அத்தியாயம் -11

நாள் வாரமாகி யாருக்கும் காத்திராமல் ஓடிப்போச்சு. மதுரியா கிளம்பற நாள் மட்டுமில்லே, நிகேஷ் பர்த்டேயும் வந்துச்சு. அவன் பிறந்த நாள் முடிஞ்சு ரெண்டு நாள்லே மதுரியாவும் ஹாஸ்டல் கிளம்பறதா இருந்துச்சு. ஒரு ரெண்டு நாள் முன்னாடி, அதாவது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முன்னாடி, ராத்திரி சாப்பாடு அப்போ கற்பகவல்லியோட உடல்நிலையும் ஓரளவுக்கு தேறி இந்த புது வாழ்க்கைமுறையும் பழக ஆரம்பிச்சுது. “அப்பா, எனக்கு ஒரு ரிக்வெஸ்ட் இருக்குப்பா. நீங்களும் தாத்தாவும் செய்வீங்களா?”-னு கேட்டா மதுரியா. “என்னடா விஷயம்? நீ செய்னா செய்யப் போறோம்”-னு கையை பிடிச்சு சொன்னார் நித்தியவாசன். “அது… வந்து நான் எங்கே படிக்கிறேன், என்ன படிக்கிறேன், அப்புறம் என்னைப் பத்திய எந்த விவரமும் வேதாப்பாவுக்கோ அவங்க வீட்டுலே யாருக்கும் சொல்லக்கூடாது.. ப்ளீஸ்-பா”-னு கேட்டா மதுரியா. “நீ ஏன் கேட்கறே-னு புரியலே குட்டிம்மா… ஆனா உனக்கு அமைதி கிடைக்கும்னா செய்யறோம்”-னு சொல்லிட்டார் தாத்தா.

கற்பகவல்லிக்கு தான் மனசுக்குக் கஷ்டமா போச்சு. அன்னிக்கு ராத்திரி, “வாசுப்பா… இப்படியே சின்னவ பேசறதுக்கு எல்லாம் சரின்னா எப்போ அவளுக்கு கல்யாணம் பண்றது?”-னு கேட்டாங்க கற்பகவல்லி. “என்ன பண்ணலாம் வல்லி? அந்தப் பொண்ணு இப்போ தான் தேறி வர்றா.. அதை கெடுக்க முடியுமா?”-னு கேட்டார் நித்தியானந்தம். “இல்லே ஏதோ புதுசு புதுசா வியாதி பேரெல்லாம் சொல்றீங்க. நானும் கண்ணை மூடறதுக்குள்ளே சின்னவளுக்கும் நல்லது கெட்டது பார்த்துட்டா, நிம்மதியா போவேன்”-னு எல்லா பாட்டியும் சொல்ற அதேப் பேச்சுப் பேசினாங்க. அது உண்மையிலேயே பேச்சு இல்லே. தூக்கி வளர்த்தவங்க சின்னவங்க சந்தோஷமா வாழறதை பார்க்கற அளவு ஆண்டவன் நமக்கு ஆயுசை குடுக்கலியோ-னு ஒரு பயத்தோட வெளிப்பாடு தான் அது. எழுபது வயசுக்கு மேற்பட்ட பெரியவங்க மனசுலே ‘Fear of Annhilation’ அதாவது தான் இறந்து விடுவோமோ, தன்னால எதையும் உணர முடியாம போயிடுமோ, தான் செயல் பட முடியாம போயிடுமோ-னு பயம் அதிகரிக்கிறதா ஆராய்ச்சி சொல்லுது. அந்த பயத்தோட வெளிப்பாடு தான் நான் சாகறதுக்குள்ளே கல்யாணம் பண்ணணும், என் காலம் முடியறதுக்குள்ளே உன் குழந்தையை பார்க்கணும்கிற மாதிரி வார்த்தைகள் எல்லாமே!! அவங்க யாரும் நம்மளை எமோஷனல் ப்ளாக்மெயில் பண்றதுக்காக சொல்லலே. அவங்க இயலாமையை மட்டும் நினைச்சு வர்ற வார்த்தைகள். ஆனா நாமளும் அதை கண்டுக்காம விடறதைத் தவிர வேற வழியில்லை. 

