார்த்தைக்கு அப்புறத்துலே இருந்து மனசால இன்னும் நெருங்கினான். அவன் பேச்சுலே கொஞ்சம் உரிமை, கெஞ்சல், லேசான கொஞ்சல் கூட வெளிப்பட்டது. “மது.. டைம் இல்லேடா. XXX ஆர்டர் முடிக்கவே டைம் சரியா இருக்குது”-னு தழைஞ்சு சொல்லவும், “கஷ்டப் படாம மேலே போக முடியும்-னு நினைச்சீங்களோ? வீட்டுக்கு போய் விட்டத்தை பார்த்துட்டு சிகரெட் ஊதித் தள்ளற நேரத்துலே பண்ண முடியும். நான் மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணி இருக்கேன். வேண்டாம்னா அங்கிள் கிட்ட சொல்லி கேன்சல் பண்ணிக்கோங்க. டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்”-னு வெடுக்-னு சொல்லி எந்திரிக்க போனவளை கையை பிடிச்சு தடுத்து நிறுத்தினான். “என் மதுவுக்கு இன்னும் கோபமா? ஏன் டா?”-னு கொஞ்சலா கேட்டான் விதுரன். “வாட் நான்சென்ஸ் விதுரன்? எதேதோ பேசறீங்க? ‘என்’ மதுவா? எப்போலே இருந்து?”-னு கோபமா கேட்டா மதுரியா. “எப்பவுமே தான். புரியறதுக்குத் தான் லேட் ஆயிடுச்சு”-னு வெட்கமா சிரிக்கவும், “சுவாதி கூட சுத்தறப்போக் கூடவா?”-னு ஏளனமும் கோபமுமா கேட்டா மதுரியா. “மது… ப்ளீஸ்.. நீ நினைக்கறாப் போல எதுவும் இல்ல”-னு ஆரம்பிக்கவும், “எனக்கு இந்தக் கதைக்கு எல்லாம் நேரம் இல்ல. இப்படி எல்லாம் பேசினா நான் வரவும் மாட்டேன். உங்களை மீட் பண்ணவும் மாட்டேன். இப்போ இருக்கறது நட்பு மட்டும் தான். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்”னு கிளம்பிப் போனா.

விதுரன் டேபிள்லே சாய்ஞ்சு உதடு குவிச்சு சலிப்பா ஊதினான். “படுத்தறேடீ. பேசவே விடலேன்னா எப்படி சரியாகும்? ஆனாலும் அடம் ஜாஸ்தி. அப்புறம் உண்மையிலேயே வர மாட்டே. போ… எங்கே போயிடப் போறே?”-னு மனசுக்குள்ளேயே பேசிக்கும் போதே அவன் போன் அடிச்சுது. எடுத்து, “சொல்லுங்க பரத்” என்றுக் கேட்கவும், “விதுர்… பேச நேரமில்லே. ரியா பக்கத்துலே இருந்தா ஸ்பீக்கர்லே போடு. ரெண்டுப் பேருக்கும் சேர்த்து சொல்லிடறேன்”-னு சொல்லவும் ஸ்பீக்கர்லே போட்டான். “ரியா, விதுரன் ரெண்டுப் பேரும் உடனே வீட்டுக்கு வாங்க. எல்லாரும் இங்கே தான் இருக்காங்க. ப்ளீஸ் அர்ஜெண்ட்”-னு போனை கட் பண்ணிட்டான் பரத். “என்னாச்சு? என்ன? யாருக்கு என்ன? பாட்டியா?”-னு உதற ஆரம்பிச்சா மதுரியா. “ஹேய் மது… ரிலேக்ஸ். பாட்டிக்கு ஒண்ணும் ஆயிருக்காது.. பதறாதே. வேறே ஏதோ விஷயம்.. போலாம் வா”-னு நடுங்கற அவ உடம்பை ஆதரவா தோளோட அணைச்சுக் கூட்டிட்டு போனான்.

ரெண்டுப் பேரும் பேசிக்கவே இல்லை. மதுரியாவுக்கு என்ன பண்ணியும் பாட்டியை பத்தின பயம் தெளியவே இல்லை. என்ன ஆகியிருக்குமோ-னு பதட்டமும் அழுகையும் வந்துச்சு. விதுரனுக்கும் சமாதானம் சொல்ல முடியலே. ஏன்னா அவனுக்கே இப்போ அந்த பயம் வந்துச்சு. வீட்டு வாசல்லே கார் நின்னதும் நாலு கால் பாய்ச்சல்லே, “பாட்டி… பாட்டி.. என்னாச்சு?”-னு கத்திட்டே உள்ளே ஓடினவ அப்படியே போல நின்னா. அவ பின்னாடி வேகமா வந்த விதுரனும் பே-னு திகைச்சு நின்னுட்டான். “பாட்டி, அது வந்து..”-னு தந்தி அடிச்சா மதுரியா. அங்கே கூடத்துலே பெரிய சோஃபா நடுவிலே நித்தியானந்தம். அவர் பக்கத்துலே ஒரு பக்கம் கற்பகவல்லி. இன்னொரு பக்கம் நித்தியவாசன். ரெண்டு ஒத்தை இருக்கையில வேதமூர்த்தி, நீலவேணி. சங்கரியும் சுபத்ராவும் பெரிய சோஃபாவுக்கு பின்னாடி கையை பிசைஞ்சுகிட்டு நின்னாங்க. ரிஷி, கிருத்திகா, பரத், ஆனந்தியா ஒரு ஓரமா என்னாகுமோ-னு பயத்துலே இருந்தாங்க. தாத்தா, ரெண்டு பாட்டிகளோட அழுத்தமான பார்வை உள்ளே வந்து தங்களுக்கு எதிரா நின்னுட்டிருந்த பேரனையும் பேத்தியையும் துளைச்சு எடுத்துச்சு. பயத்துலே மதுரியாவுக்கு வியர்த்தது.

இந்த குடும்பங்கள்லே முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது, பெரிய தப்புக்களை தட்டிக் கேட்கும் போது வீட்டு பெரியவங்க பொறுப்பு எடுத்துப்பாங்க. அதுவரைக்கும் பெரிசா கண்டுக்க மாட்டாங்க. இன்னிக்கு அப்படியொரு நாள் தான். “தாத்தா, நான் எல்லாம் சொல்றேன்”-னு மதுரியா ஆரம்பிச்சப்போ, கையை தூக்கி நிறுத்த சொல்லிட்டு, “கலா… கொஞ்சம் கோயில் கடைக்கு போய் பூஜைக்கு பூவும் பழமும், வெத்தலை, பாக்கும் எல்லாம் வாங்கிட்டு வாம்மா. அரை மணியிலே வரணும். கூட யாராவது கூட்டிட்டு போ”-னு கனிவா சொல்லி அனுப்பினாங்க கற்பகவல்லி. கலா வெளியே போகவும் கதவை அடைச்சாங்க சுபத்ரா. “என்ன நடக்குது ரியா? உங்க ரெண்டுப் பேருக்கும் பிடிச்சா நாங்க மறுக்கவா போறோம்? நாங்களே ஆசைப்பட்டது தானே? இப்படி பொய், திருட்டுத்தனம்.. என்ன இதெல்லாம்? எங்கே படிச்சே இதையெல்லாம்? ம்ம்ம்??”-னு இடி மாதிரி முழங்கினார் நித்தியானந்தம். 