கற்பகவல்லிக்கும் டாக்டர்.ஆகாஷை பார்த்த அப்புறம் அப்படி ஒரு பயம் வந்துச்சு. “நீயா வல்லி இப்படி பேசறே? என்னாச்சு உனக்கு?”-னு அதிர்ந்து போய் கேட்டார் நித்தியானந்தம். “ஏன் வாசுப்பா? என்ன தப்பா கேட்டுட்டேன்?”-னு கேட்டாங்க கற்பகவல்லி. “வேண்டாம் வல்லி, நாம வாழ்ந்த காலம் இனி வாழப் போறதில்லே… போற வேளைக்கு சும்மா இல்லாம சின்னவங்க வாழ்க்கையை குழப்பிவிட்டு போகக் கூடாது… ரியா நம்ம போனதுக்கு அப்புறம் வாழணும்… அவ கஷ்டப்பட்டா நம்ம ஆத்மானால கூட நிம்மதியா இருக்க முடியாது. எப்படி இருந்த பொண்ணு.. இப்போ அது முகத்துலே சிரிப்பே இல்லே. நம்மனால சிரிக்க வைக்க முடியலேன்னா கூட பரவா இல்லே; அழ வைக்கக்கூடாது. நம்ம வியாதி நம்மளோட. அதை காரணம் காட்டி தப்புப் பண்ணக் கூடாது.. நானும் வாசு பக்கம் தான் இந்த விஷயத்துலே”ன்னு கெஞ்சலா சொன்னார் நித்தியானந்தம். “அது… வாசுப்பா… ஒரு வரன் கூடி வரலேன்னா மனசை மாத்திட்டு வேறே வரனுக்கு சரி-னு சொல்லணும் தானே? வாழ்க்கை இப்படியே இருக்காதே. 20 வயசுலே தனியா இருக்கறதும் 40 வயசுலே தனியா இருக்கறதும் ஒண்ணா? பொண்ணு ஆணுன்னு பிரிக்கலே. யாருன்னாலும் துணை வேணும் தானே?”ன்னு பொட்டுலே அடிச்ச மாதிரி கேட்டாங்க.

நித்தியானந்தம் ஒரு பெருமூச்சு விட்டு, “அதையும் சின்னவ தான் முடிவு பண்ணணும்.. ஒரு ஆறு மாசம் விடு.. அவ மீண்டு வந்ததும் மறுபடியும் பேசி ஏற்பாடு பண்ணலாம்”-னு சொன்னப்போ அரை மனசா தலையை ஆட்டினாங்க கற்பகவல்லி. தாத்தா பாட்டி இரண்டு பேருக்கும் தெரியலே… இன்னும் ஆறு மாசத்துலே சின்ன பேத்திக்கும் நல்லா ஜாம் ஜாம்-னு கல்யாணம் நடக்கப் போகுது-னுJ ஆனா மாப்பிள்ளை யார்??…அதை அப்புறம் பார்க்கலாம்…இப்போ செகண்ட் ஹீரோ வரப் போறான்..…

பிறந்தநாள் அருமையா விடிஞ்சுது. காலையிலே ஹோமம், பூஜைனு நெருங்கின உறவுகள் மட்டும்… அதுக்கும் வேதமூர்த்தி குடும்பம் வந்தாங்க. ஆனா வேதமூர்த்தி தம்பதியும் நீலவேணியும் மட்டும் வந்தாங்க. நித்தியவாசன் பக்கம் கொஞ்சம், பரத்தோட சொந்தம்-னு அதுவே நூறு பேர் இருந்தாங்க. பூஜைக்காக மயில் கழுத்து நிற செல்ஃப்-பார்டர் பட்டுப் புடவையில், தளர பின்னி, சாதாரண நகைகள்லே, ஒப்பனை இல்லாம வெறும் சின்ன வட்ட வடிவ பொட்டோட அழகு பொம்மையா சுத்தி வந்த மதுரியா மேல சங்கரியோட பார்வை ஏக்கமா படிஞ்சுது. அதுலேயும் அன்பா வரவேற்று, முகம் கோணாம சகஜமா எப்போவும் போல பேசின மதுரியாவை பார்க்கும் போது, மனசு தவியா தவிச்சுது வேதமூர்த்தி தம்பதிக்கு. அதுலேயும் நிகேஷை வைச்சுட்டு சமாளிச்சு பார்த்துக்கிட்டது எல்லாம் பார்க்கும் போது, இந்த கனிவையும் அன்பையும் உதாசீனம் பண்ணிட்டானே பையன்னு குற்றவுணர்ச்சியே வந்துச்சு. ஆனா நல்லது நடக்கும் போது இதெல்லாம் பேச வேண்டாம்-னு ரெண்டு பேரும் வெளிக் காட்டிக்கலே. சுபத்ராவும் அவங்க மனசு புரிஞ்சோ என்னவோ, எல்லாத்துக்கும் சங்கரியை கூப்பிட்டு சேர்த்துக்கிட்டாங்க. ஒரே நல்ல விஷயம் கல்யாணப் பேச்சு வீட்டோட இருந்ததால, நின்னதும் யாரும் கேட்கலே. ஏன் எதுக்கு-னு யாருக்கும் சொல்ல வேண்டிய தேவை இருக்கலே.