மதுரியாவுக்கு பயத்துலே நாக்கு மேலன்னத்துலே ஒட்டிக்குச்சு. பேச்சே வரலே. பயத்துலே கண்ணுலே இருந்து மட்டும் மாலை மாலையா தண்ணி வந்துச்சு. நித்தியவாசனுக்கு ஏனோ குட்டிப் பெண் மதுரியா தான் தெரிஞ்சா. ஆனா அப்பாவை மீறிப் பேச முடியாது-னு தெரியும். அதனால அமைதியா இருந்தார். வேதமூர்த்திக்கும் அதே தான். ஏன்னா அவங்களே எதிர்பார்க்காதது இது – பெரியவங்க மூணு பேர் காதுக்கும் விஷயம் போகும்-னு. அது மட்டுமில்லே கூடவே வேற ஒரு பிரச்சினையும் கிளம்பும் என்று.

“ஏன் சின்னவனே? நீ தனியா இருந்தப்போவும் சரி. கூட இருந்தப்போவும் சரி, உன்னை எவ்வளோ நம்பினோம்? இப்படி வயசு பொண்ணை வீட்டுக்கு கூப்பிட்டு தனியா பேசி, நேரம் காலம் கணக்கு இல்லாம… இதெல்லாம் நல்லா இருக்கா?”-னு கேட்டாங்க நீலவேணி. “வெறும்னே அழுதா சரியாகாது ரியா… பேசு”-னு அழுத்தமா சொன்னார் நித்தியானந்தம். “தாத்தா, நான் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்தப்போ ப்ரதீப், ரீனா கூட ஷாப்பிங் போனப்போ தான் விதுரனை பார்த்தேன். அவரை பார்த்த கோலம் என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியலே தாத்தா. அதான் அவருக்கு எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்-னு போனேன்”-னு மதுரியா நிறுத்தவும், “நான்… நான்… அதை ஏத்துக்கலே.. அதனால தான் மது அங்கே அப்படி..”-னு விதுரன் முடிக்க முடியாம நிறுத்தவும். “ஓஹோ… புரட்சியாளர் அம்மா, விதுரன் வீட்டு வாசல்லே தர்ணா பண்ணீங்களோ?”-னு எகத்தாளமா கேட்டார் நித்தியானந்தம். “தாத்தா, அது வேறே வழி தெரியலே. ஆனா அது சரி-னு சொல்லலே”-னு நடுங்கிக் கிட்டே சொல்லவும், வேதமூர்த்தி, நித்தியவாசன், பரத் தவிர மீதி எல்லாரும் அதிர்ந்தாங்க.

சுபத்ரா அந்த கோபத்துலே, “சனியனே, என்ன வேலைடீ செஞ்சே? மூளையிருக்கா? நம்ம குடும்பத்துக்கு-னு இருக்கற மரியாதையை புதைச்சுட்டு வந்து நிக்கறியே?”னு முதுகுலேயே ரெண்டு வைச்சாங்க. “சுபா, பெரியவங்க பேசறோம்லே? அதென்ன வயசு வந்தப் பொண்ணு மேல கையை நீட்டறது? போயி பேசாம உட்கார்”-னு அதட்டலா சொன்னாங்க கற்பகவல்லி. விதுரனுக்கு அவ கஷ்டத்தை கண் கொண்டு பார்க்க முடியலே. இதுக்கெல்லாம் அவனும் காரணம் தானே? “தாத்தா, நான் தப்பு எதுவும் பண்ணலே. நிஜமாவே விதுரன் கேரியர்லே ஹெல்ப் பண்ணலாம்-னு தான் போனேன்.. ப்ளீஸ் பிலீவ் மீ”-னு அழுதா மதுரியா. “ஆமா தாத்தா… நாங்க எந்த தப்பும் பண்ணலே. ஆபீஸ், ஆர்டர், மீட்டிங்-னு தான் போனோம்”-னு விதுரனும் சொன்னான். “சரி, இதுதான் விஷயம்னா, ஏன் யார் கிட்டேயும் சொல்லலே? அட்லீஸ்ட் வாசு, மூர்த்தி கிட்ட சொல்லலாம்லே? மூர்த்தியா கூப்பிடறவரை போய் பார்க்கலே தானே?”-னு பாயிண்டாவே கேட்டார் நித்தியானந்தம். “எதுக்கு ரியாம்மா இவ்வளோ பொய்? ஏன்?”-னு கேட்டாங்க கற்பகவல்லி. “பாட்டி, பொய் சொன்னேன் தான். ஆனா எந்த தப்பான காரியத்துக்காகவும் இல்லை. வளர்த்த நீங்களே என்னை சந்தேகப்படாதீங்க. ப்ளீஸ்”-னு அழவும், தாத்தா பாட்டிக்கு அதுக்கு மேலே பேத்தி மேலே கோபத்தை இழுத்து பிடிக்க முடியலே.