பூஜையும் நல்ல விதமா முடிஞ்சு உள்ளூர்-லே இருந்து வந்தவங்க எல்லாம் சாப்பிட்டு பார்ட்டிக்கு வர்றோம்-னு கிளம்பினாங்க. மதுரியாவும் நிகேஷ் பார்ட்டிக்கு முன்னாடி தூங்கணும்-னு தூக்கிட்டுப் போனா. பெரியவங்க மட்டும் ஏதோ பேசிட்டு இருந்தாங்க. “ஏன்பா மூர்த்தி, விதுரன் கல்யாணத்தை சீக்கிரமா முடிக்கறது தானே? அங்கே இங்கே பார்க்கிறோம்… நாலு பேர் பேசறதுக்கு முன்னே முடிக்கறது தானே பிள்ளைகளுக்கு மரியாதை?”-னு கேட்டார் நித்தியானந்தம். “நானா மாமா மாட்டேன்கிறேன். கொஞ்சம் டைம் வேணும், அந்த அளவுக்கெல்லாம் நாங்க இன்னும் போகலேங்கறான் என்னத்த சொல்ல?”-னு தலையிலே அடிச்சுக்கிட்டார் வேதமூர்த்தி. “ம்ம்ம்… சின்னதுங்க மனசுலே என்ன இருக்கோ?”-னு பெருமூச்சு விட்டாங்க கற்பகவல்லி. 

“ஏன் சுபா, ரியாவுக்கு வேறே இடம் பார்க்கறீங்களா?”-னு கேட்டாங்க சங்கரி. “பார்க்கணும் சங்கரி. இப்போதைக்கு முடிவா ஒண்ணும் இல்லே.. நம்ம பரத் வழியிலே ஒரு பையன் இருக்கான். கேட்டாங்க.. நம்ம பேச்சுனால ஒண்ணும் சொல்லலே. எதுவானாலும் ரியா தான் பிடிக்குடுக்க மாட்டேங்கறா.. அவங்கப்பாவும் கொஞ்ச நாள் போகட்டும்”-னு சொல்லிட்டார்-னு சொன்னாங்க சுபத்ரா. இப்படியே ஏதோ பேசிட்டு கிளம்பி போயிட்டாங்க வேதமூர்த்தி குடும்பம்.

சாயந்திரம் பார்ட்டிக்கு நல்ல கூட்டம். எல்லாரையும் கூப்பிட்டு ஆடம்பரமாவே ஏற்பாடுப் பண்ணியிருந்தாங்க. பரத்தோட அப்பாப் பக்க உறவுகளையும் கூப்பிட்டிருந்தாங்க. பரத்தோட அத்தைக்கு அன்னிக்கு அண்ணன் பையனை நிராதரவா விட்டது வருஷம் போகப் போக குற்றவுணர்ச்சியை உண்டுப் பண்ணிடுச்சு. அதை உணர்ந்து அவங்க வரும் போது பரத்துக்கும் ஆனந்தியாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு இருந்துச்சு. பரத்துக்கும் அப்போ திடீர்-னு வந்த அத்தை கூட ஒட்ட முடியலே. அதை அவங்க அத்தை வசந்தாவுக்கும் புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனாலும் வந்துட்டு போயிட்டிருக்காங்க. 

இதை சரி பண்ற வழியா வசந்தாவோட புருஷன் சேகரன் யோசிச்சு, மதுரியாவை அவங்க பையன் அபிஜித்துக்குப் பேசி முடிச்சா உறவும் வளரும்-னு சொன்னார். அதைப் பத்தி வசந்தா மேம்போக்கா சொல்லவும் செய்தாங்க. ஆனா அதுக்கப்புறம் பேச முடியாதபடி பண்ணினது சாட்சாத் அவங்க பையன் தான். அபிஜித் அழகன்… அறிவாளி.. அண்ணா யூனிவர்சிடியிலே இன்ஜினீயரிங் முடிச்சு தொழில் நிர்வாகம் படிக்க ஜெர்மனி போனான். போனவனுக்கு அந்த ஊர் பிடிக்கவும் அங்கேயே வேலையை தேடிக்கிட்டான். அந்த ஊரிலேயே ஒரு பெண்ணையும் பிடித்து அப்படியே வாழ்க்கையையும் அமைச்சுக்கிட்டு, அம்மா அப்பா தலையிலே கல்லை போட்டான். இப்போ அதனால அம்மா-அப்பா, பிள்ளை நடுவிலே பேச்சு வார்த்தையே இல்லை.

மதுரியா – அபிஜித் நட்பு ஒரு சுவாரசியமான கதை. அத்தை மாமா கிட்ட ஒட்டாம இருந்த பரத்-னால அவங்கப் பிள்ளைகள் அபிஜித், அபிராமி கூட விலகியிருக்க முடியலே. அபிராமிக்கு ஏறக்குறைய அவன் வயசு. அபிஜித் அவனை விட மூணு வயசு சின்னவன். எப்படியாவது மகனோடக் காதலை உடைச்சு அவனை மதுரியாவுக்கு கட்டிவைக்கணும்னு வசந்தா மதுரியா வீட்டுலே பேசி முடிச்சு, அவளும் உன்னை விரும்பறா-னு ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாங்க. அபிஜித் உண்மையிலேயே ரொம்ப குற்றவுணர்வா இருக்கும் போது எங்கே தன்னால பரத் கூட இருக்கற உறவு முடிஞ்சு போயிடுமோங்கற பயத்துலே இந்தியா வந்தான். மதுரியா தான் குற்றவுணர்ச்சிக்கு அவசியமே இல்லே-னு விளக்கிச் சொல்ல அவர்கள் நட்பு வளர்ந்தது. அபிஜித்தோட மனைவி-மோனிக் ஒரு ஜெர்மன் பெண். அவ பெரிசா அபிஜித்தோட உறவு வட்டத்துக்குள்ளே எல்லாம் சேர மாட்டா. அதனால இந்த விஷயம் அவளுக்கு ஒரு பொருட்டாவே இருக்கலை. அபிஜித்துக்கும் பரத் மூலமா ஓரளவு மதுரியாவோட விஷயம் தெரியும். மதுரியாவோட உணர்வுகளை மதிச்சாலும், வெளிநாட்டு கலாச்சாரம் பிடிச்சு அங்கேயே வாழறவனுக்கு அது ஒரு விஷயமாவே படலே.

வசந்தா அவங்க திட்டம் பாழாகி, பையன் அழகா சுதாரிச்சதனால இன்னும் கோபமானாங்க. எல்லா அம்மாவையும் போல, என் பையனே இல்லை… என் முகத்துலேயே முழிக்காதே-னு சொல்லிட்டாங்க. ஒரு வருஷம் ஆகுது. கோபம் மட்டும் மாறலே. பையன் சாயங்காலம் பார்ட்டிக்கு வருவான்-னு அம்மா, அப்பா, அக்கா மூவரும் காலையிலே பூஜைக்கு மட்டும் வந்துட்டாங்க. அபிராமிக்கு அவ தம்பியை பார்க்கற ஆசையிலே அவ குடும்பத்தோட பார்ட்டிக்கு வருவா. அபிஜித்துக்கு அப்பா அம்மா பேசாதது வருத்தம் தான்னாலும் அவங்களை சமாதானம் செய்ய வழி தெரியாமல் அமைதியா இருந்தான். இவங்க எல்லாரும் வர, பார்ட்டி களைக்கட்டிச்சு. 