“இங்கே வா..”-னு கூப்பிட்டாங்க கற்பகவல்லி. ஓடிப் போய் முட்டிப் போட்டு அவங்க மடியிலே முகம் புதைச்சு அழுதா மதுரியா. பாட்டி, தாத்தா ரெண்டு பேரும் பேத்தியை தடவி குடுத்தாங்க. “சரி.. சரி.. போதும்”-னு முகத்தை நிமிர்த்தி கண்ணை துடைச்சு விட்டாங்க கற்பகவல்லி. “எங்க கிட்ட நேரடியா சொல்லி இருந்தா, இவ்வளோ சேதாரமில்லை தானே? இப்போ பார் நடக்கற பிரச்சினையினால் அவசரமா கல்யாணத்தை முடிக்கணும் உனக்கும் விதுரனுக்கும்”-னு பாட்டி சொல்லவும், “என்ன சொல்றீங்க?”னு பேய் அறைஞ்ச மாதிரி கேட்டா மதுரியா.

 பரத் தான் உள்ளே புகுந்து, “இப்போ என்ன அவசரம் பாட்டி? ரியாவுக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு… விதுரனும் பிசினஸ்லே ஸ்டேபிள் ஆகணும்”-னு கேட்டான். “ம்ம்ம்… அவசரம் கிடையாது. ஆனா அவசியம் வந்துடுச்சு”-னு ஆறு போட்டோவை தூக்கி டீபாய் மேலே போட்டார் நித்தியானந்தம். ரெண்டு அவங்க மீட்டிங் போது ஹோட்டல்லே பேசிட்டு இருந்தப்போ  எடுத்தது. நாலு விதுரன் வீட்டுலே நெருக்கமா இருக்கற மாதிரி பொய்யா உருவாக்கப்பட்டது. மதுரியாவுக்கும் விதுரனுக்கு பேரதிர்ச்சி. ரெண்டு படம் உண்மைங்கிறதால,  நாலு பொய்-னு சொல்ல முடியலே. அதோட பேர் கெட்டுப் போனப்புறம், உண்மை பொய்-னு யார்கிட்ட சொல்ல முடியும்?

“இந்த போட்டோவை வைச்சு நான் நம்பலே. இன்னிக்கு என் க்ளப் ஃப்ரெண்ட் ஜகன்னாதனை பார்த்தேன்… உங்களைப் பத்தி தப்பும் தவறுமா வதந்தி பரவி இருக்கறதா சொல்றான். நீங்க சேர்ந்து இருக்கறதாவும் கல்யாணம் பண்ணாமலே வாழறதாவும் சொல்றான். பேசிட்டு வீட்டுக்கு வந்தா எனக்கு இந்த போட்டோ. குடும்ப மானம் முக்கியம் இல்லையா? அதனால தான் உடனே கல்யாணம் பண்ணிடலாம்-னு முடிவு பண்ணோம்”-னு சொன்னார் நித்தியானந்தம். “யார்-னு கண்டுப்பிடிச்சு போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் பண்ணலாம் தாத்தா”-னு விதுரன் சொல்லவும், “தாராளமா… ஆனா கல்யாணம் முடிஞ்சு பண்ணா அவதூறு-னு சொல்லலாம்… இப்போ பண்ணா உண்மையை சொன்னா கோபம் வருதா-னு தான் ஊர் உலகம் கேட்கும்? நாங்க எல்லாம் இன்னும் அதுக்கு பயந்து தான் விதுரா வாழறோம்”-னு கனிவா சொல்லி வாயடைச்சார். “ஊரெல்லாம் உன் பேர் கெட்டுப் போகுது ரியாம்மா. அதுக்குத் தான் இந்த முடிவு”-னு சொன்னாங்க கற்பகவல்லி. 