மதுரியாவுக்கும் ரொம்ப நாள் கழிச்சு அபிஜித்தை பார்த்ததுலே பேச நிறைய இருந்துச்சு. “ஹேய்… ரியா… சும்மா அதையே ஒளப்பாதே. நீ பி.ஜி ஏன் ஃபாரின்லே பண்ணலே?”-னு கேட்டான். “விளையாடறியா?விடுவாங்களா?”-னு கேட்டா மதுரியா. “ஹலோ… உன்னை செங்கல்பட்டுக்கு விடுவாங்கன்னா ஜப்பானுக்கும் விடுவாங்க.. இங்கே இருந்து என்ன பண்ணப் போறே? அப்படி அந்த ஆள்முகத்துலே என்ன இருக்கு?”-னு சலிப்பா கேட்டான் அபிஜித். “அப்படி சொல்லுங்க… நாங்களும் கேட்டாச்சு”-னு ஒத்து ஊதினா ரீனா, அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட். மதுரியா ஒரு பெருமூச்சு விடும் போது வேதமூர்த்தி அவர் குடும்பத்தோட உள்ளே நுழைஞ்சார்.

நல்ல அடர் நீல நிறத்துலே காலர் வைச்ச டி சர்ட், வெள்ளை ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ். ஷாம்பு போட்டு அலசின அலை அலையாய் பறக்கிற முடியோட ஆணழகனாய் இருந்தான் விதுரன். எப்போவும் போல அழுத்தமான உதடுகள் பிரிஞ்சு வசீகர சிரிப்பு உதிர்க்கும்போது, மதுரியாவோட இதயம் தாளம் தப்பித் துடிச்சுது. ஆனா அடக்கி வைச்சுப் பக்குவப் பட்ட மனசு ஓரளவுக்கு சொல்ற பேச்சை கேட்டுது. அதனால தாளம் தப்பின இதயத்துடிப்பை அவ தாளத்துக்கு கொண்டு வரவும் முடிஞ்சுது. 

“இவனை யார் கூப்பிட்டது? இவன் ஏன் வர்றான்?”-னு முகம் சுளிச்சா ரீனா. “ஓ… சார்தானா அந்த நல்ல மனுஷன்?”-னு ஏளனமா கேட்டான் அபிஜித். “ஹெய்.. கய்ஸ்… வேதமூர்த்தி அங்கிளுக்கு அட்லீஸ்ட் மரியாதை குடுங்க… ஹீ டிசர்வ்ஸ் ரெஸ்பெக்ட்… டோண்ட் பீ மீன்.. ப்ளீஸ்”-னு சொல்லிட்டு நகர்ந்தா. “இவளை திருத்தவே முடியாது”-னு தலையிலே அடிச்சுட்டு போனா ரீனா. ஆனா அபிஜித் தான் விதுரனோட முகத்துலே வித்தியாசமான ரியேக்‌ஷனை கவனிச்சான்.

வேதமூர்த்தியோட உள்ளே வர்றப்போவே விதுரனோட கண்கள் மதுரியாவைத்தான் தேடி அலைஞ்சுது. நேரா பார்ட்டி நடக்கிற இடத்துக்குப் போய் பரத், ஆனந்தியா, நிகேஷ் எல்லாரையும் பார்த்தப்புறம் கூட அவ கண்ணுலே படலேன்னதும் வெளிப் படையாவே தேடினான். அப்போத்தான் அங்கே வந்தா. “வேதாப்பா, சங்கரிம்மா எல்லாரும் வாங்க”-னு வந்தவளை பார்த்து மூச்சு நின்னு திரும்பி வந்துச்சு விதுரனுக்கு. பாசி பச்சையிலே அனார்கலி டிரெஸ், அதே நிறத்துலே காதணி, கழுத்தணி, கையணி எல்லாமும். தலைக்கு ஃப்ரெஞ்ச் நாட், முகத்துக்கு தேவையான ஒப்பனை… கண்ணும் கன்னமும் மினுமினுக்க நின்னவ கிட்டேயிருந்து கண்ணை எடுக்கவே முடியலே விதுரனுக்கு. அவனோட முழுங்கற பார்வையிலே தன்னை மீறி கன்னம் சிவந்துச்சு மதுரியாவுக்கு. இந்த டிராமாவை எல்லாம் பார்த்த அபிஜித்துக்கு கண்ணு நாட்டியம் ஆடி நக்கலா சிரிக்கவும், “என்னடா லூசு மாதிரி சிரிக்கறே?”-னு பரத் கேட்டான். “ப்ரதர் ஏதோ முடிஞ்சுச்சுன்னு எல்லாம் சொன்னீங்களே? அதை நினைச்சு சிரிச்சேன்”னு அபிஜித் சொல்லவும், “ஆமா அதுக்கென்ன?”-னு பார்த்தான் பரத்.

“ப்ரோ… நீங்க நினைக்கற மாதிரி எதுவும் முடியலே-னு தோணுது. அந்த ஃபயர் இன்னும் அணையாம அப்படியே இருக்கு…. அது புரியாம லூசு மாதிரி ஏதோ பேசிட்டான் போல”-னு சிரிச்சுக்கிட்டே சொன்னான் அபிஜித். “ஏண்டா உளர்றே? அவனுக்கு வேறே பொண்ணு கூட நிச்சயமாக போகுதுடா”-னு அடிக்குரல்லே பேசினான் பரத். “யோவ்.. யார் கிட்ட என்ன பேச்சு பேசறே… வாய்ப்பேக் கிடையாது…. இவன் மனசுலே இன்னும் இருந்துக்கிட்டு ஆட்டிப் படைக்கறது ரியாதான்… என்ன பெட் கட்டறே?”-னு அடிச்சு சொன்னான் அபிஜித். “உயிரை எடுக்காதேடா.. ரெண்டுப் பேரும் கடந்துப் போயிட்டாங்க. சும்மா எதையாவது பேசி ரியாவையும் குழப்பாதே”-னு சீறிட்டு நகர்ந்தான் பரத். “ஏது… குழப்பறேனா? ப்ரூவ் பண்ணி காட்டறேன்”-னு நினைச்சுட்டான் அபிஜித். அப்படியே மதுரியா – விதுரனை கவனிக்க ஆரம்பிச்சான். “ஹாய்… மது எப்படி இருக்கே?”-னு அவ பக்கத்துலே போய் நின்னு பேசினான் விதுரன். “ஹாய்… விதுரன்.. ஆம் குட்… நீங்க?”-னு ரொம்ப சகஜமா கேட்டா மதுரியா.

விதுரனோட துடுக்கு புத்தி அவ தன்னை மிஸ் பண்றாளா-னு கேட்கணும், தெரிஞ்சுக்கணும்-னு நினைச்சுது. “அப்புறம்… லைஃப் எல்லாம் எப்படி போகுது?”-னு ஒரு மாதிரி கேட்டான். “ஓ… ரொம்ப நல்லா… கொஞ்சம் பிஸியாவே போகுது”-னு நிமிர்வோட சொன்னா. இதைப் பார்த்த அபிஜித் இதுதான் சமயம்-னு தன் திருவிளையாடலை ஆரம்பித்தான். “ரியா பேப்… இங்கே இருக்கியா? உன்னை எங்கே எல்லாம் தேடறது”-னு வந்தான். விதுரன் அசந்து தான் போனான். உயரமா, அழகா, வாட்டசாட்டமா இருக்கான். ‘பேப்’-னு வேறே கூப்பிடறான். யாரிவன்-னு யோசிச்சான். “இது.. யாரு?”-னு விதுரன் இழுக்கவும், “ஹாய் ப்ரோ… ஐ அம் அபிஜித்.. பரத்தோட கசின்”-னு தயக்கமே இல்லாம அறிமுகம் பண்ணிட்டு, “உன்னை தியா அண்ணி கூப்பிடறாங்க… வா சீக்கிரம்”-னு கையை பிடிச்சு இழுத்துட்டு போனான். விதுரன் மனசுலே, வயித்துலே அக்னி ஜ்வாலையை கொழுந்து விட்டு எரிய வைச்சுட்டான் அபிஜித்.

அதை மேலும் அதிகப்படுத்தினாங்க விதுரனோட அண்ணி கிருத்திகா. “ம்மா… சுபா ஆண்டி சொன்ன பையன் இவன் தான் போல.. நல்ல அழகா ஸ்மார்ட்டா இருக்கார் இல்லே? செம்ம ஜோடி”-னு ரசிச்சு சொன்னா. அவ நோக்கமும் அவனை வெறுப்பேத்தறது தான். “ஆமா கிருத்தி… பையன் வெளிநாடு போல”-னு வெள்ளந்தியா சொன்னாங்க சங்கரி. “அப்போ மேற்படிப்பு ரியாவுக்கு வெளிநாட்டுலே தான் போல. ரொம்ப லக்கி”-னு எண்ணெயை ஊத்திவிட்டு சத்தமே இல்லாம நகர்ந்தா கிருத்திகா.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top