மதுரியாவுக்கு பிரச்சினை-னு சொன்னதும், “எனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம்… மதுவை கேளுங்க”-னு சொல்லிட்டான் விதுரன். மதுரியாவுக்கு சுறுசுறு-னு கோபம் ஏறுச்சு. என் மனசுப் பத்தி தெரிஞ்சும் கல்யாணத்துக்கு எப்படி சரின்னு சொல்லுவான்-னு. அவளுக்கு அவ குடும்பத்து மேலே, இப்படி போட்டோ வதந்தி–னு விளையாடற விக்கி மேலே, சரி-னு சொன்ன விதுரன் மேலே-னு எல்லார் மேலேயும் கோபம். அதை வெளிக்காட்டாம, “இந்த கல்யாணத்துக்கு நான் சரி-னு சொல்ல ரெண்டு கண்டிஷன். அதுக்கு ஒத்துக்கலேன்னா எனக்கு கல்யாணம் வேண்டாம். நானும் வீட்டை விட்டுப் போயிடறேன். ஸோ.. குடும்ப மானத்துக்கு பங்கம் வராது”-னு அழுத்தமா சொன்னா மதுரியா. “என்ன கண்டிஷன்?”-னு கேட்டார் நித்தியானந்தம். “சொல்றேன். ஆனா சொன்னப்புறம், என்ன சம்பந்தம்? ஏன்-னு எல்லாம் கேட்கக் கூடாது.. ஒண்ணு, விதுரன் திரும்ப தி. நகர்லே அவர் வீட்டுக்குப் போகணும்… ரெண்டாவது எங்க கல்யாணத்துக்கு முன்னாடி ப்ரதீப் – ரீனா கல்யாணம் நடக்கணும்.. அது அவங்களுக்கு நான் குடுத்த வாக்கு”-னு நிறுத்தினப்போ ஹால்லே ஊசி விழுந்தா கூடக் கேட்கிற அளவுக்கு நிசப்தம்.

 

அடுத்த நாள் மதியம் விதுரன் வீட்டுலே… 

 

பரத், ப்ரதீப், ரீனா, விதுரன், மதுரியா கூடினப்போ விதுரனும் ப்ரதீப்பும் அவ கண்டிஷனுக்கு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாங்க. ஆனா மதுரியா கொஞ்சம் கூட அலட்டிக்காம கையிலே இருந்த டீயை ஊதி ஊதி குடிச்சுட்டிருந்தா. பரத்துக்கும் ரீனாவுக்கும் அதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு. “ஏய்… என் டென்ஷன் உனக்கு கிண்டலா இருக்கா? பதில் சொல்லு மது”-னு எகிறினான் விதுரன். “அதானே? லூசு மாதிரி சுத்திக்கிட்டிருக்கோம் பதில் சொல்லு ரியா”-னு ப்ரதீப் இன்னொரு பக்கம். “சொல்றேன்.. ஆமா போட்டோ அனுப்பி ரூமர் பரப்பினவன் என் எதிரியா இருந்தா? என் கூட சுத்தறப் பாவத்துக்கு ரீனா லைஃபும் குழப்பிடுவான். இப்படி போட்டோ ரூமர்-னு கிளப்பினா ரீனா அப்பா நிச்சயம் வேறே யாருக்காவது கட்டி வைச்சிடுவார். அல்ரெடி மாப்பிள்ளை பார்த்துக்கிட்டுத் தான் இருக்காராம். உடனே எனக்கு யார் எதிரி-னு கேட்க வேண்டாம்”-னு நிறுத்தி, விதுரனை கூர்மையா பார்த்துட்டே, “எல்லாரும் நினைக்கற மாதிரி நான் வேஸ்ட் லக்கேஜ் இல்லே… நிறைய ப்ரோபோசல் மறுத்திருக்கேன். அதான் நிறைஞ்ச மனசு இருக்கறவங்க நிறைய பேரு இருக்காங்களே.. அவங்க எல்லாம் ப்ரோபோசல் ரிஜெக்ட் பண்ணா எப்படி பழி வாங்கணும்-னு தானே அலையறானுங்க”-னு தோளை குலுக்கினா மதுரியா.

“இது உன் கற்பனை ரியா.. உனக்கு யாரும் எதிரி இருக்க மாட்டாங்க”-னு ப்ரதீப் சொல்லவும், “ஓ… அப்படியா? அப்போ செஞ்ச ஆள் யாரு-னு சொல்றது தானே? எவிடன்ஸ் இருக்கா?”-னு நக்கலா கேட்டா மதுரியா. “ரியா..”-னு பரத் இழுக்கவும், “ம்ம்ம்ம்.. அது உங்க கிட்ட இருக்கா? சொல்லுங்க”-னு அவன் பக்கம் திரும்பினா. “யார் கிட்டேயும் எந்த ப்ரூஃபும் கிடையாது மது”-னு விதுரன். “தேங்க்ஸ். அப்போ நான் சொல்றது தான் ஒரே வழி.. நான் உங்க யாரையும் ஃபோர்ஸ் பண்ணலே.. வேண்டாம்னா விடுங்க”-னு அலட்சியமா கோபமா சொல்லி முடிச்சா. 

விதுரன் அலுவலகத்துல விட்டா போலவே “ப்பூ..”-னு உதட்டை குவிச்சு ஊதி ரெண்டு பக்கமும் தலையாட்டினான். “ஏன்டி இப்படிப் படுத்தறே எல்லாரையும்? எவ்வளோ திமிர்? என்ன அப்படி ஒரு பிடிவாதம் உனக்கு?”-னு சலிப்பா கேட்டான் விதுரன். “அது இல்லாம போனா நீங்க என்னை உதாசீனப் படுத்தி விட்டுட்டுப் போனதுக்கு, இந்நேரம் எனக்கு முதல் வருஷ திவசம் வந்திருக்கணும்”-னு இரக்கமே இல்லாம பேசவும், “அப்படியே ஓங்கி ஒண்ணு விட்டேன்னா?” கோபத்துலே இறைஞ்சான் விதுரன். “அது புதுசா என்ன? எப்போவும் செய்யறது தானே?”-னு நக்கலா கேட்கவும், “ஏன்? உனக்கும் புதுசு மாதிரி தெரியலியே?”-னு அவ அறைஞ்சக் கன்னத்தை தடவிட்டே புருவத்தை தூக்கி கேட்டான். “சே.. உங்க கிட்டே எல்லாம் மனுஷன் பேச முடியாது. நான் வர்றேன்”னு கிளம்பிப் போயிட்டா. 

“ப்ரதீப்! அவ பிடிவாதத்தை எக்ஸ்க்ளூட் பண்ணா, அவ ஐடியாலே எண்ணத்துல தப்பு இருக்கற மாதிரி தெரியலே. தன்னால யாருக்கும் பிரச்சினை வேண்டாம்-னு நினைக்கறா”-னு சொன்னான் விதுரன். பரத் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு, “இனி அவளை மாத்தவும் முடியாது. நீ உங்கப்பாக் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா”-னு சொல்லிட்டு கிளம்பினான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top